அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு வாய்ப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர் அமுல் தபாரை நியமிக்க ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 | 

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு வாய்ப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர் அமுல் தபாரை நியமிக்க ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் உள்ள 9 நீதிபதிகளில், முக்கியமானவராக கருதப்படும் நீதிபதி கென்னடி, கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்தார். நாட்டின் தலையெழுத்தையே நியமிக்கும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளை, வழக்கமாக அந்நாட்டின் அதிபர் பரிந்துரை செய்வார். அவர் தகுதியானவர் தானா என நாடாளுமன்ற செனட் சபை உறுப்பினர்கள் நேர்க்காணல் நடத்தி உறுதி செய்வார்கள். ஒவ்வொரு அதிபரும் தனது கட்சியின் கொள்கைக்கேற்ப இடதுசாரி, வலதுசாரி கொள்கைகளை கொண்ட நீதிபதிகளை நியமிப்பார்கள். 

2016ம் ஆண்டு உச்ச நீதிமன்ற வலதுசாரி நீதிபதி ஸ்கலியா காலமானார். அவரது இடத்தை, ஓராண்டு கால தாமதத்திற்கு பிறகு ட்ரம்ப் அரசு மற்றொரு வலதுசாரி நீதிபதியை வைத்து நிரப்பியது. இப்போது இரண்டாவது நீதிபதியை நியமிக்கும் வாய்ப்பு ட்ரம்ப்புக்கு கிடைத்துள்ளது. வலதுசாரி நீதிபதியாக இருந்தாலும், இதுவரை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் பல விவகாரங்களில், நடுநிலையாக செயல்பட்டவர் நீதிபதி கென்னடி. இந்நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால், அவரது இடத்தை தீவிர வலதுசாரி நீதிபதியை வைத்து நிரப்ப ட்ரம்ப் அரசு திட்டமிட்டுள்ளது. அவ்வாறு தீவிர வலதுசாரி கொள்கைகள் கொண்ட நீதிபதி நியமிக்கப்பட்டால், கருக்கலைப்பு, ஓரினச்சேர்க்கையர் திருமண உரிமை, ஆகியவை பறிக்கப்படும் நிலை ஏற்படும். இதனால், அமெரிக்க அரசியலில் மிகப்பெரும் விவகாரமாக இந்த பதவி பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு வாழ்நாள் பணி உரிமை உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தற்போது தீவிர வலதுசாரி நீதிபதிகளை ட்ரம்ப் சந்தித்து இந்த பதவிக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வரிசையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க நீதிபதியான அமுல் தபாரை ட்ரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் அமர்த்தப்படுவது சரித்திர நிகழ்வு என்பதால், தபாரை ட்ரம்ப் தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP