முதல் கோணல் முற்றும் கோணல்!!

அரசியல் கட்சிகளின் வெற்றி, தோல்வி என்பதை விட ஜனநாயகம், மக்களின் நம்பிக்கை ஆகியவற்றை வெற்றி பெற செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
 | 

முதல் கோணல் முற்றும் கோணல்!!

அரசியல் தவிர்த்து மற்றவற்றில் யாரும் கூட்டணியை விரும்புவது இல்லை. அதில் மட்டும் தான் வேறு வழியில்லாமல் தேர்தலுக்கு முன், அல்லது பின் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்னர் அமைக்கப்படும் கூட்டணியை ஏற்பதா, வேண்டாமா என்று மக்கள் முடிவு செய்ய முடியும். ஆனால் தேர்தலுக்கு பின்னால் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்பது மக்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் எதிரானது. கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இப்படித்தான் நடந்தது. இத்தகைய கூட்டணிகளை தான் நாம் கடந்த காலங்களில் பார்த்து இருக்கிறோம்.

ஆனால் தேர்தலுக்கு முன்னாள் கூட்டாக ஆட்சி செய்து விட்டு, தேர்தல் நேரத்தில் மக்களின் அங்கீகாரத்தை கேட்ட 2 கட்சிகள், தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், ஈகோ யுத்ததால் ஆட்சி அமைக்காமல் தவிர்ப்பதை மஹாராஷ்டிராவில் மட்டும் தான் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரே இருந்த வரை மஹாராஸ்டிராவின் காவி திமுகவாக சிவசேனை இருந்தது. திமுக தமிழகத்தில், திமுக சொல்லிய பல விஷயங்கள் சிவசேனை மகாராஷ்டிராவில் நடைமுறைப்படுத்தியது. அதனால் அந்த கட்சி மாநிலத்தில் வரவேற்பு பெற்றது. அப்போது பாஜக சின்ன குழந்தையாக மஹாராஸ்டிரா அரசியலில் காலடி வைத்தது. அவ்விரு கட்சிகளையும் இந்துத்துவ கொள்கை இணைத்தது. 1989ம் ஆண்டில் இருந்தே இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தன. அதில் இருந்தே இருவரில் யார் பெரியவர் என்ற யுத்தம் தொடர்ந்து கொண்டே தான் இருந்து வருகிறது. இது கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் உச்சத்தை அடைந்தது.

2014ம் ஆண்டு தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரிய கட்சியாக உருவெடுத்தது பாஜக. அந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளையும், முதல்வர் பதவியையும் கோரியது. அதற்கு சிவசேனா மறுப்பு தெரிவிக்கவே கூட்டணி முறிந்தது.

அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் தனித்தனியே போட்டியிட்டன. விளைவு பாஜக, 46 தொகுதிகளில் இருந்து 121 தொகுதிகளையும், சிவசேனா 44 தொகுதியில் இருந்து 63 தொகுதிகளையும் பிடித்தன. காங்கிரஸ் 82 தொகுதிகளில் இருந்து 42 தொகுதியாகவும், தேசியவாத காங்கிரஸ் 62 தொகுதிகளில் இருந்து 41 இடங்களையும் பிடித்தது. இதனால் பாஜக, சிவசேனா கூட்டாக ஆட்சியை பிடித்தது. ஆனாலும் அதன் ஆட்சி காலம் முழுவதும் பங்காளி சண்டை தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.

இந்த நிலையில் நடைபெற்ற 2019 சட்டசபைத் தேர்தல் அனைத்து கட்சிகளுக்கும் ஓர் பாடமாக அமைந்தது. இதனால் பாஜக, சிவசேனா கூட்டணியாகவும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியாகவும் இணைந்து தேர்தலை சந்தித்தது.

இந்நிலையில், மகராஷ்டிராவில் தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்ற பால்தாக்கரேயின் முடிவு இந்த தேர்தலில் முடிவுக்கு வந்தது. அவரின் பேரன் ஆதித்யா தாக்கரே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இது வரையில் கட்சிக்காரர்களுக்காக பேசிவந்த சிவசேனாவின் பால்தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல்வர் வேட்பாளர் என்ற நிலை ஏற்பட்டது.

இது தான் இந்த தேர்தல் குழப்பத்திற்கான ஆணி வேர். ஆனாலும் இப்போதுள்ள சூழ்நிலை கருதி ஆதித்யா தாக்கரே சட்டசபைக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவில்லை.

கடந்த தேர்தலில் பாஜக, சிவசேனா இடையேயான பேச்சுவார்த்தை தற்போதும் தொடர்கிறது.  ஆனால் அப்போது அது தேர்தலுக்கு முன் நடந்ததால் கூட்டணி முறிந்தது. இந்த முறை தேர்தலுக்கு பின்னர் நடப்பதால் அது போன்ற சூழ்நிலை உருவாக வில்லை. இதனால் தாங்கள் எதற்கு ஓட்டுப் போட்டார்களோ அந்த திட்டத்தை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிய பழி பாஜக, சிவசேனா இரு கட்சிகள் மீதும் விழுந்துள்ளது.

தேர்தலுக்கு முன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்பவர்கள், தேர்தலுக்கு பின்னர் கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், யாரும் ஆட்சி அமைக்க முடியாத நிலை. அதை விட பதவி வெறி என்றால் என்ன என்று அனைவருக்கும் நிருபித்து விட்டது இந்த விவகாரம்.

இந்த தேர்தலில் 152 இடங்களி்ல பாஜக போட்டியிட்டு அதில் சுமார் 69 சதவீதமான 105 இடங்களை வென்றுள்ளது. சிவசேனா 124 இடங்களில் போட்டியிட்டு சுமார் 45 சதவீதமான 56 இடங்களை மட்டும் பெற்றது. இதிலிருந்து, மக்கள் பாஜகவை வரவேற்பது நன்கு புரிகிறது. அடுத்த படியாக  தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியை பிடித்தால் மஹாராஸ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து ஆட்சியை பிடித்த 2வது முதல்வர் என்ற சாதனையை 50 ஆண்டுகளுக்கு பின்னர் உருவாக்குவார்கள்.

மேலும் நிலுவையில் உள்ள பல வழக்குகளை தொடர்ந்து நடத்தவும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவும் பாஜக கட்சி ஆட்சியை தொடர வேண்டியது கட்டாயம். தாவூத் இப்ராஹிம் கையால் இக்கபால் மிர்சி, தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் பிரபுல் பட்டேல் இடையே உள்ள தொடர்பை அமலாக்க பிரிவு விசாரித்து வருகிறது.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குண்ட்ராவை பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த விவகாரத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த விசாரணைகள் தொடர்ந்து அது வழக்காக மாற வேண்டியது கட்டாயம்.

நீரவ் மோடி–மெஹூல் சேக்சிக் , பாலிவுட், தேசிய வாத காங்கிஸ், காங்கிரஸ் பிணைப்புகளை கண்டுபிடிக்க வேண்டிய நிலையும் தற்போது எழுந்துள்ளது. இதனால் தான் பாஜக மைனாரட்டி அரசை அமைக்க தயங்குகிறது. அதே நேரத்தில் சிவசேனாவை ஆட்சியில் அமர்த்தவும் இதே பின்புலங்கள் மூலம்  திரை மறைவில் வேலை நடந்து கொண்டிருக்கலாம்.

பாஜக தனித்து மைனாரட்டி ஆட்சி அமைக்காமல் மற்ற எந்த கட்சி ஆட்சி அமைந்தாலும் அதுவும் மைனாரட்டி ஆட்சியாகத்தான் இருக்கும். ஆனால் பாஜகவில் கணேசன் கூறியதைப் போல அந்த ஆட்சி நாய் வாலை ஆட்டுவதற்கு பதிலாக வால் நாயை ஆட்டும் ஆட்சியாக அமையும். அந்த சூழ்நிலையில் நிலுவையில் உள்ள விசாரணைகள், வழக்குகள் கிடப்பில் போடப்படும். கடவுள் புண்ணியத்தில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி அமைக்க முன்வரவில்லை. சிவசேனாவிற்கும் அந்த கட்சிகள் ஆதரவளிக்க தயாராக இல்லை. இதனால் சட்ட சிக்கல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

தற்போதுள்ள நிலையில் கவர்னர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். அவ்வாறு நடந்தால் பாஜக ஆட்சியை தொடர முன்வர வேண்டும். இப்போது ஆட்சி அமைக்க முன்வராத தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் அந்த ஆட்சியை கவிழ்க்க கூடாது. பிரச்சனைகள் அடிப்படையில் ஆட்சியை ஆதரிக்க வேண்டும். மக்கள் முடிவை ஏற்று சிவசேனா, தன் நிலையில் இருந்து இறங்கி வந்து கூட்டணி ஆட்சியை தொடர முன்வர வேண்டும்.

 எதிர்காலத்தில் இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் பெரிய கட்சி மெஜாரட்டி, அல்லது மைனாரட்டி அரசு அமைத்து 5 ஆண்டுகள் தொடர வேண்டும். இந்த சூழ்நிலையை ஏற்படுத்த கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைக்க தேர்தல் கமிஷன் அனுமதிக்க கூடாது. அவ்வாறு அவர்கள் செய்யாவிட்டாலும் மக்கள் அந்த கூட்டணியை வெற்றி பெற செய்யக் கூடாது. அப்போதுதான் இது போன்று மக்கள் மடையர்கள் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படாமல் இருக்கும். அரசியல் கட்சிகளின் வெற்றி, தோல்வி என்பதை விட ஜனநாயகம், மக்களின் நம்பிக்கை ஆகியவற்றை வெற்றி பெற செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP