இல்லத்தரசிகள் ஷாக்..! பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு..!

பால் கொள்முதல் மற்றும் மூலப் பொருட்கள் விலை உயர்வு எனக்கூறி, ஒவ்வொரு முறையும் பால், தயிர் விற்பனை விலையை தனியார் நிறுவனங்கள் உயர்த்துகின்றன. கடந்த டிசம்பரில் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ. 2, நடப்பாண்டு பிப்ரவரியில் லிட்டருக்கு ரூ. 2; தயிர் விற்பனை விலை கிலோவிற்கு ரூ. 5 வரை ஆந்திராவைச் சேர்ந்த முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் உயர்த்தின.
ஹட்சன் நிறுவனம் நாளை (14.03.2025) முதல், ஆரோக்யா பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு ரூ. 4, தயிருக்கு கிலோவுக்கு ரூ. 3 வரை உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வழங்கியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் நிறைகொழுப்பு பாலின் விற்பனை விலை லிட்டர் ரூ. 80 வரை தொட்டிருக்கிறது.
ஒரு மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக பால், தயிர் விற்பனை விலையை உயர்த்தும் ஹட்சன் நிறுவனத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளது. இந்த விற்பனை விலை உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.