நாளை முழு சந்திர கிரகணம் : ரத்த நிறமாய் மாறும் நிலவு..!

சூரியனை பூமி சுற்றுகிறது. பூமியை நிலவு சுற்றுகிறது. இது மூன்றும் ஒரே நேர்க்கோட்டில்.. அதாவது முதலில் சூரியன் அடுத்து பூமி, கடைசியாக நிலவு வருவதைத்தான் நாம் சந்திர கிரகணம் என்று கூறுகிறோம். இந்த நேரத்தில் சூரியனின் ஒளி நிலவு மீது விழாது. ஆனால், பூமி மீது விழுந்து நிலவுக்கு எதிரொலிக்கும். இதனால் நிலவு ரத்த நிறத்தில சிவப்பாக தோன்றும். இதைத்தான் சந்திர கிரகணம் என்று கூறுகிறார்கள்.பாதி கிரகணம் நடக்கும் நேரத்தில் இப்படி தெரியாது. முழு கிரகணத்தின்போதுதான் இது தெரியும்.
சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நேரடியாக வரும்போது இந்நிகழ்வு நிகழ்கிறது. அப்படியான இந்த அற்புத நிகழ்வு நாளை மார்ச் 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது. சூரிய ஒளியில் உள்ள ஏழு நிறங்களில் முதலில் உள்ள வயலட், இண்டிகோ, புளூ உள்ளிட்ட நிறங்கள் குறைந்த அலை நீளம் கொண்டதால் சிதறடிக்கப்படுகிறது. அடுத்துள்ள நிறங்களில் சிவப்பு அதிக அலை நீளம் கொண்டதால், சிதறடிக்கப்படாமல் இருக்கும்.
சூரிய அஸ்தமனத்தின் போது சூரியன் எப்படி சிவப்பு நிறமாக காட்சி அளிக்கிறதோ... அதே கோட்பாடைக்கொண்டு தற்போது வர இருக்கும் சந்திரகிரகணமும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். சந்திரனை மறைத்திருக்கும் பூமி, தன் மீது விழும் ஒளியை வளிமண்டலம் மூலமாகச் சிதறடிக்கிறது. அவ்வாறு சிதறடிக்கப்படும் நிறங்களில் சிவப்பு அப்படியே தங்கி, நிலவின் மீது விழும். இதுவே ரத்த நிலவாக தெரிவதாக நாசா விளக்கமளித்துள்ளது. மார்ச் 14ஆம் தேதி நடைபெறும் இந்த முழு சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாது.
இந்தியாவில் தெரியாது. ஏனெனில் கிரகணம் நடக்கும்போது இந்தியாவில் பகல் பொழுதாக இருக்கும். அதனால்தான் இந்தியாவில் எங்கு இருந்தாலும் இதை பார்க்க முடியாது. ஆனால் அமெரிக்காவிலிருந்து பார்க்க முடியும். மார்ச் 13ம் தேதி இரவு 10.57 மணிக்கு இந்த கிரகணம் தொடங்கும். கொஞ்சம் கொஞ்சமாக நிலவு மறைந்துக்கொண்டே வந்து கடைசியில் அடுத்த நாள் அதிகாலை, அதாவது மார்ச் 14ம் தேதி அதிகாலை 2.31க்கு முழு சந்திர கிரகணம் தெரியும். அப்போது நிலவு சிவப்பாக இருக்கும்.
ஆனாலும், இந்திய வானியல் ஆர்வலர்கள் வரும் செப்டம்பர் 7, 8 தேதிகளில் முழு சந்திர கிரகணத்தை எதிர்பார்க்கலாம். இது, 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக நீண்ட முழு சந்திர கிரகணமாக இருக்கும். இது ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் நீடிக்கும். இக்கிரகணத்தை சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் தெளிவாகக் காணலாம்.