தீர்க்க சுமங்கலியாய் நிறைந்த செல்வத்துடன் வாழ வரலஷ்மி நோன்பு....

நித் தியசுமங்கலிகளான இவர்களை நினைத்து வழிபட்டு விரதம் இருந்தால் பெறுவதற்கரிய செல்வத்தைப் பெறலாம்.மஹா லஷ்மியின் கையில் எப்போதும் பூரண கும்பம் இருக்கும்...
 | 

தீர்க்க சுமங்கலியாய் நிறைந்த செல்வத்துடன் வாழ வரலஷ்மி நோன்பு....

பெண்கள் கடைப்பிடிக்கும் நோன்பு வகைகளில் மிக முக்கியமானதாக இரண்டை சொல்லலாம். ஒன்று கேதார கெளரி விரதம். மற்றொன்று, ஆடி மாதத்தில் வரும் வரலஷ்மி நோன்பு. சுமங்கலிப் பெண்கள் கடைப்பிடிக்கும் இந்த நோன்பு, மிகவும் விசேஷமானது. பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் குடும்பத்தில், புதிதாக திருமணம் முடிந்து வரும் பெண்ணை, இவ்விரதத்தைக் கடைப்பிடிக்க சொல்லி பழக்கப்படுத்துவார்கள்.

பிறந்த வீட்டில் வரலஷ்மி நோன்பு இருந்து, அவற்றைச் சிறப்பாக கொண்டாடினாலும், புகுந்த வீட்டில் இந்த நோன்பு இருந்தால் திருமணம் முடிந்த முதல் வருடம் வரும் இந்த நோன்பு, தலை நோன்பு என்று அழைக்கப்படுக்கிறது. தீர்க்க சுமங்கலியாக வாழ, பெண்கள் இந்த நோன்பை கடைப்பிடிக்கிறார்கள். பாற்கடலில் தோன்றிய லஷ்மி தேவி, விஷ்ணுவை மணந்து அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள்.

மகாவிஷ்ணு இராமராக அவதாரம் தரித்த போதும், சீதையாக பிறப்பெடுத்து அவருடன் காட்டிலும் துன்பத்தை பகிர்ந்து கொண்டாள். சிறந்த புதல்வனாக, நல்ல சகோதரனாக, நல்ல மனிதனாக, அன்பே உருவாக இருக்க இராமபிரான் வாழ்ந்த போது, தம்முடைய கணவனின் மனம் கோணாமல் இராமனின்  நல்வாழ்வை பெரிதாக நினைத்து வாழ்ந்தாள். இதன்படி, பெண்கள் அனைவரும் கணவனே முழுமுதல் தெய்வம் என்று நினைத்து தீர்க்க சுமங்கலிகளாக வாழவே இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.

அதர்வண வேதத்தில் மஹாலஷ்மியை தனலஷ்மி, தான்யலஷ்மி, தைரியலஷ்மி, ஜெயலஷ்மி, வீரலஷ்மி, சந்தானலஷ்மி, கஜலஷ்மி, வித்யாலஷ்மி என்று அஷ்டலஷ்மிகளாக பிரித்திருக்கிறார்கள். அஷ்டலஷ்மிகள் பக்தர்களுக்கு எட்டு விதமான செல்வங்களை வழங்குகிறார்கள். எல்லா லஷ்மிகளும் பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளத்தைக் கொண்டவர்கள். நித்தியசுமங்கலிகளான இவர்களை நினைத்து வழிபட்டு விரதம் இருந்தால், பெறுவதற்கரிய செல்வத்தைப் பெறலாம். மஹாலஷ்மியின் கையில் எப்போதும் பூரண கும்பம் இருக்கும்.

மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், வரலஷ்மி நமஸ்துப்யம் க்ருதியில் இந்த விரதத்தைப் பற்றி முழு மையாக பாடியிருக்கிறார். ஆவணி மாதம் பெளர்ணமி நாளுக்கு முந்தைய வெள்ளிக்கிழமைகளில், இந்த மகாலஷ்மி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆவணி மாதம் பெளர்ணமி நாளை பொறுத்து, இந்த விரதம் ஆடி அல்லது ஆவணி மாத வெள்ளிக் கிழமையில் கொண்டாடப்படுகிறது.

பெண்களுக்கு மாங்கல்ய பலத்தையும், நிறைந்த பதினாறு செல்வங்களையும் அருளும் மகாலஷ்மி நோன்பு நாளை கொண்டாடப்படுகிறது. புதிதாக மணம் ஆன பெண்களும், லஷ்மியை வழிபட்டு இந்த வருடம் முதல் உங்கள் நோன்பை தொடங்கலாம்.

மங்களகரமான விரதம், மனதுக்கு நிம்மதி தரும் விரதமும் கூட. இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கும் பெண்கள் அரிய பலனை பெற்றார்கள் என்கிறது பத்ம புராணம். இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றிடவும், செல்வங்கள் நிலைத்திடவும், தீர்க்க சுமங்கலியாய் வாழ்ந்திடவும், வரலஷ்மி நோன்பை கடைபிடியுங்கள்..

வரலஷ்மி நோன்பு எப்படி இருக்க வேண்டும்.  அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்…

 

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP