அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம்... புது அப்டேட்..!
தமிழ்நாட்டில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 1,545 பள்ளிகளில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 1.14 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்தத் திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்ததால், இது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன் மூலமாக ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான 18 லட்சம் மாணவர்கள் பயனடைவர் எனவும் தெரிவிக்கப்பட்டது. வரும் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்புக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், அனைத்துப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்க சாத்தியம் இல்லை என கூறப்படுகிறது.
எனவே, மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் கணக்கெடுப்பு நடத்தி, ஒப்பந்தம் வழங்குவதற்காக ஒரு மாத காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், ஜூலை மாதத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்க வாய்ப்பு உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.