தன்னுடைய ரத்தத்தை அளித்து ஓர் உயிரை காப்பாற்றிய நாய்..!

தன்னுடைய ரத்தத்தை அளித்து  ஓர் உயிரை காப்பாற்றிய நாய்..!
X

கர்நாடகாவில், உடல்நல பாதிப்பால் உயிருக்கு போராடிய நாய்க்கு மற்றொரு நாய் தன்னுடைய ரத்தத்தை தானமாக அளித்து அதன் உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹூப்ளி விமான நிலையத்தில் போதைப்பொருள் மற்றும் வெடி பொருட்களை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள் பிரிவில் ஏராளமான நாய்கள் பணியாற்றி வருகின்றன. இதில், மாயா என்ற பெல்ஜியன் ஷெப்பர்ட் நாய்க்கு கடந்த வாரம் முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது.


இதையடுத்து, தார்வாத்தில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனைக்கு மாயா அழைத்து வரப்பட்டது. அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனால், மாயாவுக்கு ரத்தம் செலுத்த முடிவெடுக்கப்பட்டது. நாய்களில் எட்டு வகையான ரத்தப் பிரிவு உள்ளது. ஒரு நாயின் ரத்தப் பிரிவை கண்டுபிடித்தாலும், அதற்கேற்ற நாயின் ரத்தப் பிரிவை கண்டுபிடிப்பதும், அதனிடமிருந்து ரத்த தானம் பெறுவதும் அவ்வளவு எளிதல்ல.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வேளாண் அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான நாய்கள் பங்கேற்றன. அங்கு வந்திருந்த நாய்களின் உரிமையாளர்களிடம் மாயாவின் நிலை குறித்து விளக்கப்பட்டது. அதில், சார்லி என்ற 8 வயது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயின் உரிமையாளர், மாயாவின் ரத்த வகைதான் சார்லி என்பதை உறுதி செய்து ரத்த தானம் கொடுக்கவும் ஒப்புக் கொண்டார்.


இதையடுத்து, அன்றே மாயாவுக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. மிகவும் அபாய கட்டத்தில் இருந்த மாயா, உடனடியாக குணமடைந்து, அன்றைய தினமே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. அதன் பிறகு மருத்துவப் பரிசோதனைக்கு வந்த போது, அதன் உடல் நலம் நன்கு தேறி இருந்தது.

இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், 'மாயாவுக்கு ரத்தம் ஏற்றப்பட்டு, தற்போது குணமடைந்து வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் பூரணமாக குணமடைந்து விமான நிலையத்தில் தனது பாதுகாப்பு பணியைத் தொடரும். இது, சாதாரணமாக நடக்கும் நிகழ்வல்ல' என்று பூரிப்புடன் தெரிவித்தனர்.

மாயாவுக்கு ரத்த தானம் அளித்த சார்லி, ஏற்கனவே விபத்தில் படுகாயமடைந்த ஒரு நாய்க்கு ரத்தம் அளித்து அதன் உயிரைக் காப்பாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it