Logo

12 மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல்- வாக்கு பதிவு தொடங்கியது

12 மாநிலங்களில் 95 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது. உள்ளூர் போலீசாருடன் மத்திய படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
 | 

12 மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல்- வாக்கு பதிவு தொடங்கியது

12 மாநிலங்களில் 95 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது. உள்ளூர் போலீசாருடன் மத்திய படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஆனால் தமிழ்நாட்டில் வேலூர் தொகுதி தேர்தல், பண பட்டுவாடா புகாரின்பேரில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.திரிபுரா மாநிலத்தில் திரிபுரா (கிழக்கு) தொகுதியில் சட்டம், ஒழுங்கை காரணம் காட்டி தேர்தல், 3-வது கட்டத்துக்கு (ஏப்ரல் 23-ந் தேதி) ஒத்தி போடப்பட்டுள்ளது.

எனவே இன்று 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. அதன்படி,தமிழ்நாட்டில் 38, புதுச்சேரியில் 1, கர்நாடகத்தில் 14, மஹாராஷ்டிராவில் 10, உத்தரப்பிரதேசத்தில் 8, அசாம், பீகார், ஒடிசாவில் தலா 5, சத்தீஷ்கார் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 3, காஷ்மீரில் 2, மணிப்பூரில் ஒரு தொகுதி என மொத்தம் 95 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.

மக்களவை தேர்தலுடன் தமிழ்நாட்டில் 18 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தலும், ஒடிசா சட்டசபை தேர்தலில் 2-ம் கட்டமாக 35 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் அனல் பிறந்தது. பாஜக கட்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சா்கள், காங்கிரஸ் கட்சிக்காக அதன் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரும் பிரசாரம் செய்தனர்.

இந்த மக்களவை 2-வது கட்ட தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காஷ்மீர் முன்னாள் முதல்வா் உமர் அப்துல்லா  மத்திய அமைச்சா்கள் சதானந்த கவுடா, பொன் ராதாகிருஷ்ணன், நடிகை ஹேமமாலினி, நடிகர் ராஜ்பப்பர், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சா் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

ஒடிசா சட்டசபை தேர்தலில் முதல்வா் நவீன் பட்நாயக்  இன்று தேர்தலை சந்திக்கிற தலைவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இன்று நடக்கிற தேர்தலில் சுமார் 1,600 வேட்பாளர்களின் தலையெழுத்தை ஏறத்தாழ 15 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தீர்மானிக்கின்றனர்.

இவர்கள் வாக்கு அளிப்பதற்காக சுமார் 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிகிறது. மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் சித்திரை திருவிழாவையொட்டி வாக்குப்பதிவு இரவு 8 மணி வரை நீடிக்கிறது.

மற்ற எல்லா மாநிலங்களிலும் தமிழ்நாட்டைப்போலவே 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கினாலும், முடிகிற நேரம் மாறுபடுகிறது. அசாமில் மாலை 5 மணிக்கும், பீகாரில் 6 மணிக்கும், சத்தீஷ்காரில் சில இடங்களில் 3 மணிக்கும், சில இடங்களில் 5 மணிக்கும், காஷ்மீரில் 6 மணிக்கும், கர்நாடகத்தில் 6 மணிக்கும், மஹாராஷ்டிராவில் 6 மணிக்கும், மணிப்பூரில் 4 மணிக்கும், ஒடிசாவில் சில இடங்களில் 4 மணிக்கும், பல இடங்களில் 6 மணிக்கும், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகியவற்றில் 6 மணிக்கும் முடிகிறது.

இந்த முறை மின்னணு வாக்கு எந்திரங்களுடன் ‘விவிபாட்’ என்னும் வாக்கை உறுதி செய்கிற கருவியும் பொருத்தப்படுவதால், ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்கு உரிய சின்னத்தில் பதிவாகி உள்ளதா என்பதை அதில் பார்த்து உறுதி செய்து கொள்ள முடியும்.

வாக்குப்பதிவு பாதுகாப்பு பணியில் உள்ளூர் போலீஸ் படையுடன், மத்திய படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுக்கிற வகையில் தீவிர ரோந்து, கண்காணிப்பு பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP