Logo

தண்டியடிகள் நாயனார்

எம்பெருமானின் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரி்த்தவாறு தலைமேல் கைகூப்பியவாறு நீரில் மூழ்கி எழுந்தார். எம்பெருமானின் அருளால் தண்டியடிகள் கண்பார்வையைப் பெற்றார். மனக்கண்ணில் தரிசித்த எம் பெரு மானின் வசிப்பிடமான திருக்கோபுரத்தைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
 | 

தண்டியடிகள் நாயனார்

எம்பெருமானின் அருளால் கண்பார்வையைப் பெற்ற நாயன்மார் தண்டியடிகள் நாயன்மார். சோழநாட்டில் திருவாரூர் என்னும் ஊரில் பிறந்த இவர் சிறுவயது முதலே எம்பெருமானை மனக்கண்ணில் கண்டு பக்தியுடன் விளங்கினார்.

தண்டியடிகள் வாழ்ந்த காலத்தில் சமணர்களின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. அவர்களது மதத்தைப் பரப்பும் பொருட்டு அவர்கள் செயல்பட்டார்கள். சைவ தொண்டர்களுக்கும் இடையூறுகள் விளைவித்தார்கள். தண்டியடிகள் எம்பெருமானை நினைத்து நீராடும் குளத்துக்கு அருகில் சமணர்கள் மடங்களைக் கட்டி வந்தார்கள். பெருகிவரும் கூட்டம் குளத்தை மூடிவிடுமோ என்று அச்சம் கொண்ட தண்டியடிகள் குளத்தை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

கண்ணற்ற நிலையிலும் குளத்தின் நடுவிலும், குளத்தைச் சுற்றிலும் அடையாளத்துக்கு கயிறுகள் நட்டு மண்ணை வெட்டி கூடையில் எடுத்து வந்து கொட்டினார். இதைக் கண்ட சமணர்கள் இவரையும் ஏளனத்துக்கு உள்ளாக்கினார்கள். நீங்கள் கண்பார்வை அற்றவர்கள்.  மண்ணைத் தோண்டி கொட்டுவதால் குளத்தில் இருக்கும் ஜீவராசிகள் இறந்துபோக வாய்ப்புண்டு என்றார்கள்.

அறத்திற்கு செய்யும் புறம்பான செயலை செய்துகொண்டிருக்கிறாய் என்று சமணர்கள் சொன்னாலும் ஜீவ ராசிகளைக் காக்கும் பொறுப்பு எம்பெரு மானுக்கே உரியது  அதனால் யாருக்கும் ஏன் உங்களுக்கும் கூட நல்லதே நடக்கும் என்றார். அப்போதும் அவரைக் கண்டு கொக்கரித்து நகைத்தார் கள். உனக்கு கண் மட்டும்தான் குருடு என்று நினைத்தோம். ஆனால் காதும் மந்தமாகத்தான் இருக்கிறது அதனால்தான் நாங்கள் சொல்வது உனக்கு ஏறவில்லை என்றார்கள்

எம்பெருமானின் திருவருளை திவ்வியமாய் மனக்கண்ணில் காண்கிறேன். அவனது நாமத்தை திருநாவால் சொல்லி மகிழ்கிறேன். ஆலயத்தில் ஒலிக்கும் வேத முழக்கங்களைக் கேட்கிறேன். எனது புலன்கள் அனைத்திலும் எம்பெருமானின் மகிமையை உணருகிறேன். ஆனால் நீங்கள் தான் கண்ணிருந்தும் குருடர்களாகவும், காதிருந்தும் செவிடர்களாகவும், வாய் இருந்தும் ஊமையாகவும் இருக்கிறார்கள் என்றார். அப்போதும் நகைத்து எள்ளியாடிய சமணர்களின் மீது வெறுப்பும் கோபமும் வந்தது.

