இரண்டு மூன்றும் ரூபாயைக் காணிக்கையாக அளித்த சாய்பாபா
சாய்பாபாவின் அடியவர்களில் ஒருவர் ஹிரிச்சந்திர பிதலே. இவரது மகனுக்கு காக்கா வலிப்பு நோய் உண்டு. தன் மகன் அதிலிருந்து குணடமடைய எத்தனையோ மருத்துவர்களிடம் சென்று காண்பித்து வந்தார். ஆனால் குணம் மட்டும் ஆகவே இல்லை. இது போன்ற சூழலில் தான் ஒருநாள், சாய்பாபாவின் பக்தரான தாஸ்கானுவிற்கு சாய்பாபாவின் பக்திப்பாடல்களைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தான் சாய்பாபாவைப் பற்றி அவர் தெரிந்து கொண்டார். ஒருமுறை சாய்பாபாவை சீரடிக்குச் சென்று தரிசனம் செய்து வந்தால் தனது மகனின் காக்கா வலிப்பு நோய்க்கு விடிவுகாலம் வரும் என்ற நம்பிக்கை அவரிடம் துளிர்த்தது.
தனது குடும்பத்தாருடன் சீரடி புறப்பட்டுச் சென்றார். துவாரகா மயியில் சாய்பாபாவின் தரிசனமும் அவருக்குக் கிடைத்தது. தனது மகனின் நோயைத் தீர்க்குமாறு சாய்பாபாவிடம் பிதலே மன்றாடினார். அப்புறம் சாய்பாபாவின் உத்தரவின்பேரில், தனது மகனை அவர் பாதங்களில் படுக்கவைத்தார். அவனது உடல் முழுவதும் திடீரென்று தெப்பமாக வியர்த்துக் கொட்டியது. அவன் விழிகள் பம்பரமாகச் சுழன்று அனைவரையும் கலங்கடித்தது. கைகால்கள் வெட்டி இழுத்தன. இதுவரை கண்டிராத வகையில் அவனுக்கு காக்கா வலிப்பு உக்கிரமாக இருந்தது.
இதனைப் பார்த்ததும் பிதலேக்கு தனது மகனுக்கு என்னவோ ஆகிவிட்டது என்று பயந்து, பிதலேயின் மனைவி கூச்சலிட்டாள். கண்ணீர்.விட்டுக் கதறினாள். இதனைப் பார்த்த சாய்பாபா,'ஏன் அழுகிறாய்? உன் மகனுக்கு ஒன்றும் நேர்ந்துவிடவில்லை. உன் இருப்பிடத்திற்குக் கொண்டு செல்.அவன் நன்றாகிவிடுவான்'என்று தைரியம் அளித்தார். அப்படியே அவனை அவர்கள் கொண்டு சென்றனர். சாய்பாபா கூறியதுபோலவே ,அவனது வலிப்பு நோய் எங்கோ சென்று மறைந்து போய்விட்டது. நன்றாகி விட்டான். நல்ல குணம் கிடைத்துவிட்டது.
அதன் பின்னர், பிதலே சாய்பாபாவின் தீவிர பக்தராகி விட்டார்.அடிக்கடி ஷீரடிக்கு வந்து சாய்பாபாவைத் தரிசித்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட காலகட்டங்களில் ஒருநாள், சாய்பாபாவைத் தரிசித்துக் கொண்டிருந்தார் பிதலே. அப்போது பக்தர்களுக்குத் தட்சினை கொடுக்கும் பழக்கம் உள்ள சாய்பாபா, பிதலேக்கும் அன்று மூன்று ரூபாயைக் காணிக்கையாக அளித்தார். பின்னர் அவரிடம், "ஏற்கெனவே உனக்கு இரண்டு ரூபாய் அளித்தருக்கிறேன். இப்போது இந்த மூன்று ரூபாயைத் தருகிறேன். இவற்றை உன் பூஜை அறையில் பத்திரமாக வைத்து பூஜித்து வா" என்று கூறினார் சாய்பாபா. சாய்பாபாவின் முன்பாக “சரி சரி” என்று தலையை ஆட்டிய பிதலே, பின்னர் வெளியே வந்து யோசித்தார். சாய்பாபா எப்போது தனக்கு இரண்டு ரூபாய் கொடுத்தார்?'.
“யோசித்து யோசித்துப்” பார்த்தார் பிதலே.ஆனால் அதற்கான விடை அவருக்குத் தெரியவே இல்லை. குழப்பமாக இருந்தது. ஏதாவது காரணம் இல்லாமல் சாய்பாபா கூறியிருக்க மாட்டார்.ஆனால் அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி யாரிடம் கேட்டால் தெரியும்? Fதீவிர குழப்ப சிந்தனையுடன் வீட்டிற்கு வந்தார். இதற்கான விடையைத் தனது வயதான தாயிடம் கேட்டுப் பார்த்தால் என்ன என்று தோன்றிற்று. கேட்டார்.
அவரது தாயும் வெகுநேரம் யோசித்துப் பார்த்தார். அப்போது தான் சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்று அவரின் நினைவிற்கு வந்தது. பிதலே அப்போது மிகச்சிறிய பையன். அவனது தந்தை, அக்கல்கோட் என்னுமிடத்தில் இருந்த மகான் ஒருவரைத் தரிசிப்பதற்காகச் சென்றிருந்தார்.தரிசனம் முடிந்த பிறகு அந்த மகான் பிதலேவுக்கு இரண்டு ரூபாய் பணம் கொடுத்தது நினைவிற்கு வந்தது. ஆனால் அந்தப் பணத்தைப் பத்திரப்படுத்தி வைக்கவில்லை. அதனால் இப்போது அது எங்கே என்பது நினைவில்லை. தொலைந்து போயிருக்கவும் செய்யலாம் . தாய் இந்தச் சம்பவத்தைக் கூறியதும் பிதலேக்கு சாய்பாபாவின் ஞான சக்தியை அறிந்து உணர்ந்து வியந்து போனார் பிதலே.
டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
newstm.in