மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றிய சாய்பாபா

தனது பக்தர்களின் கண்ணீர் வேண்டுதலுக்கு சாய்பாபா செவிசாய்க்காமல் இருந்ததே கிடையாது. எத்தனையோ பேருக்கு, மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயில் இருந்தெல்லாம் விடுதலை வாங்கிக் கொடுத்திருக்கிறார் சாய்பாபா.

மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றிய சாய்பாபா
X

தனது பக்தர்களின் கண்ணீர் வேண்டுதலுக்கு சாய்பாபா செவிசாய்க்காமல் இருந்ததே கிடையாது. எத்தனையோ பேருக்கு, மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயில் இருந்தெல்லாம் விடுதலை வாங்கிக் கொடுத்திருக்கிறார் சாய்பாபா. ஜோஷி என்ற பக்தரின் மகள் மாலன்பாய். அந்தப் பெண்ணை எலும்புருக்கி நோய் பாடாய்ப்படுத்தியது மருத்துவர்கள் கை விட்டு விட்டார்கள். இறப்பு உறுதி என்பது மாலன்பாய்க்குத் தெளிவாகவே புரிந்து விட்டது.

எலும்பும், தோலுமாக இருந்த தன்னை, ஷீரடிக்குக் கொண்டு போய்,சாய்பாபா முன் கிடத்துமாறு தன் தந்தையிடம் அவள் கேட்டுக்கொண்டாள் . அப்படியே அவளை ஷீரடிக்குக் கொண்டுபோய், சாய்பாபா முன் கிடத்தினார்கள். அவளைப் பார்த்த சாய்பாபா, “இவளுக்கு வெறும் தண்ணீரை மட்டுமே கொடுத்து வாருங்கள். மறந்தும் வேறெதையும் கொடுத்து விட வேண்டாம் " என்று கூறினார். அதேபோலவே, அவளுக்குத் தண்ணீர் மட்டுமே கொடுத்து வந்த போதிலும், அடுத்த ஐந்தாவது நாள் மாலன்பாயின் உயிர் பிரிந்துவிட்டது. அவள் இறந்துவிட்டாள் ! கதறியழுத அவரது பெற்றோர், பின்னர் ஆசுவாச மடைந்து, மகளின் கடைசி காரியங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர்.

ஆனால், அதேவேளையில் சாவடியில் இருந்த சாய்பாபா வழக்கமான தனது பணியைக் கவனிக்காமல் அங்கேயே வீற்றிருந்தார். வெளியே பக்தர்கள் காத்திருந்தனர், சாய்பாபாவின் தரிசனத்திற்காக. ஆனால், சாய்பாபா சாவடியில் பெரும் கூச்சலிட்டுக் கொண்டு அங்கும் இங்கும் உலாத்தினார். தன் கையிலிருந்த கழியால் தரையில் ஆவேசமாக ஓங்கி அடித்து ஆர்ப்பாட்டம் செய்தவாறு இருந்தார். இவையெல்லாம் பக்தர்களை பிரமிக்கச் செய்தது.

சாய்பாபாவிற்கு என்ன ஆயிற்று ? ஏன் இப்படி நடந்து கொண்டிருக்கிறார் ? சற்று நேரத்தில் சாய்பாபா, அங்கிருந்து வெளியேறி, மாலன்மாய் உடல் கிடத்தப்பட்டிருக்கும் தனது பக்தரான தீட்சித் வீட்டிற்கு வந்தார். அப்போது, அந்த பெண்ணுக்குத் திடீரென்று மூச்சு வந்தது போலிருந்தது. உடல் அசைந்தது. மெல்லக் கண்களைத் திறந்து சுற்றுமுற்றும் பார்த்தாள் . அங்கிருந்தோருக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன ஆயிற்று? இறந்த இந்தப் பெண் மறுபடியும் உயிர்த்தெழுந்துவிட்டாளா ? எப்படி?

அப்போது மாலன்பாயே பேசினாள் ,"திடீரென்று இங்கு பிரசன்னமான கறுப்பு மனிதன் ஒருவன் என்னைத் தூக்கிக் கொண்டு எங்கோ சென்றான் .நான் பயந்து நடுங்கிப்போனேன். சாய்பாபாவை மனதிற்குள் பிரார்த்தித்தேன். என்னை அவனிடம் இருந்து காப்பாற்றுமாறு சாய்பாபாவிடம் மன்றாடினேன். உடனே அங்கு விரைந்து வந்த சாய்பாபா, அந்த கறுப்பு முரடனுக்குச் சரமாரியாகக் கசையடி கொடுத்தார். அடித்து உதைத்து அவனைத் துரத்திவிட்டார். அப்புறம் என்னை இங்கு மறுபடியும் கொண்டுவந்து விட்டார் " என்றாள். சாவடியில் சாய்பாபா நடந்து கொண்ட விதம் எதற்கென்பது இப்போது தான் அங்கிருந்தவர்களுக்குப் புரிந்தது.

ஓம் ஸ்ரீசாய்ராம் !!!

மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றிய சாய்பாபா

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

Tags:
Next Story
Share it