Logo

டியூட் உனக்கொரு இமெயில் 3 - இன்ஸ்டா கலைஞனும், போட்டோஷாப் மாயாவியும்!

ஜேம்ஸ் பிரிட்மேன், ஜேவியர் பெரிஸ் இருவருமே உன்னைப்போல ஒருவர்'கள்' தான். ஆம், இருவருமே நெட்டிசன்கள் எனப்படும் இணையவாசிகள். ஆனால் உலகறிந்த நெட்டின்சன் என்பதுதான் விஷயம்.
 | 

டியூட் உனக்கொரு இமெயில் 3 - இன்ஸ்டா கலைஞனும், போட்டோஷாப் மாயாவியும்!

டியூட் இந்த வார மெயிலில், ஜேம்ஸ் பிரிட்மேன் (James Fridman) மற்றும் ஜேவியர் பெரிஸ் (Javier Perez) பற்றி பார்க்கலாம். இருவருமே உன்னைப்போல ஒருவர்'கள்' தான். ஆம், பிரிட்மேன், ஜார்விஸ் இருவருமே நெட்டிசன்கள். (தமிழில் இணையவாசிகள்). ஆனால் உலகறிந்த நெட்டின்சன் என்பதுதான் விஷயம். அதனால்தான் இருவரையும் அறிமுகம் செய்து வைக்க விருப்பம்.

பிரிட்மேனாவது அமெரிக்கவாசி. ஆனால் பெரிஸ் எழுத்தாளர் 'சாரு'வுக்கு மிகவும் பிடித்த லத்தீன் அமெரிக்க நாடு சிலி அமைந்துள்ள தென்னமெரிக்காவில் உள்ள ஈக்வேடார் நாட்டில் வசிப்பவர். (சாரு லத்தீன் அமெரிக்க நாடான 'சிலே'க்கு செல்வதுதான் தனது கனவு என அண்மையில் உருக்குமாக எழுதியுள்ளார்.) பெரிஸ் இணையம் அறிந்தவராக இருக்கிறார். அவருக்கு என ரசிகர் கூட்டம் இருக்கிறது. நீங்களும் கூட ஒருமுறை அவரது 'இன்ஸ்டாகிராம் பக்கம்' எட்டிப் பார்த்தால் அவரது ரசிகர்களாகி விடுவீர்கள். அதற்கு முன் அவரது படங்களை பார்த்து அசந்தும் போவீர்கள்.

இன்ஸ்டாகிராமில் அசத்துகிறார் என்றதும், பெரிஸ் சிறந்த ஒளிப்படக் கலைஞராக இருக்க வேண்டும் என நினைக்கலாம். இல்லை, பெரிஸ் போட்டோகிராபர் இல்லை - அவர் ஒரு கிராபிக் டிசைனர். அனிமேஷன் படங்களை உருவாக்குவதில் கில்லாடி போலிருக்கிறது. பிஹான்ஸ் (www.behance.net) தளத்தில் அவர் தனக்கென கலைக்கூடம் வைத்திருக்கிறார். பிஹான்ஸ் வடிவமைப்பு உள்ளிட்டவற்றில் கில்லாடிகளாக விளங்கும் புதுயுக கலைஞர்களுக்கான இணையதளம். பிஹான்ஸ் தளத்தை அறிந்து வைத்திருப்பதே ஒரு கெத்து என்று வைத்துக்கொள்ளலாம்.
 
இதைத் தவிர தொழில்முறையாகவும் பல வடிவமைப்புகளை அவர் உருவாக்கி வருகிறார். கூடவே இன்ஸ்டாகிராம் புகைப்பட பகிர்வு தளத்திலும் தனக்கான பக்கத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அந்தப் பக்கத்தில் தான் அவர் தனது கைத்திறனையும், கற்பனை ஆற்றலையும் காண்பித்து வருகிறார். அவரது இன்ஸ்டா பக்கம் > https://www.instagram.com/cintascotch/

சாம்பிலுக்கு ஒரு படம் பார்க்கலாமா?

டியூட் உனக்கொரு இமெயில் 3 - இன்ஸ்டா கலைஞனும், போட்டோஷாப் மாயாவியும்!

ஒரு கட்டிங் பிளேயர். அது வாயை பிளந்திருப்பது போல இருக்கிறது. அதன் சிவப்பு கைப்பிடியில் இரண்டு பக்கமும், ஷூ போல வரைந்திருக்கிறார். அதன் வாய் பகுதியை கழுத்து காலராக்கி, அதற்கு மேல் தொப்பி தலை ஒன்றை வரைந்திருக்கிறார். 

இன்னொரு படத்தில் இரண்டு மர கிளிப்களை கொஞ்சம் சாய்வாக தோன்றச் செய்து அதன் கீழ், கோட்டோவியமான ஒரு நண்டை வரைந்திருக்கிறார். கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், நண்டின் கொடுக்காக மர கிளிப் இருப்பது புரியும்.

இதுபோன்ற படங்கள் பெர்சின் ஸ்பெஷாலிட்டி. தினசரி வாழ்க்கையில் பார்க்க கூடிய பொருட்களை மையமாக வைத்துக்கொண்டு அவற்றை சுற்றி கார்ட்டூன் போன்ற சித்திரத்தை வரைந்து புதுமையாக தோன்ற வைத்து விடுகிறார். உதாரணத்திற்கு, வாடி உதிர்ந்த பூ ஒன்றை பக்கவாட்டு தோற்றத்தில் இருக்கிறது. அதன் வலப்பக்கத்தில் ஒரு பெட்டி சில கோடுகள், இடப்பக்கம் மேலே இசைக்குறிப்புகள். மொத்தமாக பார்த்தால் அந்த காலத்து இசைத்தட்டு கருவி போல இருக்கிறது. 

தினசரி பொருட்களே தனது கலைக்கான் இன்ஸ்பிரேஷன் என பெரிஸ் ஒரு இணைய பேட்டியில் கூறியிருக்கிறார். ஒரு பொருள் எந்த அளவுக்கு சாதாரணமாக இருக்கிறதே அந்த அளவு தனக்கு ஈர்ப்புடையதாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். செம கெத்து இல்லையா?

பெரிஸ் கலையை நீங்களே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்து மதிப்பிட்டுக் கொள்ளுங்கள். இதற்குள் ஜேம்ஸ் பிரிட்மேன் பற்றி கூகுளில் தேடிபார்த்திருந்தீர்கள் என்றால், அவர் ஒரு போட்டோஷாப் மாயாவி என தெரிந்து கொண்டிருக்கலாம். 

அமெரிக்காவில் வசிக்கும் பிரிட்டீஷ்காரரான பிரிட்மேனும் ஒரு கிராபிக் டிசைனர் தான். தொழில்முறையாக அவருக்கு போட்டோஷாப் கைவந்த கலையாக இருக்கிறது. அதை தான், இணையத்தில் வெளிப்படுத்தி தனக்கான ரசிகர் பட்டாளத்தை சேர்த்திருக்கிறார். 

போட்டோஷாப், புகைப்படங்களை திருத்தி பல ஜாலங்களை செய்ய உதவும் போட்டோஷாப் மென்பொருளாக இருக்கிறது. இதை இணையத்தில் ஒட்டு வேலைகளுக்கும் பயன்படுத்தலாம். இந்த வகை பயன்பாடு தவறானது. ஆனால் போட்டோஷாப் உதவியோடு, பின்னணியில் உள்ள சில காட்சிகளை நீக்குவது, சில காட்சிகளை சேர்ப்பது போன்றவற்றையும் மேற்கொள்ளலாம். இந்த உத்திகளை பயன்படுத்தி புதுமையான படங்களை உருவாக்கலாம். இப்படி போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாவதையும் பார்க்கலாம்.
 
பிரிட்மேனும் இப்படிப்பட்ட படங்களைத்தான் உருவாக்குகிறார். ஒரு வித்தியாசம் என்னவெனில், தானாக படங்களை உருவாக்காமல் மற்றவர்கள் அனுப்பி வைக்கும் படங்களில் போட்டோஷாப் மூலம் மாற்றம் செய்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறார். 

போட்டோஷாப் எல்லோருக்கும் தெரிந்த மென்பொருள். ஆனால் அதை பயன்படுத்தும் நுட்பம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அல்லவா? இப்படி போட்டோஷாப் தெரியாத, ஆனால் தங்கள் வசம் உள்ள படங்களை போட்டோஷாப் மூலம் மெருகேற்றினால் சூப்பராக இருக்கும் என நினைப்பவர்கள், அதை பிரிட்மேனுக்கு அனுப்பி வைத்தால் போதும். பிரிட்மேன் அதில் மாற்றம் செய்து ட்விட்டரில் பகிர்ந்து கொள்கிறார்.

ஆனால், பிரிட்மேன் பகிரும் படங்களில் சின்னதாக ஒரு டிவிஸ்ட் இருக்கும். படத்தை அனுப்பியவர்கள் கோரிக்கையை அப்படியே நிறைவேற்றாமல், அதை லேசாக கேலிக்கு உள்ளாக்கி பார்த்தவுடன் புன்னகை வர வைக்கும் படங்களாக மாற்றி விடுகிறார். இந்த மாற்றம் ரசிக்க தக்கதாக இருக்கும். 

உதாரணத்திற்கு, பருமனான வாலிபர் ஒருவர் பெஞ்ச் ஒரமாக அமர்ந்து, தனது காதலியை முத்தமிட முயல்வது போல படத்தை அனுப்ப, பெஞ்ச் ஓரத்தில் அமர்ந்திருப்பது போல இல்லாமல் செய்யுமாறு கோரியிருந்தார். பிரிட்மேன் இந்த கோரிக்கைய அசத்தலாக நிறைவேற்றி இருந்தார். அதாவது வாலிபரை அப்படியே தான் இருக்கிறார், ஆனால் காதலியை அவரது அருகில் இருந்து நீக்கி, இந்த பக்கம் தனியே அமர வைத்துவிட்டார்.

 டியூட் உனக்கொரு இமெயில் 3 - இன்ஸ்டா கலைஞனும், போட்டோஷாப் மாயாவியும்!

மற்றொரு படத்தில், வாலிபர் ஒருவர் கோட்சூட் போட்டபடி கையில் செல்போனை வைத்திருக்கிறார். பிரிட்மேனே போட்டோஷாப் படத்தில் அவரது கைகளில் போனுக்கு பதில் நீளமான் மீன் ஒன்றை கொடுத்துவிட்டார்.

டியூட் உனக்கொரு இமெயில் 3 - இன்ஸ்டா கலைஞனும், போட்டோஷாப் மாயாவியும்!

இன்னொரு பட்டத்தில் யுவதி ஒருவர் ஹாலிவுட் எனும் வார்த்தை பின்னணியில் சின்னதாக தெரிய நின்று கொண்டிருக்கிறார். ஹாலிவுட் எனும் வார்த்தையை கொஞ்சம் பெரிதாக்க முடியுமா என்பது அவரது கோரிக்கை. பிரிட்மேன் ஹாலிவுட் வார்த்தையை அப்படியே புளோ அப் செய்து அதன் ஒரு எழுத்து மட்டும் பெரிதாக தோன்றும் படி செய்துவிட்டார். இதேபோல அழகிய இளம் பெண் ஒருவர் முன்னழகை தாராளமாக காண்பிக்கும் படத்தில், அதை கொஞ்சம் மறைக்குமாறு கோரிக்கை வைக்க, பிரிட்மேன் ஒரு பெரிய பலகையை அவர் முன்னே வைத்து மறைத்துவிட்டார்.

இப்படி ஒவ்வொரு படத்திலும் அவர் நகைச்சுவை அம்சம் மிளிர தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தியிருப்பதை பார்க்கலாம். அவரது ட்விட்டர் டைம்லைனில் ஒரு உலா வந்தால் இதை நீங்களே ரசிக்கலாம்.

பிரிட்மேனின் டிரேட்மார்க் என்னவெனில் கேலியையும், கிண்டலையும் ரசிக்கும்படி செய்வதுதான். கேலிக்கு உள்ளாகிறவர்கள் கூட அதை ரசிக்கும் வகையில், முக்கியமாக மனம் புண்படாத வகையில் அவர் செய்து வருகிறார். ஒரு வகையில் அவர் செய்வதும், டிரால்களின் விஷமத்தனம் தான் என்றாலும், அதில் நகைச்சுவையையும் படைப்பாற்றலையும் புகுத்தி ரசிக்க வைக்கிறார்.

இவற்றை எல்லாம்விட ஹைலைட்டான விஷயம், ஒருமுறை இளம்பெண் ஒருவர், உடல் எடையை குறைக்கும் வேட்கையால் தனக்கு சரியாக சாப்பிட முடியாத குறைபாடு இருப்பதாக தெரிவித்து, தன் படத்தை அழக்காக்கித் தருமாறு கேட்டிருந்தார். பிரிட்மேன் அதற்கு உடன்படவில்லை. அதற்கு பதிலாக, அந்த பெண்ணிடம் நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள், மற்றவர்கள் அளவுகோளை வைத்து உங்களை வருத்திக்கொள்ள வேண்டாம் என அன்பாக அட்வைஸ் செய்திருந்தார். அதேபோல தனது கைகளில் உள்ள வடுக்களை அகற்றுமாறு கேட்டிருந்த பெண்ணிடம், இந்த வடுக்களை பார்க்கும் போதெல்லாம் நீங்கள் எத்தனை வலுவானவர் என்பது நினைவுக்கு வரும் என்று கூறியிருந்தார்.
 
ஆக, தனது நகைச்சுவையின் வரம்பு எது என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். உடல் அழகை அளவுகோளாக கொள்ளக்கூடாது எனும் மேசேஜை மென்மையாக வெளிப்படுத்தியும் வருகிறார். இது பிரிட்மேனின் ட்விட்டர் பக்கம்: twitter.com/@fjamie013 / இது அவரது இணையதளம்: https://jamesfridman.com/

சரி, டியூட் அடுத்த மெயிலுக்காக காத்திருக்கும்போது இணையத்தில் பிளாக்சோ (Plaxo) பற்றி தேடிப்பார்த்து முடிந்தால் ஒரு மெயில் அனுப்பவும்.

- சைபர்சிம்மன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

முந்தைய அத்தியாயம்: டியூட் உனக்கொரு இமெயில் 2 - வாட்ஸ் அப் யுகத்தில் இமெயிலின் இடம் என்ன?

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP