1. Home
  2. லைப்ஸ்டைல்

நீங்கள் சமைத்த உணவில் காரம் கூடிவிட்டதா?

நீங்கள் சமைத்த உணவில் காரம் கூடிவிட்டதா?

மட்டர் பனீர், சோலே மசாலா, பாவ் பாஜி போன்றவற்றில் காரம் அதிகமா? ஃப்ரெஷ் கிரீம் அல்லது சூடான பால் வெண்ணெய் சேர்த்து உருக்கி அதைச் சேர்த்து விட்டால், 'காரமா... எங்கே..?' என்பார்கள்.

வெண்பொங்கல், கலப்பு சாதங்கள், புலாவ், பிரியாணி போன்றவை ‘உஸ் உஸ்’ என்று நாக்கை பதம் பார்க்கின்றனவா? பொங்கல் சூடான பால், இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்தால் காரம் குறைந்து விடும்.

கலப்பு சாதமாக இருந்தால் (தேங்காய், எலுமிச்சை சாதம் முதயன) அவற்றிலுள்ள மிளகாய்த் துண்டுகளை பொறுக்கி எடுத்து விடுங்கள். பின்னர்... வடாம், அப்பளம் இவற்றைப் பொரித்து தூளாக்கி பரிமாறும் நேரத்தில் மேலே தாராளமாகத் தூவி மொறுமொறுவென்று பரிமாறுங்கள்.

புலாவ் பிரியாணி காரமாக இருந்தால் பிரெட் கிரம்ப்ஸ் ஒரு கரண்டி எடுத்து, வெறும் வாணயில் ஒரு நிமிடம் சூடாக்கிச் சேர்த்து விடுங்கள். பரிமாறும்போது சாதாரண கார்ன்ஃபிளேக்ஸ் கூட சேர்க்கலாம். வெறும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கிக் கலந்தும் சேர்க்கலாம்.

புளிப்பு கூடி விட்டதா?

வெல்லம் ஒரு கட்டி கரைத்து விடுங்கள். பொட்டுக்கடலை மாவையும் நீர்க்கக் கரைத்து அதில் சேர்த்து விடுங்கள்.

வெங்காயத்தை ஒரு ஸ்பூன் எண்ணெயில் வதக்கி, மிக்ஸியில் அரைத்துச் சேர்த்தாலும் குழம்பு சாம்பார் வகைகளில் புளிப்பு மட்டுப்படும்.

ரசம் புளிப்பாக இருந்தால், புளிப்பில்லாத தக்காளி, கொஞ்சம் கொத்தமல், ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் மிளகு-சீரகம் பொடி சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ரசத்தில் சேர்த்து ஒரு தடவை கொதிக்க விடுங்கள். பிறகு, கால் ஸ்பூன் சர்க்கரை போட்டு இறக்கினால்... அபாரமாக இருக்கும்.

சாம்பார் நீர்த்துவிட்டதா?

சிறிது நேரம் அப்படியே வைத்திருந்தால் மேலே தெளிவாக தண்ணீர் தேங்கும். அதைக் கவனமாக இறுத்துவிட்டால்... சாம்பார் கெட்டிதான். இறுத்து எடுத்த தண்ணீரை வீணாக்காமல்... சப்பாத்தி மாவு பிசைய உபயோகிக்காலாம்.

தண்ணீர் அதிகமாகப் போன கூட்டு, குருமா, கிரேவி வகைகளுக்கு பால் கரைத்த சோள மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து ஒரு கொதி கொதிக்க வைத்தால் கெட்டியாகி விடும் (கூட்டு அல்லது குருமாவிருந்தே கொஞ்சம் எடுத்து அதில் மாவைக் கரைத்துச் சேர்ப்பதும் நல்ல உத்தி!)

தோசை மாவு நீர்த்து விட்டால், அந்த மாவிருந்தே கொஞ்சம் எடுத்து... சோள மாவு, வெறும் வாணயில் வறுத்த மைதா மாவு இவற்றைக் கரைத்து மொத்த மாவில் சேர்த்து விட்டால்... மாவு கெட்டியாகும். சுவையும் மாறாமல் இருக்கும்.

சப்பாத்தி, வடை, போண்டா, அதிரசம், அப்பம் போன்றவற்றுக்கான மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால்... ஃப்ரீஸரில் 20 அல்லது 30 நிமிடங்கள் திறந்தபடி வைத்தால் கெட்டியாகி விடும். அதை ஃப்ரீஸரிருந்து எடுத்த உடனே திட்டமிட்ட உணவுப் பொருளைத் தயாரித்து விடலாம்.

சாதம் குழைந்துவிட்டதா?

கரண்டியால் கிளறாதீர்கள். அப்படியே ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு ஆற விடுங்கள். பின், அதில் எண்ணெய் அல்லது வெண்ணெயைப் பரவலாக ஊற்றி, பாத்திரத்தை மேலும் கீழும் லேசாகக் குலுக்குங்கள். அல்லது ஒரு முள் கரண்டியால் குறுக்கும் நெடுக்கும் கோடு போடுவது போலக் கீறுங்கள். குழைந்த சாதம் கெட்டியாகிவிடும்.

சாதம் குழைந்துவிட்டால்... சாம்பார் அல்லது தயிர் சாதமாகவும் கலந்து பரிமாறி விடலாம். கொஞ்சம் சாதத்தை மேலும் மசித்து, கெட்டிப்பால், சர்க்கரை (அல்லது கண்டென்ஸ்டு மில்க்) சேர்த்து, பால் பாயசமும் தயாரித்து விடலாம்.

Trending News

Latest News

You May Like