பார்வையை தர மறத்த சாய்பாபா
ஒரு சமயம் பார்வை இழந்த பக்தன் ஒருவன் ஷீரடிக்கு வந்திருந்தான். சாய்பாபாவை தரிசனம் செய்து, தனக்கு பார்வை கிடைக்க அருள்புரியுமாறு வேண்டினான் . ஆனால், சாய்பாபா அவனது வேண்டுதலுக்கு செவி சாயிக்கவில்லை . பார்வை வழங்க மறுத்துவிட்டார்.
இதனால், மனம் வேதனை அடைந்த அவன், மசூதியில் இருந்த சாய்பாபாவின் பக்தரான “உபாசினி மகராஜிடம்” சென்றான். தனது ஆசையை சாய்பாபாவிடம் எடுத்துச் சொல்லுமாறு அவரிடம் வேண்டினான்.
அவரும் அப்படியே சாய்பாபாவிடம் சென்று அவனுக்குப் பார்வை வழங்குமாறு வேண்டினார். ஆனால், சாய்பாபாவோ ,"இன்னும் சொற்ப நாட்களே உயிர் வாழப்போகும் அவனுக்குப் பார்வை கிடைக்கச் செய்வது சரியல்ல அப்படிச் செய்தால் அது வீண் ஆசைகளைத் தூண்டும் "என்று கூறினார்.
இது மகராஜூக்கும் அந்தப் பார்வை இழந்தவனுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது . எனினும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட மகராஜ் , அவனிடம்" சாய்பாபாவின் வாக்கு பொய்ப்பதில்லை . அதில் நிச்சயம் உண்மை இருக்கும். ஆகவே, நீ ஊனக் கண்ணைத் திரும்பப் பெறுவதற்கு ஆசைப்படுவது தேவையற்றது .ஞானக்கண்னைப் பெறுவதற்கு சாய்பாபாவின் அருளை நாடு "என்று யோசனை தெரிவித்தார்.
அவனும் அப்படியே சாய்பாபவிடம்," தனக்கு ஞானக்கண் வழங்கி அருளுங்கள் " என்று கேட்டான். உடனே, அவனைத் தம்முடன் அந்த மசூதியிலேயே ஓரு மாத காலம் தங்கி இருக்குமாறு உத்தரவிட்டார். அவனும் மகிழ்ச்சியோடு அங்கேயே தங்கினான் சாய்பாபாவின் அருளுரைகளைக் கேட்டு இன்புற்றான் . சரியாக ஒருமாதம் முடிவடைந்தது. திடீரென்று அவன் மரணமடைந்தான்.
சாய்பாபா சமாதிநிலை அடைந்த பிறகும் தன் பக்தர்களுக்கு உதவி வருகிறார் என்பதே உண்மை. இன்றளவும் ஷீரடியில் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றார்கள் . சாய்பாபாவின் சமாதியில் வீழ்ந்து வணங்கி தங்கள் கவலைகளுக்கும், கஷ்டங்களுக்கும் தீர்வைப் பெற்று நிம்மதி அடைகின்றனர்.
ஓம் ஸ்ரீசாய்ராம் !!!!!
டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com
newstm.in