1. Home
  2. விளையாட்டு

யோகா என்னும் மந்திரச் சொல்


உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவுமாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே
- திருமூலர்

இந்தியா உலகிற்கு தந்த மாபெரும் பொக்கிஷம் யோகக்கலை. நம்முடைய மூதாதையர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்க்கையை மேம்படுத்தும் வழிமுறைகளை சொல்லிவைத்த கலை யோகக்கலை.
நம்மை வழி நடத்தும் , உடலினை உறுதி செய்யும் , மனதினை அமைதி படுத்தும் யோகக்கலை பயிற்சி ஆரம்பிக்கும் முன்பு உடலை பக்குவப் படுத்தும் வழிமுறைகள் மிக அவசியம்.

உடல் நலனிற்கு நன்மை செய்யும் ஓசோன் வாயுக்களால் நிரம்பி ததும்பும் அதிகாலைப் பொழுது யோகாவை கற்றுக்கொள்ள , பயிற்சி மேற்கொள்ள மிக அற்புதமான காலம்.தற்போதைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் ஆரோக்கியமான வாழ்க்கை என்பது நம் முன்னே இருக்கும் மிகப்பெரிய சவால்.

தினந்தோறும் காலை எழுந்தவுடன், பல் துலக்குவதை நாம் பழகிக்கொண்டது போல் உடம்பின் விடியலுக்காக. யோகாவை தீர்மானித்துக்கொள்ளவேண்டும்.

தினம் தினம் யோகா என்றால் மிரளவோ , அச்சப்படவோ தேவையில்லை. யோகா அடிபப்டையில் மிக எளிய கலை. உடலையும் உள்ளத்தையும் ஒருங்கிணைக்கும் அற்புதமே யோகா. “யோகம் செய்வதற்கும் யோகம் வேண்டும்” என்கிறார் யோகா சாஸ்திரத்தை உருவாக்கிய பதஞ்சலி முனிவர்.
கண்களை மூடி உடலையும் உள்ளத்தையும் ஒருமுகப்படுத்துவதே யோகம் . ஒருமுகப்படுத்தும் முயற்சியாக நமது உடல் ஒரு குறிப்பிட்ட நிலையில் அமர்வது தான் யோகாசனம்.

உடலை இறுக்கமாக வைத்துக்கொள்ளாமல் ,இலகுவாக வைத்துக்கொள்ளுதல் அவசியம். யோகாசனம் செய்யும் போது , நம் உடலை உறுத்தும் எந்த ஒரு பொருளும் இருக்கக் கூடாது. பெல்ட், கை கடிகாரம் போன்றவற்றை பயிற்சியின் போது தவிர்க்கலாம். ஆசனங்கள் செய்யும் போது நமக்கும் தரைக்கும் இடையே ஒரு விரிப்போ, பாயோ இருந்தால் நல்லது. யோகா பயிற்சிகள் செய்யும்போது நம்மில் இருந்து வெளிப்படும் நேர்மறை அலைகளை நம்முள் தக்க வைத்துக் கொள்ளவே இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது.
யோகக்கலையில் முக்கியமானது மூச்சுப்பயிற்சி , நமது மூச்சுக் காற்று உள்ளிழுப்பதையும் வெளியில் விடுவதையும் உணரும் நிமிடத்தில் நாம் நம் உடலின் மீதான கட்டுப்பாட்டை கொண்டு வர ஆரம்பித்து விட்டோம் என்பது உறுதியாகிறது.

யோகா, மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் ஏராளமானப் பலன்களை அள்ளித்தருகிறது. மன அமைதி, ஆழ்ந்த தூக்கம், உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்புச் சக்தி, மனதை ஒருநிலைப்படுத்துதல் என இது தரும் பலன்கள் அநேகம்.
இயந்திரத்தனமான வாழ்க்கை சூழலை லகுவாக்கி நமது நாளை அழகாக்கும்; அலைபாயும் மனதிற்கு அமைதியைத் தரும். இதனால் வாழ்வில் எத்தகைய சூழலும் நம்மை பாதிக்காதவாறு நம் மனம் பக்குவமடையும். இதனால் உடல் , மனம் இரண்டும் உற்சாகத்தையும் புத்துணர்வையும் அடையும்.

பிரச்சனைகளால் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் யோக பயிற்சி செய்வதன் மூலம் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம். உடலில் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து,மருந்து, மாத்திரைகள் இன்றி உடல்வலியைச் சரிசெய்ய உதவும்.நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதால் , வாழ்நாளை நீட்டிப்பதோடு முதுமையைத் தடுத்து மனமும் உடலும் என்றும் இளமையோடு இருக்க உதவும்.
வாழ்க்கையில் வெற்றி பெற முயற்சிகள் முக்கியம். வாழ்க்கையின் வெற்றி தோல்வி இரண்டுக்குமே அடிப்படை அஸ்திவாரமாக இருப்பது நமது உடலும் உள்ளமும் . இந்த யாரண்டும் சீராக செயல்பட எளிய வழி யோகா. சிறு ஆசனங்களில் ஆரம்பித்து பெரிய சாதனைகளை அடைய , நல்வாழ்வை உறுதிப்படுத்த யோகக்கலையை கற்போம்.

newstm.in

Trending News

Latest News

You May Like