1. Home
  2. தமிழ்நாடு

இன்று கர்நாடக முதல்வராக பதவியேற்கிறார் சித்தராமையா..!!


கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வர் பதவிக்கு போட்டி நிலவி வந்த நிலையில் கர்நாடக முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் ஒருமனதாக தேர்வாகியுள்ளனர். இதையடுத்து பெங்களூருவில் இன்று (மே 20) பிற்பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

முன்னதாக முதல்வர், துணை முதல்வர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அமைச்சர்களை தேர்வு செய்ய சித்தராமையாவும் டி.கே.சிவகுமாரும் நேற்று தில்லி சென்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அமைச்சரவை தேர்வு குறித்து அவர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

2-வது முறையாக கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சித்தராமையா 1948-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி மைசூரு மாவட்டம் சித்தராமனகுந்தி கிராமத்தில் விவசாயியான சித்தராமே கவுடா- போரம்மா தம்பதியின் 2-வது மகனாக பிறந்தார். மைசூரு பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. முடித்த அவர், அதே பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். சட்டம் படித்த பிறகு சிறிது காலம் அவர் வக்கீல் தொழில் செய்தார். மைசூருவில் உள்ள வித்யாவா்த்தக கல்லூரியில் அவர் சிறிது காலம் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றினார்.

சித்தராமையாவின் மனைவி பெயர் பார்வதி, அவருக்கு 2 மகன்கள். ஒருவர் ராகேஷ், இன்னொருவர் டாக்டர் யதீந்திரா. அவர் முன்பு முதல்வராக இருந்தபோது, தனது அரசியல் வாரிசாக கருதிய நிலையில் ராகேஷ் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதனால் டாக்டரான யதீந்திரா அரசியலுக்கு வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வருணா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் யதீந்திரா போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பணியாற்றினார். அவர் தற்போது தனது தந்தைக்காக வருணா தொகுதியை விட்டுக்கொடுத்தார்.

சித்தராமையா தனது வீட்டில் வறுமை காரணமாக தனது தொடக்க கல்வியை ஆரம்பத்திலேயே பாதியில் நிறுத்தினார். குருபா சமூகத்தை சேர்ந்த அவர் சொந்த கிராமத்தில் ஆடு, மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். கல்வி மீதான அவரது ஆர்வத்தை கண்ட உள்ளூர் பள்ளி ஆசிரியர்கள் அவரை அழைத்து வந்து நேரடியாக 5-வது வகுப்பில் சேர்த்து கொண்டனர். விவசாய குடும்பத்தை சேர்ந்த அவர் முதல் முறையாக 1978-ம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். மைசூரு தாலுகா வளர்ச்சி கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1989-ம் ஆண்டு எஸ்.ஆர்.பொம்மை ஆட்சியில் போக்குவரத்து துறை மந்திரியாக பணியாற்றிய அவர், 1991-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கொப்பல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து 1994-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மீண்டும் சாமுண்டீஸ்வரி தொகுதியில் ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி போட்டியிட்டு பாதாமியில் மட்டும் வெற்றி பெற்றார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் அவர் படுதோல்வி அடைந்தார். 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி நிர்வாகத்தை நடத்தியும் சொந்த தொகுதியில் தோல்வி அடைந்தது அவரது மனதை வெகுவாக பாதித்தது. இதை அவ்வப்போது வெளிப்படுத்தினார். ராகு, கேது, சனி என எல்லாம் சேர்ந்து தன்னை தோற்கடித்துவிட்டதாக எதிர்க்கட்சிகளை குறை கூறினார்.

ஆட்சியை இழந்த பிறகு சித்தராமையா 2-வது முறையாக எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த பதவியில் அவர் 5 ஆண்டுகள் பணியாற்றினார். இந்த நிலையில் தற்போது கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதால் 2-வது முறையாக கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார்.

Trending News

Latest News

You May Like