Logo

மோஜோ 14 | செல்பேசி இதழியல் செயல்முறை திட்டம்

செல்பேசி இதழியல் என்பது வளர்ந்து வரும் துறையாக இருப்பதால் அதற்கான விதிமுறைகள் இன்னமும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.
 | 

மோஜோ 14 | செல்பேசி இதழியல் செயல்முறை திட்டம்

செல்பேசி இதழியல் எல்லையில்லா சாத்தியங்களை கொண்டது, எல்லோருக்கும் எளிதானது என்றாலும் நடைமுறையில் இது அத்தனை சுலபம் அல்ல. அதிலும் செல்பேசி சார்ந்த செய்தி சேகரிப்பு - வெளியீட்டில் பழக்கம் இல்லாத ஆரம்ப கட்டத்தில் இது கடினமானதாகவே இருக்கலாம். தற்செயலாக ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை எடுத்து பயன்படுத்திக்கொள்வது என்பது வேறு. அதையே முறையாக செய்தி சேகரிப்பு நோக்கில் மேற்கொள்வது என்பது வேறு.
 
செல்பேசி இதழியலால் ஈர்க்கப்படும் சாமானியர்களுக்கும் சரி, இத்துறையின் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் தொழில்முறை இதழாளர்களுக்கும் சரி, இது மிகவும் சவாலானது. செல்பேசியில் எடுக்கப்படும் படம் ஒளிபரப்பு தரத்தில் இல்லாமல், அமெச்சூர்தனமாக அமைய இந்த சவால்களும் ஒரு காரணம். 

செல்பேசியை செய்தி சேகரிப்பில் பயன்படுத்துவது எளிதானது மற்றும் அவசியமானது என்றாலும், அதில் நேர்த்தியும், தேர்ச்சியும் வெளிப்பட தகுந்த பயிற்சி தேவை. செல்பேசி இதழியல் தொடர்பான புரிதலும் அவசியம். எந்த இடத்தில், எந்த வகையான செய்திக்கு, செல்பேசியை எப்படி பயன்படுத்துவது ஏற்றதாக இருக்கும் என்ற தெளிவு இருந்தால் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும். 
ஆனால், இது ஒன்றும் சாத்தியமில்லாத கலை அல்ல; பயிற்சியும் ஈடுபாடும் இருந்தால் கைவரக்கூடிய கலைதான். 

செல்பேசி இதழியலுக்கான அடிப்படைகளை கற்றுத் தேர்வதோடு, இந்த நுணுக்கங்களை நடைமுறைப்படுத்தும் செயல்முறையையும் அறிந்திருக்க வேண்டும். செல்பேசி இதழியல் பயிற்சியாளர்கள் இதை செயல்முறை திட்டம் (ஒர்க் ஃப்ளோ) என்கின்றனர். 

செல்பேசி இதழியல் என்பது வளர்ந்து வரும் துறையாக இருப்பதால் அதற்கான விதிமுறைகள் இன்னமும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. புதிய ரக செல்பேசிகள், அவற்றுக்கான இயங்குதளங்கள், புதிய செயலிகள் ஆகியவை செய்தி சேகரிப்பிற்கான புதிய வழிகளை நாட வைக்கும் என்கிறார் செல்பேசி இதழியல் பயிற்சியாளரான கெய் டிஜென் (Guy Degen). செல்பேசி இதழியல் தொடர்பான உற்சாகம் அளிக்க கூடிய அம்சமாக இது அமைந்தாலும், களத்தில் இறங்கும் முன் ஓரளவுக்கேனும் திட்டமிடல் தேவை என்கிறார் டிஜென். 

செல்பேசி கொண்டு உள்ளடக்கத்தை உருவாக்க முயற்சிக்கும்போது திட்டமிடலில் உதவக்கூடிய வரைபடத்தையும் அவர் முன்வைக்கிறார். மிக எளிதாக அமைந்திருக்கும் அந்த வரைபடத்தில் செல்பேசி இதழியல் மூலம் சாத்தியமாகக்கூடிய பல்வேறு விதமான உள்ளட்டக்கங்களை விவரித்து, அவை ஒவ்வொன்றுக்கும் தயாராகும் குறிப்புகளை வழங்கியுள்ளார். இவற்றுக்கான செயலிகளையும் குறிப்பிட்டுள்ளார்.
 
