Logo

சாய்பாபாவின் நல்லடக்கம் - பாகம்.17

முரளிதர் என்ற ராதாகிருஷ்ணன் மூலஸ்தானம் அமைக்கப்பட்ட வேண்டிய இடத்தில் சாய்பாபாவின் பூத உடல் ஆக, “சாய்பாபா முரளிதர் ஆனார்”
 | 

சாய்பாபாவின் நல்லடக்கம் - பாகம்.17

சாய்பாபாவின் மரணம் பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியதைவிட மற்றொரு துன்பகரமான நிகழ்ச்சி நடந்தது தான் சோதனை.

சாய்பாபாவின் உடலை எங்கு நல்லடக்கம் செய்வது ?

மரத்தைத் தழுவும் தறுவாயில் தகடிவாடாவின் எழுப்பப்பட்ட கல் கட்டிடத்தின் நடுவே குழி தோண்டுமாறு சாய்பாபா உத்தரவிட்டது ஷாமா பாட்டீல் என்ற பக்தரின் மனதில் ஒடியது. அது ,அவரின் பூத உடலை நல்லடக்கம் செய்வதற்கான சாய்பாபாவின் உத்தரவு என்பதில் அசைக்க முடியாத உறுதி அவருக்கு இருந்தது.

ஆகவே, அனைவரிடமும், சாய்பாபாவின் உடலை தகடிவாடாவில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்பதை அழுத்தமாகத் தெரிவித்தார். அதனை அவரது பக்தர்கள் பலரும் ஆமோதித்தனர்.  ஆனால் ,அவ்வூர் முஸ்லிம் அன்பர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தனர் . தகடிவாடாவில் அடக்கம் செய்வதற்குத் தங்களின் கடும் எதிர்ப்பையும் வெளியிட்டனர் . மாறாக, தங்கள் இன வழக்கப்படி ஊரின் திறந்தவெளியில் சாய்பாபாவின் உடலை நல்லடக்கம் செய்வதே சரி என்ற வாதத்தை அவர்கள் எழுப்பினர் . இதனை ஏற்காமல் வேறு எங்காவது அவரது உடலை நல்லடக்கம் செய்வதைத் தங்களால் ஏற்க முடியாது என்பதிலும் அவர்கள் பிடிவாதமாக இருந்தனர்.  இது ஏனைய பக்தர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது .

சாய்பாபாவின் உடலை நல்லடக்கம் செய்வதில் இரு கோஷ்டிகளாக அம்மக்கள் பிரிந்து தர்க்கத்தில் ஈடுபட்டதால் நல்லடக்கம் செய்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டது.  இந்த விவாதம் முடிவில்லாமல் நீண்டது மணித்துளிகள் போய்க்கொண்டே இருந்தன . சாய்பாபாவின் பூத உடல் அசைவின்றி அங்கேயே கிடத்தப்பட்டிருந்தது இதனால் அங்கு வழக்கமாக நடைபெறும் பூஜைகள் கூட நடத்தப்படாமல் ஸ்தம்பித்தது . பக்தர்கள் அனைவரும் மனத்தாங்கலுடன் வருத்தம் தோய்ந்தவர்களாக இரவும் பகலுமாய் மாறி மாறி கணவிழித்துக் காத்திருந்தனர் .  முடிவு காணப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டுக் கொண்ட இருந்தது .

அப்போது ,லட்சுமணன் மாமாவின் கனவில் சாய்பாபா தோன்றினார் . அவருக்கு கட்டளையும் இட்டார் ."சாய்பாபா சாகேப் ஆகிய நான் இறந்துவிட்டதாக அனைவரும் நினைக்கின்றனர் . அது உண்மையே .இனி அவர் வரமட்டார் .அதற்காக நீ ஏன் பூஜைகள் செய்வதை நிறுத்த வேண்டும்? உன் வழிபாட்டைத் தொடர்ந்து நடத்து அதற்கு எந்தத் தடையும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் .அதனால் யாருக்கும் தீங்கு ஏற்படாமலும் நான் கவனித்துக் கொள்கிறேன். போ,உன் கடமையைச் செய் "என்றார்.

லட்சுமணன் மாமா என்பவர் சாய்பாபாவின் விசுவாசி.அவர் மீது தீவரப் பற்று கொண்டவர் . வைதிகப் பிராமணர் .அந்தக் கிராமத்தின் ஜோசியரும் கூட.  உடனடியாக அங்கு பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர் அவர். அங்கு கூடியிருந்த பக்தர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சாய்பாபாவின் பூத உடலை நல்லடக்கம் செய்யாமல் பூஜை செய்வது சரியல்ல என்பது அவர்களின் வாதம். ஆனால், லட்சுமணன் மாமா ,தன் கனவில் சாய்பாபா தோன்றி இவ்வாறு செய்யுமாறு தனக்கு கட்டளையிட்டதை விவரித்ததும் அனைவரும் அடங்கிப் போயினர் தங்கள் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டனர் . ஆகவே ,பூஜைகள் வழக்கம் போல நடைபெற்றன .

ஆனால் நல்லடக்கம் செய்வதில் ஏற்பட்ட கருத்து மோதல்கள் மட்டும் முடிவின்றி அனுமார் வால் போலத் தொடர்ந்து கொண்டே போனது. அப்புறம் இறுதியாக அனைவரும் ஒரு சுமுகமான முடிவிற்கு வந்தனர் . சாய்பாபா உடலை எங்கு அடக்கம் செய்வது என்று அவ்வூர் மக்களிடையே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி ,முடிவெடுப்பது என்று தீர்மானித்தார்கள். அதுபோலவே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவு?

மூன்றில் இரண்டு பங்கு பேர் சாய்பாபாவின் விருப்பப்படி தகடிவாடாவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட வேண்டும் என்று வாக்களித்தனர். அங்கே ஜனநாயகம் வென்றது . இதற்குள் சாய்பாபா உயிர்பிரிந்து 36 மணி நேரங்கள் ஆகிவிட்டிருந்தது. இதனால், அவரது உடல் என்ன நிலைமையில் இருக்குமோ என்ற அச்சமும் கவலையும் அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்தியது . இப்படிப்பட்ட பயத்துடனேயே அவரது உடலைக் கொண்டு செல்வதற்காக பக்தர்கள் தூக்க முற்பட்டனர். என்ன ஆச்சர்யம் சாய்பாபா உடல் உறக்கத்தில் இருப்பவரின் உடல் போல அப்படியே இருந்தது சிறிதளவுகூட விறைக்கவில்லை . அவரது கைகள், கால்கள், தலை எல்லாமே உயிருள்ளவரின் உடல் உறுப்புகள் போல வளைந்து கொடுத்தன . அவரின் கஃப்னி உடைகூட மயக்கத்தில் இருப்பவரிடம் துணியைக் கழற்றி எடுக்கிறவிதமாகவே எடுக்க முடிந்தது. வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை.

இது அங்கிருந்த அனைவரையுமே வியப்படையச் செய்தது.இது எப்படி சாத்தியம்? இதென்ன லீலை ? மெய்சிலிர்த்து போனார்கள் அனைவரும். புதன்கிழமை மாலை சாய்பாபாவின் திருமேனி ஷீரடி வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது அவரது உடலுக்குச் செய்ய வேண்டிய அனைத்து சடங்குகளும் சம்பிரதாய முறைப்படி செய்யப்பட்டது.

தகடிவாடாவில், ராதாகிருஷ்ணன் சுவாமியின் கோயில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட அதே இடத்தில் சாய்பாபாவின் உடல் வைக்கப்பட்டது . பக்தர்கள் அனைவரும் சாய்பாபாவை நினைத்து உருகி பஜனைகள் பாட ,மொத்த பக்தர்களும் கண்களில் வழிந்தோடும் கண்ணீரை அடக்க முடியாமல் வழியவிட ,”சாய்பாபா ““சாய்பாபா “என்ற கூக்குரல் அந்தப் பகுதி முழுவதும் நிறைந்திருக்க . மகான் சாய்பாபாவின் பூத உடல் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

முரளிதர் என்ற ராதாகிருஷ்ணன் மூலஸ்தானம் அமைக்கப்பட்ட வேண்டிய இடத்தில் சாய்பாபாவின் பூத உடல் ஆக, “சாய்பாபா முரளிதர் ஆனார்” ! அந்த இடம் சாய்பாபாவின் கோவிலாக இன்றளவும் இருந்து வருகிறது. பக்தர்கள் மெய்மறந்து சாய்பாபாவைத் தரிசித்து சகல செளபாக்கியங்களையும் அடையப் பெறுகின்றனர்.

ஷீரடியில் சாய்பாபா மூட்டிய, “யாகக் குண்டம்” இன்றளவும் அணையாமல் யாகம் வளர்க்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்தக் குண்டத்தில் உள்ள சாம்பலே இன்றும் சாய்பாபாவின் பிரசாதமாகப் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதனை ,ஏற்று அணிந்து கொள்ளும் பக்தர்களின் வாழ்வும் சிறப்புற்று விளங்குகிறது.

சாய்பாபாவின் நல்லடக்கம் - பாகம்.17

     வி. ராமசுந்தரம்

ஆன்மீக எழுத்தாளர்

EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP