பதஞ்சலி முனி தந்த பொக்கிஷம்

இன்று ஆன்மீக ரீதியாகவும் இயற்கை மருத்துவம் ரீதியாகவும் பலராலும் உச்சரிக்கப்படும் வார்த்தையாகி விட்டது 'யோகா'.
 | 

பதஞ்சலி முனி தந்த பொக்கிஷம்


இன்று ஆன்மீக ரீதியாகவும் இயற்கை மருத்துவம் ரீதியாகவும் பலராலும் உச்சரிக்கப்படும் வார்த்தையாகி விட்டது 'யோகா'. 
யோகா எங்கு எப்போது யாரால் உருவானது என்ற தெளிவான குறிப்புகள் இல்லாத போதும், சுமார் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை சிந்து  சமவெளி நாகரிக கல்வெட்டில்  இருந்து தெரிந்துக் கொள்ள முடிகிறது.

நம் தமிழ்நாட்டின்  அகத்தியர்,திருமூலர்,பதஞ்சலி முதலான பதினெட்டு சித்தர்கள் எழுதிய நூல்களில் யோகாசனங்களை பற்றிய செய்திகளை காணலாம்.இவர்களுள் பதஞ்சலி முனிவரின்  யோக சூத்திரம் தான், யோகக் கலையைப் பற்றிய தெளிவை  இன்று நமக்கு  தந்திருக்கிறது.15 ஆம் நூற்றாண்டில் வந்த யோகி ஸ்வாத்மராமா என்பவர் ஹத யோகா பற்றிய நூலை எழுதினார் .19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சுவாமி விவேகானந்தர் மேற்கு நாடுகளில் ராஜ யோகம் பற்றி விளக்கியதை வரலாற்றில் தெரிந்துக் கொள்ள முடிகிறது.

பின் வந்த 1920- களில் மைசூர் மாகாணத்தை சேர்ந்த திருமலை கிருஷ்ணமாச்சார்யா எனும் யோக நிபுணரின்   இயற்கை உணவு +மருந்து + யோகாசனங்கள் என்னும் முறையே இன்று பல்வேறு யோக ஆசிரியர்களாலும் கடைபிடிக்கப்படுகின்றது.

இன்றும் நம்மிடையே சூட்சமமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம் மூதாதையரான தமிழ்ச்சித்தர்கள் ஒவ்வொரு விலங்குகளும், பறவைகளும் மற்றும் பிற உயிரினங்களும் தங்களுக்கே உரிய இருக்கை நிலைகளை (Posture ) கொண்டு இயங்குவதை கண்டனர்.

தாங்கள்  கவனித்து பட்டியலிட்ட, ஒவ்வொன்றிலும் தங்கள் உடலை அமைத்து பார்த்து,உடல் நலம் மேம்பட்டதை தொடர்ந்து, இதனையே இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகளாக வடிவமைத்தனர். இவை தான் இன்று  யோகாசனம் மற்றும் பிரணாயாமம்  எனப்படுகின்றன. இந்த வகையில் மயிலை அடிப்படையாக கொண்டு அமையும் ஆசனம் மயூராசனம் ஆகும்.அதே போன்று 

மகராசனம் (மகரம்–முதலை),
சலபாசனம் (சலபம் – வெட்டுக்கிளி),
சசாங்காசனம் ( சசாங்கம் – முயல் ),
மச்சாசனம் ( மச்சம் – மீன் ),
கூர்மாசனம் ( கூர்மம் -ஆமை ),
புஜங்காசனம் ( புஜங்கம் – பாம்பு ),
பாகாசனம் ( பாக – கொக்கு ),
பேகாசனம் ( பேக – தவளை ),
குக்கூட்டாசனம் ( குக்கூடம் – சேவல் ),
சிம்மாசனம் ( சிம்மம் – சிங்கம் )
உஷ்ட்ராசனம் ( உஷ்ட்ரா – ஒட்டகம் ),
கபோடாசனம் ( கபோடா- புறா )

மரம் மற்றும் மலர்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்கள் :

பத்மாசனம் ( பத்மா – தாமரை மலர் ),
விருட்சாசனம் ( விருட்சம் - மரம் )
அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை அடிப்படையாகக் கொண்ட ஆசனங்கள்: 
நாவாசனம் ( நாவா – படகு ),
தனுராசனம் ( தனுரா-வில் ),
ஹலாசனம் ( ஹலா- கலப்பை ),
துலாசனம் ( துலா – தராசு )
சக்கராசனம் ( சக்கரா- சக்கரம் ),
தண்டாசனம் ( தண்டா – கம்பு,தடி )

இந்த  ஆசனங்களை பயிற்சி செய்வதால், நீண்ட உடல் நலன் கிடைக்கப் பெற்று ஆரோக்கியமாக வாழ முடியும் என்று நிரூபித்துள்ளனர். இன்று  மேலை  நாடுகளிலும்  யோகாவை பற்றிய விழிப்புணர்வு  அதிகரித்து வருகின்றது.
இன்றைய நிலையில் நமது வாழ்வில்,  இயந்திரத்தனம் அதிகமாகி ,உடலுழைப்பு குறைந்து நோய்களுக்கு உட்பட்டு, பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி வருகின்றோம். இவற்றுக்கெல்லாம் ஒரே  தீர்வாக நம் முன்னோர்கள் வாழ்ந்துக்  காட்டிய   வழியில், நாமும் யோகாவை நமது தினசரி வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
நோயற்ற  வாழ்வே குறைவற்ற செல்வம்.

 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP