உடனே விண்ணப்பீங்க..! பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சூப்பர் சான்ஸ்..!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அப்போது, துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார்.
அதில், சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி, ரூ.2 கோடி செலவில் 200 பிங்க் ஆட்டோ (Pink Auto) திட்டம் செயல்படுத்தப்படும். என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் புதிய முன்னெடுப்பாக இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில், 250 ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்கப்படவுள்ளன. இந்த ஆட்டோக்கள் பெண் ஓட்டுநர்கள் மூலமாக இயக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு பிங்க் ஆட்டோவிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவல் துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளன. எமர்ஜென்சி காலங்களின்போது புகார் பெறப்பட்டவுடன் போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளன. பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், சுயதொழில் செய்து பெண்கள் முன்னேறும் வகையில் ஊக்கப்படுத்தவும் இந்த பிங்க் ஆட்டோ திட்டம் பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
பிங்க் ஆட்டோ ஓட்டுவதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. 25 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். சென்னையில் குடியிருப்போராக இருக்க வேண்டும். சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட் ஆட்டோ வாங்க சென்னையைச் சேர்ந்த 250 பெண்களுக்கு தமிழக அரசு தலா 1 லட்சம் ரூபாயை வழங்கவுள்ளது. ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி தொகைக்கு வங்கிகளுடன் இணைக்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் தகுதியான பெண்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலர், 8 ஆவது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை 1 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். நம்பர் 23 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது