கடவுளைக் காட்ட முடியுமா?

ரமணாச்ரமத்தின் ஆரம்ப கால கட்டம். மாலை நேரம். மாத்ரூபூதேஸ்வரர் ஆலயத்தில் அப்போது இருந்த ஒரு சிறு கொட்டகையில் ரமணர் சில அடியார்களுடன் அமர்ந்திருந்தார். அவரது கையில் அவர் எழுதிய ஒரு நூலின் சில பாடல் குறிப்புகள் இருந்தன. நிறுத்தி, நிதானமாக ஒவ்வொரு அடியாகப் பாடி ஸ்ரீரமணர் பக்தர்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார்.
 | 

கடவுளைக் காட்ட முடியுமா?

ரமணாச்ரமத்தின் ஆரம்ப கால கட்டம்.  மாலை நேரம். மாத்ரூபூதேஸ்வரர் ஆலயத்தில் அப்போது இருந்த ஒரு சிறு கொட்டகையில் ரமணர் சில அடியார்களுடன் அமர்ந்திருந்தார். அவரது கையில் அவர் எழுதிய ஒரு நூலின் சில பாடல் குறிப்புகள் இருந்தன. நிறுத்தி, நிதானமாக ஒவ்வொரு அடியாகப் பாடி ஸ்ரீரமணர் பக்தர்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார்.

ஒரு பாடலைப் பாடிய அவர் விளக்கமாக, “கடவுளை நம் கண்களைக் கொண்டு காண முடியாது. நம் புலன்களைக் கொண்டும் உணர முடியாது. இதுவே – ‘கடவுளைப் பார்ப்பதென்பது, கடவுளாகவே ஆகி விடுதல்’ என்று கூறப்படுகிறது” என்றார்.உடனே, தண்டபாணி ஸ்வாமி என்னும் அடியவர் இடையில் குறுக்கிட்டு, “இதை பகவான் தன் சொந்த அனுபவத்தில் கூறுகிறாரோ?” என்று கேட்டார்.

உடனே பகவான். “இல்லையென்றால் சொல்லத் துணிவேனா?” என்றார். கேள்வி கேட்டவரும், மற்ற பக்தர்களும் பதில் பேசாமல் மௌனியாகினார்.

இதைத் தான் வேதங்களும், உபநிஷதங்களும் “அதுவே நான்”, ”நானே அது” “அகம் பிரம்மாஸ்மி” என்றெல்லாம் குறிப்பிடுகின்றன. ஆனால் பலர் இன்னும் தன்னைப் பற்றியும் ஆராயாமல், கடவுள் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவுமில்லாமல் ஏதேதோ பிதற்றி தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.தன்னை ஒரு பெரிய அறிவாளியாகவும், ரமணரை வெறும் சோம்பேறியாகச் சும்மா உட்கார்ந்து பொழுது போக்குகிறவருமாக நினைத்த இளைஞன் ஒருவன் ரமணாச்ரமத்திற்கு வந்தான். அங்கே எல்லாரும் ரமணர் திருவுரு முன் அமர்ந்து அமைதியான தியானத்தில் ஆழ்ந்திருந்தனர்.

அந்த அமைதியைக் குலைத்து, தனது மேதாவிலாசத்தை அனைவருக்கும் காண்பிக்க வேண்டும் என்று நினைத்த அந்த இளைஞன், சத்தமாக ரமணரை நோக்கி, ”’ஸ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தரிடம் கடவுளைக் காண்பிக்க என்னால் முடியும்’ என்று சொன்னார். அது போல உங்களால் கடவுளைக் காண்பிக்க முடியுமா?” என்று எகத்தாளமாகவும் கிண்டலாகவும் கேட்டான்.

அவனுக்கு ரமணரை எல்லோரது முன்னாலும் அவமானப்படுத்தி விட்டதாக ஒரு எண்ணம். கண்ணுக்கு முன்னால் கடவுள் என்ற மூலப் பிரகிருதியை நேருக்கு நேராகக் காண்பிக்க யாராலும் முடியாது என்ற எண்ணத்தால் மற்ற பக்தர்களும் பகவான் என்ன பதில் சொல்லப் போகிறாரோ என்று மிக்க ஆவலுடனும், பதற்றத்துடனும் காத்திருந்தனர்.

பகவான் ரமணர் மெல்ல, “கடவுளைக் காண்பிக்க வேண்டுமா? ஓ, தாராளமாகக் காண்பிக்கலாம். அது சரி கேட்பது யார் விவேகானந்தரா?” என்றார். அவ்வளவுதான். முகத்தில் அறைந்தது போல் உணர்ந்தான் அந்த இளைஞன். பகவானை அவமானப்படுத்த நினைத்த அவன், அவமானப்பட்டுப் போனான்.

யாரும், யாரையும் விமர்சிக்கலாம். கேள்விகள் கேட்கலாம். ஆனால் அதற்கு ஒரு தகுதி வேண்டும். ராமகிருஷ்ணரிடம் அதுவரை யாரும் கேட்காத – கடவுளைக் காண்பிக்க இயலுமா? – என்ற கேள்வியை சுவாமி விவேகானந்தர் கேட்டார். அவருக்கு அதற்கான தகுதியும், இறைவனைப் பற்றிய உண்மையான தேடலும், விழைவும் இருந்தது.ஆனால், ரமணரிடம் கேள்வி கேட்ட அந்த இளைஞனுக்கு அது இல்லை. ரமண மஹரிஷியை கேள்வி கேட்டு மடக்க வேண்டும் என்பதுதான் அவன் குறிக்கோள். ஆனால் பதில் சொல்ல முடியாமல் அவன் தான் அந்த இடத்தை விட்டு எழுந்து போனான்.

’தான்’ என்ற அகந்தை இருக்கும் வரை ஒருவரால் ஒருக்காலும் ஆண்டவனைப் பற்றி அறிய முடியாது” என்ற பகவான் ரமணர். ”முதலின் தான், தான் என்று தோன்றும் அந்த எண்ணத்தின் பிறப்பிடம் எது என்பதை அறிவாய். அதை அறிந்து கொண்டு விட்டால் பின்னர் எல்லாமே தாமே விளங்கும். பந்தத்தில் இருக்கும் நீ யார்?” என்ற கேள்வி கேட்டு, அதற்கான விடையை நீ அறிந்து கொண்டால், பின்னர் வேறு கேள்விகளே தோன்றாது. உனக்கு அந்நியமாய் ஏதும் இல்லை என்பதை நீயே உணர்வாய் ” என்று கடவுளைக் காண்பதற்கான வழி காட்டியுள்ளர் ஸ்ரீரமணர்.

வியாழன் குருவாரத்தில் ஞானம் தேடி பகவான் ஸ்ரீரமணர் திருப்பாதங்கள் சரணடைவோம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP