ஆன்மீக கதை – யார் சுமப்பார் நம் பாவத்தை ?

ஆன்மீக கதை – யார் சுமப்பார் நம் பாவத்தை ?

ஆன்மீக கதை – யார் சுமப்பார் நம் பாவத்தை ?
X

நாம் செய்யும் பாவங்கள் நம்மை தாக்கும் என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால் செய்யும் பாவங்களின் பலனை பங்குபோட எல்லோருமல்ல ஒருவருமே விரும்பமாட்டார்கள் என்பது தான் உண்மை. திருடன் ஒருவன் இருந்தான். அவன் வழிப்போக்கர்களிடம் பொருள்களை கொள்ளை யடித்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தான். அவன் களவாடிய பொருள்களை அடைவதற்காக ஒரு கூட்டமே அவனைச் சுற்றி இருந்தது. அவன் செய்யும் தொழில் எல்லோருக்கும் தெரியும் என்றாலும் யாரும் அவனை எதுவும் கேட்கவில்லை. அவர்களுக்குத் தேவையானதை அனைவரும் தயங்காமல் கேட்டு பெற்றுக்கொண்டனர்.

ஒவ்வொருமுறை அவன் தொழிலை முடித்து வீட்டுக்கு திரும்பியதும் அவனது கூட்டாளிகளுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு வீட்டுக்கு திரும்புவான். அவனது பெற்றோர்களும், மனைவியும், பிள்ளைகளும் இவனுக்காக காத்திருப்பார்கள். இவன் தான் திருடனாக இருந்தான். இவன் பிள்ளைகளைப் படிக்க வைத்தான். நான் செய்வது பாவத்தொழில். என்னைப் போல் அல்லாமல் நீங்கள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள் என்று சொல்வான். ஒரு முறை காட்டில் இரவு நேரத்தில் வந்த பயணிகளிடம் வழிப்பறி செய்தவனை அந்தக் கும்பல் விரட்டியது. சுற்றிலும் விரட்டிய கூட்டத்திலிருந்து தப்பிக்க வழியின்றி ஒரு முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலமானான். இரண்டு நாட்களாக அவனை வலைவீசி தேடியது அந்த கும்பல். வெளியே வர வழியின்றி முனிவரிடமே இருந்தான். அவரை கண்டதும் தான் ஒரு திருடன் என்பதையும், தன்னிடம் பொருள்களைப் பறிகொடுத்த கும்பல் தன்னை தேடுவதாகவும் கூறினான். முனிவர் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

மறுநாள் முனிவர் அவனிடமிருந்து அந்தப் பொருள்களைப் பெற்று அந்தக் குமபலை கண்டு அவர் களிடம் கொடுத்தார். ”அந்தத் திருடன் எங்கே?” என்றார்கள். ”அவன் தான் செய்த தவறை உணர்ந்து விட்டான். அவனை விட்டுவிடுங்கள்” என்றார். ”நீங்கள் சொல்லியதால் அவனை நாங்கள் தண்டிக்கவில்லை. இனியும் அவனை இப்பாவத்தொழிலை செய்ய சொல்லாதீர்கள். எங்கள் பொருள்கள் கிடைத்ததற்காக அவனுக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம்” என்று விடைபெற்றனர். அத்தனையும் மறைந்திருந்து கேட்டான் அந்தத் திருடன்.முனிவர் அவனைஅழைத்து ”உன் தவறை இப்போது உணர்ந்தாயா? நீ செய்யும் தொழில் உன் வீட்டுக்கு தெரியுமா? உன் வீட்டில் தடுக்கவில்லையா ?” என்று கேட்டார். ”அவர்களுக்கு தெரியும்.. மற்றவர்களின் துன்பத்தில் இன்பம் காணும் உன்னை கடவுள் நிச்சயம் தண்டிப்பார். நீ ஒவ்வொரு முறை மற்றவர்கள் பொருளை அபகரிக்கும் போதும் உனக்கான பாவக்கணக்கு கூடிகொண்டே போகும். இந்த பாவக்கணக்கை அவர்களும் பங்கு போடுகிறீர்களா என்று கேட்டு வா...” என்றார்.

”இதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். அவர்களைக் காப்பாற்றதான் நான் இத்தொழிலில் ஈடு படுகிறேன். அதனால் அவர்களும் இதை ஏற்றுக் கொள்வார்கள் ” என்றான். ”சரி இன்று வெறுங்கையுடன் வீட்டுக்கு போய் நாளை என்னிடம் வா என்ன நடந்தாலும் எனக்கு தெரிவிக்க வேண்டும்” என்றார். அவரிடம் சம்மதம் தெரிவித்து வீட்டுக்கு சென்றான். வீட்டுக்குத் திரும்பிய திருடனை வரவேற்க அவனது கூட்டாளிகள், குடும்பத்தினர் காத்துக் கொண் டிருந்தனர். வெறுங்கையுடன் வந்த அவனை கண்டதும் அனைவரது விழிகளும் ஏமாற்றத்தில் மிதந்ததைக் கண்டான். அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் நடந்ததைக் கூறினான். ”நான் கஷ்டப் பட்டு என் உயிரை பணயம் வைத்து பொருளை ஈட்டி வருகிறேன். என் மீது ஏறும் பாவக் கணக்கில் நீங்களும் பங்கு கொள்ள விரும்புகிறேன்” என்றான். சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது. முதலில் கூட்டாளிகள் அவனிடம் வந்து நீ ஆரம்பத்திலேயே இதைப் பற்றி சொல்லியிருந்தால் நாங்கள் உன்னிடம் எதையும் பெற்று இருக்க மாட்டோம். இனிமேல் உனக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் வேண்டாம் என்று வெளியேறிவிட்டார்கள். பெற்றோர்களிடம் வந்தான். ”என்னைக் காப்பாற்ற வேண்டியது உன்னுடைய கடமை. அதைத் தான் நீ செய்கிறாய்? அதனால் உன் பாவக்கணக்கில் எங்களைக் கூட்டு சேர்க்காதே” என்றார்கள். அடுத்ததாக மனைவியிடம் வந்தான் ”என்னில் பாதி நீ... என் சுகதுக்கங்களில் உனக்கும் சரிபாதி பங்குண்டு. அதனால் என் பாவக்கணக்கில் நீயும் பாதி எடுத்துக்கொள்கிறாயா?” என்றான். ”அது எப்படி .... மனைவியை கண்கலங்காமல் காப்பது கட்டியவனின் பொறுப்பு. உன்னிடம் நான் நேர்மையாக இருக்கிறேன். குழந்தைகளைப் பெற்று அவர்களையும், உன்னை பெற்றவர்களையும் பார்த்து கொள்கிறேன். என் கடமை இதோடு முடிந்தது என்றாள். பிள்ளைகளைப் பார்த்தான். எங்களை வளர்க்கும் பொறுப்பு உங்களுடையது தானே.. அதை தான் செய்கிறீர்கள். நாங்கள் உங்களை இத்தொழிலில் ஈடுபட சொல்லவில்லை. நீங்களாக ஏற்றுக்கொண்ட இத்தொழிலின் மூலம் கிடைக்கும் பாவக்கணக்கு உங்களையே சாரும்” என்றார்கள்.

முனிவரின் இருப்பிடத்தைத் தேடி வந்தான் திருடன். ”நீங்கள் சொன்னது சரியாயிற்று சாமி.. என் பாவக் கணக்கை ஏற்றுக்கொள்ள யாருமே முன் வரவில்லை. மற்றவர்களின் துன்பத்தில் இன்பத்தைக் கண்ட எனக்கு இது தேவைதான். இனி நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். தவறை உணர்ந்த மறுநிமிடம் இறைவன் உனக்கு துணையாகிவிட்டான். ”நீ மற்றவர்களுக்கு துணையாக இரு” என்றார். அன்றிலிருந்து அந்தக் காட்டிலேயே தங்கி வழிப்போக்கர்களுக்கு பாதுகாப்பாக இருந்தான். அவர்கள் தரும் உணவை உண்டான். பொருள் கொடுத்தாலும் எனக்கு தேவை பசியாறும் அளவு உணவு மட்டுமே. அதை இறைவன் உங்கள் மூலமாய் இந்த வேளை எனக்கு அருளியிருக்ககிறான் என்று அன்புடன் மறுத்துவிடுவான். அவனது பாதுகாப்பு நாளடைவில் மக்களிடம் பரவியது.காட்டின் எல்லைச்சாமியாக அவனை போற்றினார்கள் மக்கள். இறைவனின் அருளைப் பெற்று இறைவனடி சேர்ந்தான் திருடனாக இருந்தவன்.

படைத்தவனுக்கு தெரியும் நம்மை நல்வழியில் அழைத்துச்செல்ல.. எப்போதும் இறைவனை நினைத்திருந்தாலே அதற்கான பாதையையும் நமக்கு காட்டுவான் இறைவன்.

Next Story
Share it