கேதர் ஜாதவை அணியில் சேர்காதது ஏன்: எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டியில் தான் தேர்வு ஆகாததற்கு காரணம் தெரியவில்லை என்று கேட்ட கேதர் ஜாதவ்வுக்கு, அவரது உடல் தகுதி தான் காரணம் என்று தேர்வுக் குழு தலைவர் பதில் அளித்துள்ளார்.
 | 

கேதர் ஜாதவை அணியில் சேர்காதது ஏன்: எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்

தன்னை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஏன் சேர்க்கவில்லை என்று கேள்வி எழுப்பிய கேதர் ஜாதவ்வுக்கு எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி  2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் 2 டெஸ்டிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என தொடரை கைப்பற்றி அசத்தியது. 

இதனையடுத்து தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வென்றது. பின்னர் விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டி டிரா ஆனது.

இந்நிலையில் நேற்று கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. இந்த அணியில் முகமது ஷமி  நீக்கப்பட்டார். மேலும் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  ஆனால் அணியில் நிச்சயம் இடம் பெறுவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் புறக்கணிக்கப்பட்டார். 

இதுகுறித்து ஜாதவ் கூறுகையில், "ஒருநாள் தொடருக்கு ஏன்  என்னை தேர்வு செய்யவில்லை என தெரியவில்லை. தேர்வுக் குழுவின் திட்டம் என்ன என தெரியவில்லை. அவர்களிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை. இப்போதைக்கு ரஞ்சிக்கோப்பையில் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளேன். அனைத்து வித உடல் தகுதியிலும் தேர்வாகி தான் தியோதர் போட்டியில் ஆடுகிறேன். காயத்தில் இருந்து தற்போது முழுமையாக மீண்டுவிட்டேன்" என்றார். 

ஜாதவ்வின் இந்த கேள்வி குறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறும்போது, "ஜாதவ்வின் உடல் தகுதி காரணமாகவே இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. அவர் அணிக்கு திரும்பும் போதெல்லாம் காயம் காரணமாக வெளியேறுகிறார். ஆசிய கோப்பை தொடரில் இணைந்த அவர் இதே காரணத்திற்காக வெளியேறினார். அவர் உடல் தகுதியை சோதிக்க போதுமான போட்டிகளில் அவர்  விளையாட வேண்டும். தியோதர் கோப்பை தொடரில் அவர் இன்னும் சில போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் இருக்கும் அணி தோல்வி அடைந்ததால் அவரால் விளையாட முடியவில்லை"என்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP