சிவராத்திரி விரதம் எப்படி இருந்தால் முழு பலன் கிடைக்கும்?!

எப்படி இருக்க வேண்டும்,சிவராத்திரி விரதம்?

சிவராத்திரி விரதம் எப்படி இருந்தால் முழு பலன் கிடைக்கும்?!
X

கயிலாயத்தில் ஒரு முறை பார்வதி சிவபெருமானிடம், “இறைவா ! உங்களை எந்த நாளில் வழிபாடு செய்தால் மிகவும் உகந்தது? என்று கேட்டாள். சுவாமியும் உயிரினங்கள் உய்யும் பொருட்டு, மாசி மாதத் தேய்பிறையில் வரும் சிவராத்திரியே எனக்கு மிகவும் உகந்த நாளாகும். அந்நாளில் செய்யும் தீர்த்த ஸ்நானம், தூபதீபம், நிவேதனம், அபிஷேகம் ஆகியவற்றைக் காட்டிலும் விரதம் மேற்கொள்வதே எனக்கு ப்ரீத்தியானதாகும் என்றார். சிவம் என்றால் சுகம் என்று பொருள். மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும் குடும்பத்தில் ஈசனின் அருளால் சகல நன்மைகளும் பெருகும் என்பது நம்பிக்கை.

வீட்டில் சிவலிங்கமோ, நடராஜர் சிலையோ இருந்தால் வீட்டில் இருந்தபடியே நான்கு ஜாமமும் பூஜையும் அபிஷேகமும் செய்யலாம். வீ‌ட்டி‌ல் பூஜை செ‌ய்பவர்கள், மாலையில் தேக சுத்தி செய்துக் கொண்டு, சொல்லும் வாயும்,நினைக்கும் உள்ளமும் மணக்க நமசிவாயம் என்று சொல்லி நெற்றியில் திருநீறு அணிந்து, ஐந்தெழுத்து மஹா மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். அன்று பகல் முழுவதும் சாப்பிடாமல், மாலையில் எளிமையாக பழம், பால் மட்டும் அருந்தி பூஜையைத் துவக்க வேண்டும். ஆனால் நோயாளிகளும்,வயதானவர்களும் எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். மாலை 6.30 துவங்கி இரவு9.30 , நள்ளிரவு12.30 , அதிகாலை 3 மணி ஆகிய நேரங்களில் ஈசனுக்கு உகந்த வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்ட வேண்டும்.

நான்கு ஜாமங்களுக்கு இடைப்பட்ட நேரத்திலும், குடும்பத்துடன் பஞ்சாட்சர மந்திரமான சிவாயநம நமசிவாய என மந்திரங்களை சொல்லலாம். சிவ பெருமானின் சகஸ்ர நாமபாராயணத்துடன், வில்வ இலைகளைக் கொண்டு பூஜிக்க வேண்டும். பூஜை முடிந்தவுடன் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும் பூஜையும் செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவாலயங்களுக்கு சென்று,அங்கு லிங்கேசருக்கு நடக்கும் அபிஷேக‌ங்களு‌க்கான பொரு‌ட்களை வா‌ங்‌கி கொடு‌‌த்தும் பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம். மறுநாள் காலையில் அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானத்துக்கு பிறகே சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது நியமம்.

மகாசிவராத்திரியன்று இரவுப்பொழுதில் நான்குகாலஅபிஷேகம் சிவபெருமானுக்கு நடைபெறும். முதல் சாம பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா"சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். பஞ்சகவ்ய அபிஷேகத்துடன் ,சந்தனப்பூச்சு செய்து, வில்வம், தாமரை மலர்களால் அலங்காரம் செய்வித்து அர்ச்சனை செய்யப்படும். பச்சைப் பயிறுப் பொங்கல் நிவேதனமாக படைக்கப்படும். ருக்வேத பாராயணம் செய்யப்படும். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எத்தனையோ ஜென்மாக்களாக நம்மை தொடர்ந்து வரும் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.

இரண்டாம் சாம பூஜை , காக்கும் தேவன் ‘விஷ்ணு’ சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகப் பிரியனுக்கு அபிஷேகம் செய்யப்படும். பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு, வில்வார்ச்சனை செய்யப்படும். பாயாசம் நிவேதனமாகப் படைக்கப்பட்டு, யஜூர் வேத பாராயணம் செய்யப்படும். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.

மூன்றாம் சாம பூஜை, சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும்.தேன் அபிசேகம்செய்யப்பட்டு,பச்சைக் கற்பூரம் சார்த்துதல் நடைபெறும். மல்லிகை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, வில்வத்தினால் அர்ச்சனை செய்யப்படும். எள் அன்னம் நிவேதனமாகப் படைக்கப்பட்டு, சாமவேத பாராயணம் செய்யப்படும். இது சிறப்புமிக்க லிங்கோத்பவ காலம்என்பதால் மகத்துவம் வாய்ந்தது. இந்த காலத்தில் தான் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது. இக் காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் ஆதி பராசக்தி நம்மை காத்து அருளுவாள்.

நான்காம் சாமத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்கள் முதலான அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக சொல்லப்படுகிறது. கரும்புச்சாற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, நந்தியாவட்டை மலர் சார்த்துதல் நடைபெறும். அல்லி நீலோற்பலம் நந்தியாவட்டம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அர்ச்சனை செய்யப்படும். சுத்தான்னம் நிவேதனமாக படைக்கப்பட்டு,அதர்வன வேத பாராயணம் செய்யப்படும்.

ஒவ்வொரு காலத்திலும் சிவபெருமானின் ஒவ்வொரு கோலத்தை வழிபடவேண்டும் என்கிறார்கள் ஆன்றோர் பெருமக்கள். முதல்காலத்தில் பாலமுருகனை நடுவில் அமர்த்தி உமாதேவியுடன் , சிவபெருமான் குடும்ப சமேதராய்க் காட்சிதரும் சோமாஸ்கந்தரை வழிபட வேண்டும். இரண்டாம் காலத்தில் தென்முகக்கடவுளான, ஞானத்தின் ஸ்வரூபமான தட்சிணாமூர்த்தியை வணங்கவேண்டும். மூன்றாம் காலத்தில் ஈசன் கருவறையின் பின்புறமுள்ள லிங்கோத்பவரை தரிசிக்கவேண்டும். நான்காம் காலத்தில் ரிஷபவாகன மூர்த்தியான சந்திரசேகரரை வழிபடவேண்டும்.

சிவராத்திரியன்று இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் இறை சிந்தனையில் மனதை செலுத்தி, பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவ ராத்திரி விரதம் யார் வேண்டுமானாலும் உள்ள சுத்தியோடு இருக்கலாம். அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் ,எப்பிறவியில் செய்த பாவமாக இருந்தாலும் , அர்பணிப்போடு இருக்கும் சிவராத்திரி விரதத்தினால்அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வதால் ஏற்படக்கூடிய பலன்களை சிவராத்திரி விரதத்தை கடை‌பிடி‌ப்பத‌ன் மூலம் அடையலாம்.மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வ அர்ச்சனை செய்து, சிவ கடாக்ஷம் பெற்று நம் பாவங்கள் தொலைவோம்.

newstm.in

Tags:
Next Story
Share it