இமெயில் - வரி வடிவ செய்தி, நேரலை வீடியோ, வீடியோ, புகைப்படங்கள், ஆடியோ, வலை, சமூக ஊடகம், வலைப்பதிவு, வரைபடம் - இருப்பிடம் மற்றும் கிளவுட் சேவைகள் ஆகிய உள்ளடக்க அம்சங்களை அவர் பிரதானமாக குறிப்பிடுகிறார். இதில் வலையை முதல் அம்சமாக கருதலாம். செய்தி அல்லது உள்ளட்டக்கத்திற்கான துவக்கமாக அமையும் ஆய்வு செய்யும் கட்டமாக இது அமைகிறது. கோப்புகளை அனுப்பி வைப்பதற்கான வழிகளை அறிவதும் இதில் அடங்கும். செல்பேசியில் இருந்தே தகவல் முதல் கட்ட தகவல் சேகரிப்பில் ஈடுபடுவதாக இது அமைகிறது.

ஆடியோ மற்றும் வீடியோ அடுத்த அம்சங்களாக புரிந்து கொள்ளலாம். நேர்காணல், விடியோ கிளிப், கேமராவை நோக்கிய வர்ணனை, டைம்லேப்ஸ் வீடியோ, வலைப்பதிவு வீடியோ மற்றும் கேலரி ஆகியவற்றை வீடியோ பதிவுகளால் உருவாக்கலாம். இவை ஒவ்வொன்றையும், செய்தி வெளியீடு அல்லது கதை சொல்லலில் எந்த இடத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று அறிந்திருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு வல்லுனர் அல்லது செய்தியை கண்ணால் பார்த்தவரின் கருத்துக்களை விவரிக்கும்போது, பொருத்தமான இடத்தில் அவர் சொல்வதை சிறு வீடியோ கிளிப்பாக பதிவு செய்து ஒளிபரப்பலாம். இவற்றுக்கு உதவக்கூடிய செயலிகளையும், சேவைகளையும் அறிந்திருக்க வேண்டும். அவற்றில் சில: யூடியூப், விமொயோ - வீடியோக்களை பதிவேற்ற, புரோகேமரா, பிளிமிக்புரோ - படம் பிடிப்பதற்கான செயலி, டைம்லேப்ஸ், ஸ்கைப்.
 
ஆடியோ பதிவுகளை நேர்காணல், குரல் வழி செய்தி, செய்தி தொகுப்பு மற்றும் கிளிப்பிற்கு பயன்படுத்தலாம். ஆடியோ வடிவில் முழு நீள நேர்காணல் செய்யலாம். ஒரு நிகழ்வை குரல்வழி செய்தியாக விவரிக்கலாம். இணையதளத்தில் வெளியாகும் செய்தியின் நடுவே, ஒருவரது கருத்து இடம்பெற்றால் அதை ஆடியோ பதிவாக கேட்கும் வசதியையும் அளிக்கலாம். இதற்கு உதவக்கூடிய செயலிகள்: சவுண்ட்கிளவுட், ஆடியோபூம், ஸ்கைப், பர்ஸ்ட்வீடியோ, வாயுஸ்மெமோ, வேவ்பேட்.

உடனடி அல்லது முக்கியச் செய்தி என்றால் வீடியோ மூலம் நேரலை செய்யலாம். முக்கிய நேர்காணலையும் நேரலையாக வழங்கலாம். இதழாளரும் களத்தில் இருந்து கேமராவை பார்த்து செய்தியை வீடியோ பதிவாக விவரிக்கலாம். பாம்பூசர், பெரிஸ்கோப், பேஸ்புக் லைவ் ஆகிய செயலிகள் இதற்கு ஏற்றவை.

புகைப்படங்களை பலவிதங்களில் பயன்படுத்தலாம். செய்திக்கு வலு சேர்க்க புகைப்படத்தை பயன்படுத்தலாம். ட்விட்டரில் தகவல் பகிரும்போது உடன் புகைப்படத்தையும் இணைக்கலாம். புகைப்படத் தொகுப்புகளை உருவாக்கலாம். புகைப்படங்களுடன் ஒலியை இணைந்த்து ஆடியோ புகைப்பட தொகுப்பையும் உருவாக்கலாம். புரோகேமரா உள்ளிட்ட கேமரா செயலிகள் இதற்கு ஏற்றவை.

செய்தியை ஊடகங்களின் இணையதளத்தில் பதிவேற்றுவதோடு சமூக ஊடகங்கள் மற்றும் வலைப்பதிவுகளிலும் பகிர்ந்து கொள்ளலாம். சமூக ஊடகங்கள் எனும்போது பேஸ்புக், ட்விட்டர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகள் அடங்கும். உடனடி செய்திகள் அல்லது மேலதிக விவரங்களை பகிர்ந்துகொள்ள சமூக ஊடகங்கள் ஏற்றவை. செய்திகளோடு புகைப்படம், வீடியோவையும் பகிர்ந்து கொள்ளலாம். சம்பந்தப்பட்ட சமூக ஊடக செயல்பாடுகளை அறிந்திருக்க வேண்டும்.
 
இதைப்போலவே வலைப்பதிவிலும் செய்தி வெளியிடலாம். சமுக ஊடகங்களை விட வலைப்பதிவில் விரிவான ஆழமான செய்திகளை வெளியிடலாம். செய்திகளுடன் புகைப்படம் அல்லது வீடியோவை இணைக்கலாம். வீடியோ பதிவாகவே கூட செய்திகளை பகிரலாம். வேர்ட்பிரஸ், டம்பிளர், மீடியம் உள்ளிட்ட வலைப்பதிவு சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். 

உள்ளடக்கத்தின் தன்மைக்கேற்ப சிலவற்றில் இருப்பிடம் சார்ந்த தகவலை வரைபடத்தில் உணர்த்தி கூடுதல் புரிதலை ஏற்படுத்தலாம். தீ விபத்து பற்றிய செய்தி எனில், அதன் நிகழ்விடத்தை கூகுள் வரைபடத்தில் சுட்டிக்காட்டலாம். 

கிளவுட் சேவைகளை பயன்படுத்துவது பதிவு செய்ய காட்சிகளையும் கோப்புகளையும் பாதுகாப்பாக சேமித்து வைத்தற்கான வழியாகும்.
இந்த வரைபடம் வழிகாட்டும் நோக்கிலானது. இதழாளர்கள் தங்கள் தேவைக்கேற்ற செயல்முறை திட்டத்தை உருவாக்கி கொள்ளலாம். 
இந்தத் திட்டமிடலில், மேலும் ஒரு எளிய வழியையும் டிஜென் முன்வைக்கிறார். ஆங்கில எழுத்தான 'பி'யை அடிப்படையாக கொண்டு ஆறு 'பி' வழி என இதை அவர் குறிப்பிடுகிறார். அவை: 

பர்ப்பஸ் - நோக்கம்: செய்தியின் நோக்கம் என தெளிவாக அறிந்திருக்க வேண்டும். இதற்கு தேவையான சாதனங்கள், செயலிகள் என்ன என தீர்மானிக்க வேண்டும். 

பிளான் - திட்டம்: செய்திக்கு தேவையான ஊடக அம்சங்கள் என்ன? யாரை நேர்காணல் செய்ய இருக்கிறேன் என்பவற்றை திட்டமிட வேண்டும். செல்பேசி உபகரணங்கள் மற்றும் செயலிகளின் தேவையையும் தீர்மானிக்க வேண்டும்.
 
புரொடக்‌ஷன் - தயாரிப்பு: செய்தியைப் பதிவு செய்ய தேவையான செயலிகள் என்ன? என தீர்மானிக்க வேண்டும். 

பப்ளிஷிங் - வெளியீடு: செய்தியை வெளியிட அல்லது அனுப்பி வைக்க தேவையான செயலிகளை தீர்மானிக்க வேண்டும்.

கிராஸ் பொசிஷனிங் - சமூக ஊடக பகிர்வுகள்: செய்திகளை வேறு எந்த வழிகளில் எல்லாம் பகிர வேண்டும் என திட்டமிடுவது.

பொசிஷன் - வரைபடம்: இருப்பிடம் உணர்த்தும் வரைபட சேவையை பயன்படுத்துவது. ஹேஷ்டேக் பயன்பாடு.

இவற்றை வழிகாட்டியாக கொண்டு செல்பேசி மூலமான செய்தி சேகரிப்பை திட்டமிடலாம். முதல் கட்டமாக உள்ளூர் நிகழ்வுகளை பதிவு செய்து பார்ப்பது சரியான பயிற்சியாக அமையும். பொதுமக்களின் கருத்து கேட்பு போன்றவற்றையும் பயிற்சியாக மேற்கொள்ளலாம். இதன் மூலம் நடைமுறை செயல்பாட்டை எளிதாக உள்வாங்கிக்கொள்ளலாம்.

என்ன செய்யப்போகிறோம்? நோக்கம் என்ன? எப்படி படம் பிடிக்கப்போகிறோம், என்ன உபகரணங்கள் தேவை? போன்ற அம்சங்களையும் முதலிலேயே தீர்மானித்துக்கொள்ள வேண்டும் என்கிறார் டிஜென். 

நவீன இணைய சேவைகள் உதவியோடு, உள்ளடக்கத்தை பலவிதங்களில் பகிர்ந்துகொள்ள முடியும். ட்விட்டரில் தகவல்களை பகிரலாம். வீடியோ தொகுப்பாக செய்தியை அளிக்கலாம். நேரலை செய்யலாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஊடக வடிவங்களை பயன்படுத்தலாம். இதழாளர் தேர்வு செய்யும் செய்திக்கு இவற்றில் பொருத்தமானவை எவை என அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

..மோஜோவில் இன்னும் மூழ்குவோம்...

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்: மோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP