இது தெரியுமா ? இது தான் நாட்டின் முதல் சைவ உணவு ரயில்!

இந்தியாவில் அசைவ உணவுப் பொருட்களை வழங்காத ஒரு ரயில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த ரயில் முற்றிலும் சைவ உணவு ரயில். டெல்லியிலிருந்து கத்ராவுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சைவ உணவை மட்டுமே வழங்கும் இந்தியாவின் முதல் ரயில் ஆகும். இந்த ரயிலில் வழங்கப்படும் உணவில் முட்டை, இறைச்சி அல்லது எந்த அசைவ பொருட்களுக்கும் இடம் இல்லை. மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பயணிக்கும் வகையில் இந்த ரயில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
புது தில்லி-கத்ரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சைவ உணவை வழங்குவது மட்டுமல்லாமல், பயணிகள் அசைவ உணவுகள் அல்லது சிற்றுண்டிகளைக் கொண்டு வருவதையும் தடை செய்கிறது. இந்த ரயிலுக்கு 'சாத்விக்' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, இது அதன் தனித்துவத்தை மேலும் கூட்டுகிறது.
இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி (IRCTC) மற்றும் 'சாத்விக் கவுன்சில் ஆஃப் இந்தியா' இடையேயான ஒப்பந்தத்தின்படி, இது முற்றிலும் சைவ ரயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் சமையலறையில் அசைவ உணவு கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. பணியாளர்கள் சைவ உணவுகளை மட்டுமே சமைக்கிறார்கள்.
பக்தர்கள் தூய்மையான சைவ உணவைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, மத வழித்தடங்களில் இயங்கும் பல ரயில்கள் ஐ.ஆர்.சி.டி.சி.யின் 'சாத்விக் சான்றிதழ்' பெற்று வருகின்றன. 2021ஆம் ஆண்டில், இந்திய சாத்விக் கவுன்சில், ஐ.ஆர்.சி.டி.சி உடன் இணைந்து, யாத்ரிகர்களுக்கு ரயில் பயணங்களின்போது முற்றிலும் தூய்மையான சைவ உணவை வழங்க இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளது.