ரஃபேல் போர் விமான வழக்கின் காலவரிசை!!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் 36 ரஃபேல் போர் விமானங்களை 58ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கும் ஒப்பந்தம் குறித்த சர்ச்சையான ரஃபேல் போர் விமான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 | 

ரஃபேல் போர் விமான வழக்கின் காலவரிசை!!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் 36 ரஃபேல் போர் விமானங்களை 58ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கும் ஒப்பந்தம் குறித்த சர்ச்சையான ரஃபேல் போர் விமான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயுடன் இணைந்து நீதிபதிகளான சஞ்சய் கிஷான் கௌல் மற்றும் கே.எம்.ஜோசப் ஆகிய இருவரும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். 

இதனிடையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடங்கி, அதில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி சார்பாக தொடுக்கப்பட்டிருந்த வழக்கின் குறிப்புகள் உட்பட தற்போதைய நிலை வரையிலான காலவரிசையை இங்கு பார்க்கலாம். 

கடந்த 2007ஆம் ஆண்டு, இந்திய விமான படையினரின் தேவைக்காக 126 போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்தை முன்வைத்தது மத்திய அரசு. இதை தொடர்ந்து கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனம் மிக குறைந்த விலையில் தரமான போர் விமானங்களை தயாரிப்பதற்கான முறைகளை முன்வைத்ததை தொடர்ந்து, 126 போர் விமானங்களுக்கான ஒப்பந்தம் பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையே கையெழுத்திடப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில், 126 போர் விமானங்களில் முதல் 18 விமானங்களை டஸ்ஸால்ட் நிறுவனம், முழுமையாக தயார் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், மீதமுள்ள 108 போர் விமானங்களை டஸ்ஸால்டின் உதவியோடு, இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து, கடந்த 2014ஆம் ஆண்டு, டஸ்ஸால்ட் நிறுவனம், இந்தியாவின் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்த போதிலும், இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு, இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று ரத்து செய்தது மத்திய பாதுகாப்பு அமைச்சகம். எனினும், இது நடைபெற்று முடிந்த சில மாதங்களிலேயே பிரான்ஸ் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, 36 போர் விமானங்களை பிரான்ஸிடமிருந்து பெறுபோவதாக அறிவிப்பு விடுத்தார். இதனை நிரூபிக்கும் வகையில், 2016ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்தடைந்த பிரான்ஸ் நாட்டு குடியரசுத் தலைவர் பிரான்காய்ஸ் ஹோலான்டே இதனை உறுதி செய்ததை தொடர்ந்து, இருநாடுகளுக்கிடையே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 

இதனிடையில், ரஃபேல் போர் விமான வழக்கில் மோசடிகள் ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி சார்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட, இதன் விசாரணை உச்ச நீதிமன்ற வாயிலை அடைந்தது. இந்த குற்றச்சாட்டுகளை முழுவதுமாக விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான குழு, கடந்த 2018ஆம் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி, இந்த வழக்கில் சந்தேகிக்கும்படியான மோசடி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று தீர்ப்பு வழங்கியது. 

இதை தொடர்ந்தும், மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண்  ஷோரி, வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆகியோரால் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மறுஆய்வு மனுக்கள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து, மீண்டும் ரஃபேல் போர் விமான மோசடி வழக்கு குறித்த விசாரணையில் ஈடுபட்டிருந்த உச்ச நீதிமன்றம், அதற்கான தீர்ப்பை  இன்று வழங்கியுள்ளது.

இதன்படி, ரஃபேல் வழக்கில் ஊழல் நடைபெறவில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சய் கிஷான் கௌல் மற்றும் கே.எம்.ஜோசப் ஆகிய முவரும் தள்ளுபடி செய்வதாக உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP