வங்கி அட்டைகளுக்கு அடையாள எண்: ஏன், எதற்கு, எப்போது தெரியுமா..?

வங்கி அட்டைகளுக்கு அடையாள எண்: ஏன், எதற்கு, எப்போது தெரியுமா..?
X

நவீன தொழில்நுட்ப வசதிகளின் வருகை, கைப்பேசி பயன்பாடு அதிகரிப்பு, அதிகரித்துள்ள இணைய சேவை வசதிகள் உள்ளிட்டவற்றின் காரணமாக இணையவழி பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. அதே வேளையில், இணையவழி பண மோசடிகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

அதன்படி, இணையவழி மோசடிகளால் 2019 - 2020-ம் நிதியாண்டில் 58.61 கோடி ரூபாயும், 2020 -2021-ம் நிதியாண்டில் ரூ.63.40 கோடி ரூபாயும் பண இழப்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தடுப்பதற்கான ஒரு வழியாக, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 'அடையாள எண்கள்' (டோக்கனைசேஷன்) வழங்கும் நடைமுறையை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அமல்படுத்தியுள்ளது.

இந்த புதிய நடைமுறையின்படி, வாடிக்கையாளா்கள் இணையவழி வர்த்தக நிறுவனங்களில் பொருட்களை வாங்கும்போது தொகையைச் செலுத்துவதற்காக வங்கி அட்டையின் விவரங்களை நேரடியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.


ஒவ்வொரு வங்கி அட்டைக்கும் குறிப்பிட்ட அடையாள எண் வழங்கப்படும். இந்த எண்ணை மட்டும் வழங்கினால் போதும். இதன் மூலம், மூன்றாவது நபர்கள் வாடிக்கையாளர்களின் வங்கி சார்ந்த தரவுகளை சேமித்து வைப்பது தடுக்கப்படும். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

இணையவழி வர்த்தக நிறுவனங்கள் மூலம் வங்கி அட்டைகளுக்கான 'அடையாள எண்' பெற முடியும். அதன் மூலமாக அனுப்பப்படும் கோரிக்கை, வங்கி அட்டையை வழங்கிய நிறுவனத்துக்குச் சென்றடையும். வங்கி அட்டை, இணையவழி வர்த்தக நிறுவனம், பயன்படுத்தப்படும் சாதனம் (கைபேசி அல்லது கையடக்க கணினி) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 'அடையாள எண்' வழங்கப்படும். வங்கி அட்டையின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தியுள்ள இந்த சேவையை எந்தவித கட்டணமும் செலுத்தாமல் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

இணையவழி பணப் பரிவர்த்தனையின்போது வங்கி அட்டை விவரங்களை வழங்காமல், அடையாள எண்ணை பெற்று வழங்கும் நடைமுறை வாடிக்கையாளர் விருப்பத்தைப் பொறுத்தது. அது கட்டாயம் கிடையாது. வங்கி அட்டை விவரங்களை நேரடியாக வழங்கியும் பணப் பரிவர்த்தனைகளை இடையூறின்றி மேற்கொள்ள முடியும்.


அடையாள எண் நடைமுறையின் கீழ் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை, பரிமாற்றத் தொகையின் உச்ச வரம்பு ஆகியவற்றையும் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

குறிப்பிட்ட இடங்களில் அடையாள எண்ணை வழங்கியும், வேறு சில இடங்களில் வங்கி அட்டை விவரங்களை வழங்கியும் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதியும் உள்ளது. ஒரு வாடிக்கையாளர் வெவ்வேறு வங்கி அட்டைகளுக்கு வெவ்வேறு அடையாள எண்களை பெற்றுக் கொள்ள முடியும்.

அதேபோல், பயன்படுத்தும் சாதனத்தைப் பொருத்தும், இணையவழி வலைதளத்தைப் பொருத்தும் ஒரே வங்கி அட்டைக்கு வெவ்வேறு அடையாள எண்கள் வழங்கப்படும். பல அடையாள எண்களை வாடிக்கையாளர் பெற்றிருந்தால், அவற்றில் எதைப் பயன்படுத்தலாம் என்பதையும் வாடிக்கையாளரே முடிவு செய்து கொள்ளலாம்.


வங்கி அட்டைக்கான 'அடையாள எண்' நடைமுறை வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், இணைய வழி வர்த்தக நிறுவனங்கள் ஏற்கனவே சேமித்து வைத்துள்ள வாடிக்கையாளர்களின் வங்கி அட்டை சார்ந்த விவரங்களை அதற்குள் அழித்துவிட வேண்டியது கட்டாயமாகும். அக்டோபர் 1-ம் தேதிக்கு பிறகு வங்கி அட்டை சார்ந்த விவரங்களை அந்த நிறுவனங்களால் சேமித்து வைக்க முடியாது.

அடையாள எண்ணை பெறாத வாடிக்கையாளர்கள், ஒவ்வொரு முறை பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது வங்கி அட்டை சார்ந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

வங்கி அட்டையின் 'அடையாள எண்' இடம்பெற்ற சாதனங்கள் தொலைந்துவிட்டாலோ, அல்லது 'அடையாள எண்' சார்ந்த பிரச்சனைகளுக்கோ அந்த அட்டையை வழங்கிய நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளலாம்.

Next Story
Share it