தண்டியடிகள் சமணர்களிடம் எம்பெருமானின் அருளால் எனக்கு கண் ஒளி கிடைத்து தாங்கள் ஒளியிழக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்.  நாங்கள் இந்த ஊரை விட்டு ஓடிவிடுகிறோம் என்றவாறு அடியாரின் கைகளிலிருந்த கூடையை பிடுங்கி எறிந்தனர். தண்டியடிகள் மனம் உருகி  எம்பெருமானிடம்  தம் குறையைத் தீர்த்துவைக்குமாறு வேண்டினார். இறைவனும் கனவில் காட்சிதந்து உன் குறைகள் எனக்கு நேர்ந்த குறைகளே அதனால் கலங்காமல் இரு நான் தீர்த்துவைக்கிறேன் என்றார்.

அரசன் கனவில் காட்சி தந்து என் அன்பன் ஒருவன் எனக்காக குளத்தை  செப்பனிட்டு திருப்பணி செய்கிறான். அவனை சந்தித்து அவன் வேண்டி யதைச் செய்து கொடு என்றார்.மறுநாள் அரசனும் தண்டியடிகளைச் சந்தித்தான். தட்டுதடுமாறி குளத்தை ஆழமாக்கும் அவரைக் கண்டு வணங்கி இறைவனது கட்டளையை கூறினான். சமணர்கள்  செய்த இடையூறுகளை அரசனிடம் சொல்லி வருத்தப்பட்டார் தண்டியடிகள்.

அரசன் இடையூறு செய்த சமணர்களை அழைத்தான். அவர்களும் தாங்கள்  தண்டியடிகளை ஏளனம் செய்ததையும் இடையூறு உண்டாக்கியதும் ஒப்புக்கொண்டார்கள். தண்டியடிகள் சொன்னது போல் அவர் பார்வை பெற்று தாங்கள் பார்வை இழந்தால் ஊரை விட்டு வெளியேறிவிடுவதாக உறுதி கூறினார்கள். அரசன் அரண்மனை பெரியோர்களிடம் ஆலோசித்து  தண்டியடிகள் அடியாரை அழைத்து தாங்கள் விரும்புவது போலவே எம்பெருமானை வேண்டி கண் பார்வை பெற்று காட்டுவீராக என்று பயபக்தியுடன் கூறினான்.

தண்டியடிகள் நாயனாரும் அதற்கு இசைந்து குளத்தில் இறங்கி உள்ளத்தில் மனக்கண்ணில் நிறுத்தியிருக்கும் எம்பெருமானை அழைத்து ஐயனே நான் தங்களின் அடிமை என்பதை உலகறியச் செய்ய அருள்வீர்களாக என்று உருகி கேட்டார். எம்பெருமானின் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரி்த்தவாறு தலைமேல் கைகூப்பியவாறு நீரில் மூழ்கி எழுந்தார். எம்பெருமானின் அருளால் தண்டியடிகள் கண்பார்வையைப் பெற்றார். மனக்கண்ணில் தரிசித்த எம்பெருமானின்  வசிப்பிடமான திருக்கோபுரத்தைக்  கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

அரசனை வணங்கினார் தண்டியடிகள். தண்டியடிகள் பார்வை பெற்ற நேரம் அவர்களைச் சுற்றியிருந்த சமணர்கள் தங்கள் ஒளியை இழந்தார்கள். பார்வையற்ற நிலையை அடைந்தார்கள். தர்மம் தவறாமல் ஆட்சி செய்த அரசன் சமணர்களிடம் நீங்கள் கூறியபடி இந்த நாட்டை வெளியேறுங் கள் என்றார். கூடியிருந்த அமைச்சர் பெருமக்களிடமும் சமணர்களை விரட்ட கட்டளையிட்டார்.

தண்டியடிகள் செப்பனிட்ட குளத்தைச் சுற்றி பார்த்தார். எம்பெருமானை ஆலயத்தில் தரிசித்து மனம் குளிர்ந்தார். தண்டியடிகள் திருக்குளத்தை பெரியதாக கட்டிமுடிக்க அரசப்பெருமான் உதவி புரிந்தார். அடிகளாரின் பணியை  அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தார்கள். நாயனார் வாழும் வரை சிவத்தொண்டு புரிந்து   சிவனின் திருவடியை பணிந்தார்.

பங்குனி மாதம்  சதயம் நட்சத்திரத்தில் இவருக்கு குருபூஜை கொண்டாடப்படுகிறது.


newst.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP