Logo

தாம் எடுத்த முடிவில் பின்வாங்குகிறாரா சிறீசேனா?

இலங்கை உச்சநீதிமன்றம் கண்டிக்கும் முன்பாகவே, நாடாளுமன்றத்தை கலைக்கும் உத்தரவை திரும்பப் பெறுவது அரசின் கௌரவத்தை பாதுகாப்பதாக அமையும் என சிறீசேனா கருதுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.
 | 

தாம் எடுத்த முடிவில் பின்வாங்குகிறாரா சிறீசேனா?

இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்குமாறு தாம் பிறப்பித்த உத்தரவை, அதிபர் சிறீசேனா திரும்பப் பெறக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான வழக்கில், வரும் 7ம் தேதி இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. அந்தத் தீர்ப்பு தங்களுக்கு எதிராக வரும் என்ற கணிப்பில், உத்தரவை திரும்பப் பெறும் முடிவுக்கு சிறீசேனா வந்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ராஜபக்சேவை புதிய பிரதமராக கடந்த அக்டோபர் மாத இறுதியில் நியமித்தார் சிறீசேனா. இதைத்தொடர்ந்து, அரசுக்கு தேவையான பெரும்பான்மை பலத்தை திரட்டும் முயற்சியில் ராஜபக்சே ஈடுபட்டார். ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, புதிய தேர்தலுக்கான அறிவிப்பை சிறீசேனா வெளியிட்டார்.

ஆனால், இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடுத்தன. அதில், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு இடைக்காலத் தடை  விதித்த உச்சநீதிமன்றம், தனது இறுது முடிவை டிசம்பர் 7ம் தேதி அறிவிப்பதாகத் தெரிவித்தது. இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் இருமுறை நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டார். ஆனாலும் அவர் பதவி விலகவில்லை.

புதிய அரசுக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவும் இல்லாமல் போனதால், இலங்கை ரூபாயின் மதிப்பு மென்மேலும் குறைந்து வருவதாகவும், பங்குச் சந்தைகளும் வெகுவாக சரிந்துவிட்டன என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதே சமயம், சிறீசேனாவுக்கு எதிரான அரசியல் நெருக்கடிகளும் தொடர்கின்றன.

இப்படியொரு சூழலில், நாடாளுமன்றத்தை கலைத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், அது அரசுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று சிறீசேனா தரப்பினர் கருதுவதாகத் தெரிகிறது. இதனால், தனது உத்தரவை திரும்பப் பெறும் முடிவுக்கு சிறீசேனா வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிமன்றம் கண்டிக்கும் முன்பாகவே இத்தகைய முடிவை எடுப்பதால், அரசுக்கான கௌரவம் பாதுகாக்கப்படும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP