1. Home
  2. தமிழ்நாடு

பொங்கட்டும் புதுப்பொங்கல்..!!

பொங்கட்டும் புதுப்பொங்கல்..!!


தமிழனின் பாரம்பரிய பண்டிகை என்றால் அது தைப் பொங்கல் மட்டும்தான். தன் வாழ்வுக்கு உறுதுணையாக நிற்கும், மழை வழங்கும் இந்திரன், ஒளி கொடுக்கும் சூரியன், தன் உழவுக்கு துணையாக இருக்கும் கால்நடை ஆகியவற்றுக்கு நன்றி சொல்லும் விழாதான் பொங்கல். பொங்கல் பண்டிகையின் பாரம்பரியத்தை அறிவோம். பொங்கலைப் போற்றுவோம்...

பொங்கட்டும் புதுப்பொங்கல்

ஆண்டு முழுவதும் தனது நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த பாடுபட்டு உழைக்கும் விவசாயி, தனக்கு உறுதுணையாக இருந்த இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நாளே பொங்கல் பண்டிகை. அந்த போகத்தில் விளைந்த புதுநெல்லை குத்தி எடுத்த பச்சரியை, புதுப்பானையில் பொங்கலிட்டு, தனது தோட்டத்தில் விளைந்த இஞ்சி, மஞ்சள், கிழங்கு வகைகளை கொண்டு புதுப் பானையை அலங்கரித்து கரும்புடன் படையல் இடுவதே பொங்கல் திருநாள். புத்தரிசி, வெல்லம், பால், நெய், முந்திரி போன்றவைகளை கொண்டு பொங்கல் வைக்க, பொங்கல் பொங்கி வரும் போது ‘பொங்கலோ பொங்கல்' என்று குடும்பத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி ததும்ப மனதில் உற்சாகம் பொங்க கூறி மகிழ்வர்.

அறுவடை செய்து வந்த புது நெல் பச்சரிசியை புதுப்பானையில் சூரியனுக்காக வீட்டின் வாசலில் பொங்கல் வைப்பது எல்லா விதயோகங்களையும் நமக்கு தரவல்லது.

பொங்கலுடன் வடை, பாயசம், 21 வகையான காய்கறிகளை கொண்டு சமைத்து, சூரியபகவானுக்கு படைக்க வேண்டும். சூரியபகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை உச்சரித்து வணங்கினால் இரட்டிப்பு பலன்.

கால்நடைகளின் திருநாள் – மாட்டுப்பொங்கல்

பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படும் மாட்டுப் பொங்கல், தைப்பொங்கல் நாளின் மறுநாள் கொண்டாடப்படுகிறது. தங்களின் உழவுக்கும், தொழிலுக்கும் தோல் கொடுத்து நிற்கும் பசுவுக்கு நன்றி செலுத்தவே இந்த நன்னாள். மேலும் பசுக்களில் எல்லாத் தேவர்களும் உறைந்திருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

ஆண்டு முழுவதும் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல், உழைக்கும் மாட்டை நன்றாக குளிப்பாட்டி, அதன் கொம்புகளுக்கு வர்ணம் பூசி, அதன் காலில் சலங்கை மாட்டி அழகுபடுத்துவார்கள். மாட்டுப்பொங்கல் அன்று மாடு கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து ,கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத்தில் தங்களது தோட்டம் மற்றும் காடுகளில் விளைந்த பயிர் மற்றும் தேங்காய், பூ, பழம் வைத்து படைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டி, பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

மாடுகளுக்கு மாலை அணிவித்து வஸ்திரம் சாற்றி பூஜை செய்து பிறகு, பசுமாடு அணிந்திருந்த மலர் மாலையை வீட்டின் வாசற்படியில் கட்டினால், அந்த வீட்டில் இருக்கும் தோஷங்கள் நீங்கும். சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடக்கும் என்பது ஐதீகம்.

உறவுகளைக் கொண்டாடும் காணும் பொங்கல்

பொங்கல் கொண்டாட்டத்தின் கடைசி நாள் காணும் பொங்கல். இது நமது வாழ்விற்கு வண்ணங்களை சேர்த்து உயிர்ப்புடன் இருக்க வைக்கும் உறவினர்களையும் நண்பர்களையும் காணும் நாளாகும்.இன்றும் கிராமங்களில் தங்கள் எஜமானர்களை, அவர்களிடம் பணியாற்றும் விவசாயத் தொழிலாளர்கள், காணும் பொங்கலன்று கண்டு பரிசு பெறுவது வழக்கம்.

பொங்கல் திருநாளன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரசித்தம் வாய்ந்தது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் வாய்ந்தது.நெஞ்சில் உறுதி கொண்ட கட்டிளம் காளையர்கள் தங்கள் வீரத்தையும் உடலுறுதியையும் காட்டும் நிகழ்வில் அவர்களுக்கு பரிசாக பொன்னும் பொருளும் வழங்கப்படும். மாட்டுக்கும் மனிதனுக்குமான பந்தம் அங்கே வெளிப்படும்.

இந்தப் பொங்கல் திருநாளில் நம் இல்லங்களிலும் உள்ளங்களிலும் வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் பொங்கவேண்டும். சூரிய பகவானின் கருணையால் எல்லா வளங்களையும் பெற்றிடுவோம்.

Trending News

Latest News

You May Like