குட் நியூஸ்..! நாளை முதல் ஜனவரி 16-ந் தேதி வரை சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதம் மாலை அணிந்து சபரிமலைக்கு வந்து ஆசி பெறுவது வழக்கம். இதனால் சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். தமிழ்நாட்டில் இருந்தும் பல ஆயிரம் பேர் சபரிமலைக்கு செல்வார்கள். இதையொட்டி, பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது.
இந்த பேருந்துகள், நாளை முதல் ( 16-ந் தேதி முதல்) அடுத்தாண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளதாகவும், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி/ கடலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு அதிநவீன சொகுசு பேருந்துகள், குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.
அதே போல் டிசம்பர் மாதம் 27ந்தேதி (27.12.2023 முதல் 30.12.2023 மாலை 5 மணி வரை) கோயில் நடை சாத்தப்பட உள்ளதால், டிசம்பர் 26 முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.