Logo

நன்மையோ… தீமையோ…இறைவனிடம் விட்டுவிடுங்கள்…

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று சொல்வார்கள் பெரியவர்கள். வாழ்வில் எது நடந்தாலும் அவை இறைவனின் அனுமதி பெற்ற பிறகே நடக்கிறது. இறைவன் முன்னிலையில் நாம் அனைவருமே குழந்தைகள்.
 | 

நன்மையோ… தீமையோ…இறைவனிடம் விட்டுவிடுங்கள்…

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று சொல்வார்கள் பெரியவர்கள். வாழ்வில் எது நடந்தாலும் அவை இறைவனின் அனுமதி பெற்ற பிறகே நடக்கிறது. இறைவன் முன்னிலையில் நாம் அனைவருமே குழந்தைகள். குழந்தையைப் பாதுகாக்கும் இறைவன் எப்படி நம் வேண்டுதலுக்கு செவிசாய்க்காமல் இருப்பான்? நம் வேண்டுதலின் பின்னால் இருக்கும் விபரீதங்களையும், விளைவுகளையும் அறிந்து வைத்திருப்பவன் அவனே என்பதை விளக்கும் கதை இது.

ஒரு சிறிய கிராமம் ஒன்றில் ஏழைத்தாய் ஒருத்தி தன் சிறிய மகனுடன் வாழ்ந்து வந்தாள். உறவென்று யாரும் இல்லாத நிலையில் தன் குழந்தையிடம் அதிகம் பாசத்தைக் காட்டி வளர்த்து வந்தாள். குழந்தையின் தேவையை கவனித்தபடி மறுபுறம் இறைபக்தியிலும் சிறந்து விளங்கினாள். கடவுளிடம் எப்போதும் எதையும் கேட்க மாட்டாள். தனக்கென்று வகுத்தது நிச்சயம் கிடைக்கும். எல்லாமே இறைவனுக்குத் தெரியும் என்னும் மனோபாவத்துடன் அமைதியாக வாழ்க்கையை கடத்தினாள்.

ஒருநாள் குழந்தையுடன் விறகு வெட்ட காட்டிற்கு சென்றாள். இவள் மரத்தை வெட்டிக்கொண்டிருந்தபோது விளையாடிக்கொண்டிருந்த பிள்ளையை நாகப் பாம்பு தீண்டிவிட்டது. செய்வதறியாமல் திகைத்தாள். பிறகு ஆலயத்தை நோக்கி ஓடினாள். இறைவா.. என்ன கொடுமை இது.. வாழ வேண்டிய வயதில் குழந்தையின் உயிரை பறித்துவிட்டாயே நான் என்ன செய்வது? நீ என்னுடைய நலம் நாடி செய்திருக்கிறாய் என்பதை உணர்ந்துகொண்டேன். ஆனாலும் மனம் அமைதியடையவில்லையே என்று அரற்றினாள்.

மகனின் ஈமச்சடங்கு முடிந்தது. அழுது அரற்றாமல் இருந்த அவளைக் கண்ட ஊர்மக்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு குழந்தையை பறிகொடுத்துவிட்டு எப்படி உன்னால் இயல்பாக இருக்க முடிகிறது என்று கேட்டார்கள்.  கூடவே  “இறைவா இறைவா என்று உருகினாயே பார்த்தாயா உன்னை மேலும் மேலும் துன்புறுத்தும் கடவுளை இனியேனும் நினையாதே” என்றார்கள். இவள் புன்னகையுடன் கடந்துசென்றாள்.  

இதைக் கண்டதும் தேவதூதர்களுக்கு சந்தேகம் ஆகிவிட்டது. எப்படி இவளால் இருந்த ஒரு துணையையும் இழந்து நடமாட முடிகிறது என்று. அப்போது அங்கு வந்த சித்திரகுப்தன் இவர்களது சந்தேகத்தைப் புரிந்து தீர்த்து வைத்தான். “இறந்த குழந்தை உயிரோடு இருந்திருந்தால் வளரும் போது உலகில் இருக்கும் அனைத்து கெட்ட பழக்கங்களையும் பழகி தாயையும் கொடுமைப்படுத்தியிருப்பான். ஆனால் இப்போது அவன் வேறு ஒரு கருவறையில் வளர்ந்து வருகிறான். இம்முறை அவன் பிறப்பில் முக்தி நிலையை எய்துவான். செய்வதற்கரிய அரிய செயல்களை செய்து மக்களை காப்பாற்றுவான்.

நீதி நெறி தவறாமல் ஆட்சி புரியும் இடத்தில் அமர்வான்” என்றவர் தேவர்கள் தெளியாததைக் கண்டு “ அந்த தாயை பற்றி யோசிக்கிறீர்களா? அவர் மகான்களையும் விட பக்குவமடைந்தவள். இறைவன் எதை செய்தாலும் அது நன்மைக்கே என்று நினைப்பவள். அவள் வேண்டுதலில்தான் அந்தக்குழந்தையின் உயிரை எடுக்க வேண்டியதாயிற்று.. ’என் மகனை காப்பாற்றுங்கள். அவன் வளர்ந்து நல்ல மகனாய் நல்ல மனிதனாய் வாழ வேண்டும் இல்லையென்றால் அவன் விதிப்படி நடக்கட்டும’ என்று மனமார இறைவனை சரணடைந்தாள். அவள் விருப்பத்துக்கேற்ப அவனது உயிரை நீக்கினோம். அவளும் இறைவன் மீது நம்பிக்கை வைத்து சரணடைந்து விட்டாள்” என்றார்.

அதனால் தான் நன்மையாக இருந்தாலும்  தீமையாக இருந்தாலும் இறைவனின் பொறுப்பில் விட்டுவிட்டு மனதை அமைதியாக  வழி நடத்தி செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள் ஆன்மிக பெரியவர்கள்.

 

newtm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP