மக்கள் அச்ச பட வேண்டாம் : எந்தச் சூழலையும் சமாளிக்க அரசு தயார் நிலையில் உள்ளது : அமைச்சர் தகவல்..!
சென்னையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "தமிழக முதல்வர் மிகுந்த முன்னெச்சரிக்கை எடுத்ததன் விளைவாக,மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்டதால் இந்த மழையில் இதுவரை எந்தவிதமான உயிர்ச்சேதமும் ஏற்படாத நிலையை இந்த அரசு உருவாக்கியிருக்கிறது.
கடந்த மாதம் பெய்த மழையுடன் சேர்த்து, தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை 43 சதவீதம் குறைவாக இருந்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இந்த அளவு 17 சதவீதமாக குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் 19 சதவீத மழை பெய்திருக்கிறது. தகுந்த மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் செய்துள்ளது. தேவையான நடவடிக்கைகள் மற்றும் அறிவிப்புகளை மாநில பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களை உஷார்படுத்தி, மழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளோம். நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில்தான் அதிகப்படியான மழை பெய்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அங்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" என்றார்.
அப்போது சிறப்பு நிவாரண முகாம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "மழைக்கு முன்பாகவே, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நிவாரண முகாம்களை ஏற்படுத்தி வைக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியிருந்தார். அதேபோல், கைவசம் மீட்புப் படையைச் சேர்ந்த 400 பேர் உள்ளனர். அவர்களை பல பகுதிகளில் பிரித்து தயார் நிலையில் வைத்திருக்கிறோம். எந்தச் சூழலையும் சமாளிக்கும் வகையில் அரசு நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. இதுவரை நிவாரண முகாம்களில் யாரும் தங்கவைக்கப்படவில்லை. ஒருவேளை அதுபோன்ற சூழல் ஏற்பட்டால், அதற்கான நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மழை பெய்து வரும் இடங்களைக் கண்காணிக்க கண்காணிப்பு அலுவலர்களை உடனடியாக அனுப்பி வருகிறோம்" என்று அவர் கூறினார்.