இமாலய விலைக்கு ஏலம் போன பிராட்மேனின் ‘பேகி பச்சை ’ தொப்பி!
டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்று 76 ஆண்டுகளாகியும், மறைந்து 22 ஆண்டுகளாகியும் டெஸ்ட் போட்டிகளில் யாரும் நெருங்க முடியாத சாதனையாளராகத் திகழ்பவர்தான் ஆஸ்திரேலியாவின் லெஜெண்ட் `டான் பிராட்மேன் (Don Bradman)'. டெஸ்டில் யாரும் நெருங்க முடியாத அளவுக்கு 99.94 ஆவரேஜ் வைத்திருக்கும் டான் பிராட்மேன், 1928 முதல் 1948 வரை தனது ஒட்டுமொத்த சர்வதேச கரியரில் மொத்தமாக 52 போட்டிகளில் 80 இன்னிங்ஸ்களில் 12 இரட்டைச் சதங்கள், 29 சதங்களுடன் 6,996 ரன்கள் குவித்திருக்கிறார். முதல்தர போட்டிகளில் 117 சதங்கள் அடித்திருக்கிறார்.
டெஸ்டில் அவரின் 99.94 ஆவரேஜை யாராலும் நினைத்துகூட பார்க்க முடியாது. இதுவுமே கூட, 1948-ல் இங்கிலாந்துக்கு எதிராக அவர் ஆடிய கடைசி சர்வதேச போட்டியில் 4 அடித்தால் ஆவரேஜில் சதம் என்ற அரிய சாதனை அவருக்காக காத்திருந்த வேளையில், முதல் இன்னிங்ஸில் அவர் டக் அவுட்டானதால் 99.94 ஆவரேஜுடன் நின்றது.
அந்தப் போட்டியில், முதலில் பேட் செய்து 52 ரன்களுக்கு ஆல் அவுட்டான இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அடித்த 389 ரன்களைத் தாண்ட முடியாமல் இரண்டாவது இன்னிங்ஸில் 188-க்கு ஆல் அவுட்டானதால் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அதனால், இரண்டாவது இன்னிங்ஸில் ஆடமுடியாமல் போன டான் பிராட்மேன், தனது கரியரின் கடைசி சர்வதேச போட்டியைப் பூஜ்ஜியத்தில் முடித்தார். அவர் விளையாடிய காலத்தில் சர்வதேச ஒருநாள் போட்டி அறிமுகமாகவேயில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

இப்படிப்பட்ட சாதனை வீரர் அணிந்து விளையாடிய பச்சை நிற தொப்பி தற்போது ரூ. 2.6 கோடிக்கு ஏலம் போயிருக்கிறது. அதுவும், இந்தியாவுக்கெதிரான போட்டியில் அவர் பயன்படுத்திய தொப்பி. சுதந்திரமடைந்த பிறகு இந்திய அணி மேற்கொண்ட முதல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் அது. டான் பிராட்மேனுக்கு அதுதான் தனது சொந்த மண்ணில் கடைசி டெஸ்ட் தொடர். அந்தத் தொடரில், ஆறு இன்னிங்ஸில் 178.75 ஆவரேஜில் 715 ரன்கள் குவித்தார்.
அந்தத் தொப்பி, அப்போதைய இந்திய அணியின் மேனேஜருக்கு டான் பிராட்மேன் பரிசளித்தது என்று கூறப்படுகிறது. பின்னர், அந்தத் தொப்பி ஒருவரால் சேகரிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவில் டான் பிராட்மேன் மியூசியத்தில் வைக்கப்பட்டது. இந்த நிலையில், அந்தத் தொப்பி செவ்வாயன்று (டிசம்பர் 3) சிட்னியில் ஏலம் விடப்பட்டது. வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த ஏலத்தில் தொப்பியின் விலை 1,60,000 அமெரிக்க டாலரிலிருந்து 2,50,000 டாலருக்குச் சென்றது. அதாவது, ரூ. 2.1 கோடிக்கு ஏலம் போனது. இறுதியில், வாங்குபவரின் இறுதிக் கட்டணம் உட்பட தொப்பியின் விலை 3,10,000 டாலரை (ரூ. 2.6 கோடி) எட்டியது.
.png)