குழந்தையை காப்பாற்றிய சாய்பாபா!

நெருப்பில் விழுந்த பக்தரின் குழந்தையை யாக குண்டத்தில் கையை விட்டு காப்பாற்றிய சாய்பாபா..

குழந்தையை காப்பாற்றிய சாய்பாபா!
X

ஒரு நாள் ஷீரடியில் உள்ள துவாரகா மயியில் வழக்கம் போல சாய்பாபா அமர்ந்திருக்கிறார் . சுற்றிலும் ஆர்வத்துடன் சூழ்ந்திருக்கும் பக்தர்களுக்குப் போதனை வழங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு முன்பாக எப்போதும் போல் யாக குண்டத்தில் நெருப்பு புகைந்து கொண்டிருக்கிறது. திடீரென்று சாய்பாபா யாரும் எதிர்பாராத ஒன்றை அங்கு செய்தார். யாக குண்டத்தின் நெருப்பிற்குள் தன் கையை நுழைத்தார் .
பக்தர்கள் பதறிப்போனார்கள் ஏன் இப்படி?. சாய்பாபாவிற்கு என்ன ஆயிற்று? அலறியடித்துக் கொண்டு ஓடிப்போய் சாய்பாபாவை பின்னால் இழுத்தார்கள். ஆனால், அதற்குள் நெருப்பு சாய்பாபாவின் கையில் தன் முத்திரையைப் பதித்து விட்டது. சாய்பாபாவின் திருக்கரத்தில் பெரிய கொப்பளம் ! உடனே அதற்குத் தேவையான முதலுதவி சிகிச்சை அளிப்பதில் பக்தர்கள் சிலர் முனைந்தனர்.

ஆனால், சாய்பாபா அதற்காகக் கவலைப்படாமல் மிகவும் அமைதியாகவும் ஒரு வித நிம்மதியாகவும் காணப்பட்டார். இதைப் பார்த்த சிலர், தீக்குள் கையை நுழைத்ததற்கான காரணத்தை அவரிடம் கேட்டனர். "தொலைதூரத்தில் என் பக்தரின் குழந்தை ஒன்று நெருப்பில் விழப்பார்த்தது. அதனைத் தடுத்து நிறுத்தி விட்டேன் " என்றார் சாய்பாபா நிம்மதி கலந்த சந்தோஷமாய்.

என்ன சொல்கிறீர்கள் சாய்பாபா? " என்று குழப்பத்தோடு அனைவரும் கேட்டனர். "எனது பக்தரின் மனைவி, தன் குழந்தையை அடுப்பு அருகே வைத்துக் கொண்டு ஏதோ செய்து கொண்டிருந்தாள். அப்போது யாரோ அவளை அழைக்க என்ன வென்று பார்ப்பதற்காகச் சென்றாள் . ஆனால் நெருப்பு அருகே தனது குழந்தை இருப்பதை மறுத்துவிட்டாள் . அவள் திரும்பி வருவதற்குள் அந்தக் குழந்தை நெருப்பை விளையாட்டுப் பொருளாகக் கருதி அதனுள் விழப்பார்த்தது . எனது பக்தரின் குழந்தை ஆயிற்றே !

முடிந்த அளவிற்கு ஆபத்து நேரத்தில் உதவி செய்ய வேண்டியது என் கடமையல்லவா! அதனால், தான் எனது கையைச் சுட்டுக் கொண்டு அந்தக் குழந்தையைக் காப்பாற்றினேன் " என்றார் சாய்பாபா. இது பக்தர்கள் பலருக்கு ஆச்சரியமாக இருந்தாலும் சிலர் மட்டுமே சாய்பாபாவின் இந்தப் பேச்சை நம்பினார்கள். பலரும் இது உண்மையாக இருக்குமா என்ற சந்தேகத்துடனேயே தங்களுக்குள் கிசுகிசுத்தனர். ஆனால் ,சில தினங்களுக்குப் பிறகு, அந்தப் பெண் சாய்பாபாவைப் பார்க்க வந்திருந்த பொழுது தான், இது அப்பழுக்கற்ற உண்மை என்பது அனைவருக்கும் தெரிந்தது. அனைவரும் பிரம்மித்து போனார்கள் ..
குழந்தையை காப்பாற்றிய சாய்பாபா!
டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

Next Story
Share it