1. Home
  2. விளையாட்டு

இந்தியாவை வீழ்த்தி இலங்கை திரில் வெற்றி!!

இந்தியாவை வீழ்த்தி இலங்கை திரில் வெற்றி!!

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் செப்டம்பர் 11-ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் லீக் போட்டிகள் கடந்த 2-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் 3-ம் தேதி முதல் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் குரூப் ஏ பிரிவிலும், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

சூப்பர் 4 சுற்றில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக போராடி தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் இந்திய அணி எஞ்சிய இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இன்று இலங்கை அணியை இந்திய அணி சந்தித்தது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் களம் இறங்கினர். இரண்டாவது ஓவரில் ராகுல், 6 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

India

அதன் பின்னர் கேப்டன் ரோகித் மற்றும் சூர்யகுமார் யாதவ் இணைந்து அணியை மீட்டனர். சிறப்பாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். இருவரும் 58 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தனர். ரோகித் 72 ரன்களிலும், சூர்யகுமார் 34 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அதன் பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா 17 ரன்களில் வெளியேறினார். ஹூடா 3 ரன்களிலும், பந்த் 17 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா மற்றும் குசல் மெண்டிஸ் களமிறங்கினர். சிறப்பான தொடக்கம் அளித்த இரு வீரர்களும் அரைசதம் கடந்தனர். நிசங்கா 52 ரன்னில் வெளியேறினார். அடுத்துவந்த அசலங்கா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய குனதிலகா 1 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய மெண்டிஸ் 57 ரன்கள் குவித்தார்.

Srilanka

இறுதியில், 19.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி 174 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை திரில் வெற்றி பெற்றது. கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ராஜபக்சா 17 பந்துகளில் 25 ரன்களும், சனகா 18 பந்துகளில் 33 ரன்கள் குவித்தும் இலங்கை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தினர்.

இந்த வெற்றியின் மூலம் ஆசியகோப்பை டி20 தொடரில் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இலங்கைக்கு அதிகரித்துள்ளது. அதேவேளை, இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு மங்கியுள்ளது.

Trending News

Latest News

You May Like