இன்று சிவனை வழிபட்டால் பாவங்கள் மாயமாகும்!

புரட்டாசி மாத பவுர்ணமி நாளின் காலையில் சிவபெருமானை வழிபட்டால், முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும். பகல் வேளையில் ஈசனை வழிபாடு செய்தால், முற்பிறவி மட்டுமின்றி இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் கூட விலகும்.
 | 

இன்று சிவனை வழிபட்டால் பாவங்கள் மாயமாகும்!

புரட்டாசி மாதம் இறை வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்பது அனைவருக்கும் தெரியும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது உன்னத வாழ்வை அருளும் என்பது  தெரியும். 

அதே வேளையில் புரட்டாசியில் வரும் பவுர்ணமி நாளில், சிவபெருமானை வழிபடுவது பலவித பாவங்களைப் போக்கும். இதற்கு புராணத்தில் ஒரு கதை உள்ளது.  

கிருச்சமதர் என்ற முனிவர், விநாயகரை நோக்கி தவமிருந்து, சிவபெருமானைத் தவிர வேறு எவராலும் அழிக்க முடியாத ஒரு மகனை பெற்றார்.  மகனுக்கு பலி என பெயர் வைத்தார்.

தந்தையை போலவே, விநாயகரை நோக்கி தவமிருந்த பலி, ‘மூன்று உலகங்களையும் அடக்கியாளும் வல்லமையை தனக்கு தந்தருள வேண்டும்’ என்ற வரத்தைக் கேட்டான்.  

அந்த வரத்தை அவனுக்கு அளித்த விநாயகர், மேலும் பொன், வெள்ளி, இரும்பால் ஆன, மூன்று உலோக கோட்டையையும் கொடுத்து அருள்புரிந்தார்.

வரங்களை அளித்த விநாயகர், பலியை எச்சரிக்கை செய்யவும் தவறவில்லை. ‘நான் வழங்கிய வரங்களைக் கொண்டு, நீ தவறான பாதையில் சென்றால், சிவபெருமானின் திருக்கரத்தில் உள்ள கணை ஒன்றினால், உன்னுடைய கோட்டைகள் அழியும். நீ என்னுடைய பக்தன் என்பதாலும், சிவபெருமானால் சம்ஹாரம் செய்யப்படுவதாலும் உனக்கு மோட்சம் கிடைக்கும்’  என்றார். 

ஆணவமும், அதிகாரமும், பலியின் கண்களை மறைத்தது. தேவர்களையும், முனிவர்களையும், சித்ரவதை செய்தான். பலியிடமிருந்து தங்களை காப்பாற்ற, சிவபெருமானை வேண்டினர். 

சிவபெருமான், பலியுடன்  போரிட்டால் தானே, முனிவர்களைக் காப்பாற்ற முடியும். எனவே போருக்கு வழி செய்யும் வேலையை, விநாயகரே மேற்கொண்டார். அந்தணர் வேடம் பூண்ட விநாயகர், பலியிடம்  சென்று ‘திருக்கயிலையில் இருக்கும், சிந்தாமணி விநாயகரின் திருவுருவத்தை எனக்கு எடுத்துத் தர வேண்டும்’ என்று கேட்டார்.  பலி அதற்குச் சம்மதித்தான்.

பின்னர் தன்னுடைய தூதர்களை அனுப்பி, சிவபெருமானிடம் இருந்து சிந்தாமணி விநாயகர் உருவத்தைப் பெற்று வரும்படி அனுப்பினான். ஆனால் சிவபெருமான், விநாயகர் உருவத்தை தர மறுத்ததுடன், தன்னுடன் போரிட்டு அதை எடுத்துச் செல்லும்படி கூறினார். 

இதை அறிந்ததும், தன் படைகளுடன் சிவபெருமானிடம் போரிட வந்தான் பலி. அப்போது சிவபெருமான் தன்னுடைய திருக்கரத்தில் இருந்த கணை ஒன்றைக் கொண்டு அவனது மூன்று கோட்டைகளையும் அழித்தார். அந்தக் கணை, சிவபெருமானின் கையை வந்தடையும் முன்பாகவே,  சிவபெருமானின் திருவடியில் கலந்து வீடுபேறு பெற்றான் பலி.

அவ்வாறு பலி,  வீடுபேறு பெற்ற தினம், புரட்டாசி மாத பவுர்ணமி நாள் ஆகும். இந்த நாளில் ஈசனுக்கு விழா நடத்துவதாலும், அவரவர் ஆற்றலுக்கு ஏற்ப வழிபாடு செய்வதாலும், துன்பம்  நெருங்காது என்பது ஐதீகம். 

புரட்டாசி மாத பவுர்ணமி நாளின் காலையில் சிவபெருமானை வழிபட்டால், முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும். பகல் வேளையில் ஈசனை வழிபாடு செய்தால், முற்பிறவி மட்டுமின்றி இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் கூட விலகும். 

மாலை வேளை... அதாவது பிரதோஷ நேரத்தில், ஈசனை வழிபாடு செய்தால் அனைத்து பிறவிகளிலும் செய்த அனைத்து பாவங்கள் நீங்கும். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP