டாஸ்மாக் நிர்வாகம் சொன்ன பதிலால் வழக்கையே முடித்து வைத்த ஐகோர்ட்..!

தமிழகத்தில் மதுபான விற்பனையை அரசே தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் மேற்கொண்டு வருகிறது. பீர், பிராந்தி, விஸ்கி, ஒயின் உள்ளிட்ட பல்வேறு மது வகைகள் கண்ணாடி பாட்டிலில் குடி மகன்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் டெட்ரா பாக்கெட்டுகள் மூலம் மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்தது. ஆனால், இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
மதுவை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்காமல், மது விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் டெட்ரா பாக்கெட்டுகளை அறிமுகப்படுத்துவது தவறானது என பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எனினும், டெட்ரா பாக்கெட்டுகளில் மது விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் மதுபானங்களை டெட்ரா பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்கு மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த பிரதாப் என்பவர் மனுதாக்கல் செய்தார். அதில், “பாலிதீன், அலுமினியம், காகிதம் ஆகியவற்றின் கலவையால் உருவாக்கப்படும் டெட்ரா அட்டையில் மது பானங்களை அடைத்து விற்பனை செய்தால் அதனை குடிப்பவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படும்” என்று சுட்டிக்காட்டினார்.
மறு சுழற்சி செய்வதற்கான மையங்கள் போதுமான அளவில் இல்லை என்பதால் சுற்றுச் சூழல் பாதிப்பும் ஏற்படும் என்றும், மதுவை கடத்துபவர்களுக்கு இது சாதகமாக அமைந்துவிடும் எனவும் தனது மனுவில் குறிப்பிட்டார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா பூர்வாலா, நீதிபதி பரதச் சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானம் விற்பனை செய்வதால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு இன்னும் தமிழக அரசுக்கு தனது அறிக்கையை அளிக்கவில்லை. மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, அரசு குழு அமைத்துள்ள நிலையில் தற்போது எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என்று திட்ட வட்டமாக தெரிவித்தது. மேலும், நிபுணர் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், இந்த வழக்கினையும் முடித்துவைத்து உத்தரவு பிறப்பித்தனர். நிபுணர் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.