1. Home
  2. தமிழ்நாடு

பள்ளி மாணவிக்கு எமனாக மாறிய அறுவடை எந்திரம்..! கடத்தூர் அருகே சோகம்!!


தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே கேத்திரெட்டிப்பட்டி ஊராட்சி வேப்பிலைப்பட்டி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய விவசாய தோட்டத்தில் ராகி அறுவடை செய்யப்பட்டு எந்திரம் மூலம் பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்த பணியில் சக்திவேலின் சகோதரி மகள் சுபா (13) என்பவரும் ஈடுபட்டு இருந்தார். இவர் கேத்துரெட்டிப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் சுபாவின் தலை பகுதி சிக்கி கொண்டது.

இதில் அவருக்கு தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடத்தூர் போலீசார் சுபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக சிறுமியின் தந்தை கோவிந்தசாமி கடத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like