5 மாநிலங்களுக்கு தலா ஒரு லட்சம் அபராதம் விதித்த உச்சநீதிமன்றம் - டெல்லிக்கு மட்டும் ரூ.2 லட்சம்

மதிய உணவுத் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில், அதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்காத மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. அந்தத் தொகையை 4 வாரங்களுக்குள் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
 | 

5 மாநிலங்களுக்கு தலா ஒரு லட்சம் அபராதம் விதித்த உச்சநீதிமன்றம் - டெல்லிக்கு மட்டும் ரூ.2 லட்சம்

பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்காத ஆந்திர பிரதேசம், அருணாசலப் பிரதேசம், மேகாலயம், ஒடிஸா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய 5 மாநில அரசுகளுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதே வழக்கில் டெல்லி அரசுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மதிய உணவுத் திட்டத்தில் முறைகேடு நடப்பதாகவும், உணவு தானியங்கள் உரிய முறையில் பள்ளிகளுக்கு சென்று சேர்வதில்லை என்றும் கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மதிய உணவுத்திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. அந்த விவரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என  உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

அதன்படி, தமிழகம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தன. ஆனால், ஆந்திரம், அருணாசலப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட 6 மாநிலங்கள் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் குப்தா, ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், அந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பலமுறை உத்தரவு பிறப்பித்தும், மதிய உணவுத் திட்டம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யாத மாநிலங்களுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அந்த 6 மாநிலங்களுக்கும் அபராதம் விதித்து, அதை 4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அபராதமாகப் பெறப்படும் பணம், சிறார் நீதிவிவகாரங்கள் சார்ந்த விஷயங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP