நாவடக்கம் தேவை

உணர்ச்சிவசப்பட்டு கொட்டப்படும் வார்த்தைகள் மீண்டும் திரும்ப பெற இயலாது. சில நேரங்களில் நாம் பிரயோகிக்கும் வார்த்தைகள் நம்மையே தாக்கிவிடக்கூடும் என்பதால் தான்

நாவடக்கம் தேவை
X

அதிகாலை நேரம். யமுனை நதிக்கரையில் காலவ முனிவர் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தார். அர்த்தியம் விடுவதற்காக புனித நீரை இரண்டு கைகளிலும் அள்ளி எடுத்தார். கண்ணனை நினைத்து கேசவம் தர்ப்பயாமி! நாராயணம் தர்ப்பயாமி என்று கண்களை மூடி பக்தியோடு அர்க்கிய மந்திரங்களை ஜபித்தார்.

கைகளில் இருந்த நீரில் ஏதோ ஒன்று வந்து விழுந்தது. கண் திறந்து பார்த்தார். எச்சில் தாம்பூலம் மிதந்தது. வெற்றிலையை மென்று இருந்த நீரில் துப்பியவர் யார் என்று ஆகாயத்தைப் பார்த்தார். புஷ்பக விமானத்தில் கர்ந்தர்வன் தன் மனைவியோடு உல்லாசமாக பறந்து கொண்டிருந் தான். காலவருக்கு கோபம் பொங்கியது.

கையிலெடுத்த புனித நீரை அசுத்தப்படுத்திவிட்ட கந்தர்வன் இன்று மாலை சூரிய அஸ்தமனத்துக்குள் தலை அறுபட்டு சாகட்டும் என்று சபித்த வர் மீண்டும் கைகளைச் சுத்தம் செய்து கிருஷ்ணா கிருஷ்ணா என்று அழைத்தப்படி அர்த்தியத்தை முடித்து நீரிலிருந்து வெளிப்பட்டார். நார தர், இதற்காகவே காத்திருந்தது போல் காலவ முனிவரை நெருங்கினார்.

காலவ முனிவரே...கந்தர்வன் தெரிந்து தவறு செய்யவில்லை. ஆனால் நீங்கள் சட்டென்று சபித்து விட்டீர்களே. கந்தர்வர்கள் இப்போதுதான் மேல் நோக்கி எழுகிறார்கள். தாங்கள் இப்படி செய்யலாமா? என்று கேட்டார். அவன் அர்த்தியம் செய்த போது எச்சிலை உமிழ்ந்தானே அது சரியா என்று கேட்டார் காலவ முனிவர்.

அது தவறு தான் முனிவரே ஆனால் அவன் அறிந்து செய்யவில்லை. அவன் உமிழ்ந்தது காற்றின் வேகத்தில் சரியாக உமது கரத்தில் விழுந்து விட்டது. அதற்கு சிறிய தண்டனை கொடுத்திருக்கலாம். ஆனால் அறியாமல் செய்த தவறுக்கு நீங்கள் அளித்த தண்டனையால் கந்தர்வர்களின் கோபங்கள் உங்கள் மீது திரும்பும். நீங்கள் கண்ணனிடம் சென்று கந்தவனை கொல்ல சொல்லுங்கள். அப்போதுதான் யாரும் உம் மீது கோபப்பட மாட்டார்கள் என்றார்.

காலவ முனிவர் துவாரகை சென்று கண்ணனை சந்தித்து நடந்ததைக் கூறி நான் உன் பக்தன் ஆயிற்றே. எனது வேண்டுதலுக்கு செவி சாய்க்க வேண்டும் என்றார். கண்ணனும் கந்தர்வனை கொல்ல ஒப்புக்கொண்டார். இடையில் நாரதர், கந்தர்வனை காணச்சென்றார். கண்ணன் கொல் கிறாரா என்று பதறிய கந்தர்வன் அழத்தொடங்கினான்.

அவனது மனைவியிடம் நாரதர் அர்ஜூனனது மனைவி சுபத்திரை உனக்கு தோழிதானே அவளிடம் சென்று உன் கணவனை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடு. ஆனால் கண்ணன் தான் கொல்லப்போகிறான் என்று முதலிலேயே சொல்லாதே என்றார்.

கந்தர்வனின் மனைவியும் சுபத்திரையின் காலில் விழுந்து தன் கணவனை காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடினாள். சுபத்திரை அர்ஜூனனிடம் அழைத்து சென்று நடந்ததைக் கூற அர்ஜூனனும் கொல்ல வருபவனிடமிருந்து உன் கணவரை மீட்கிறேன். யார் அது உன் கணவரைக் கொல்வேன் என்று சொல்வது என்று கேட்டான்.

கந்தர்வன் மனைவி அப்போதுதான் கண்ணன் என்ற பெயரைக் கூறினாள். இருவரும் விக்கித்து போனார்கள். ஆனால் கொடுத்த வாக்கை காப் பாற்ற வேண்டுமே என்று அர்ஜூனன் கந்தர்வனுக்காக கண்ணனை எதிர்த்து நின்றான். ஒருவர் மீது ஒருவர் விட்ட அம்புகள் மலர்மாலையாக மாறியது. நாரதர் திகைத்தார். விடுவிடுவென கண்ணனிடம் சென்றார். அர்ஜூனன் மீது எதற்கு வில் அம்பு. நேராக கந்தர்வன் மீது செலுத்து கண்ணா என்றார்.

கண்ணனும் நாரதர் கூறியபடி அம்பை கந்தர்வன் கழுத்தில் எய்தார் தலை தனியாக வந்து விழுந்தது. கந்தர்வனின் மனைவி அர்ஜூனனின் காலில் வீழ்ந்து கதறினாள். என்னவாயிற்று என் கணவரின் உயிரை காப்பேன் என்றீர்களே என்று அழுதாள். சிறிது நேரம் கழித்து நாரதர் கண்ணா காலவ முனிவர் உன் பக்தர் என்பதால் கந்தர்வனை கொன்றுவிட்டாய். ஆனால் அர்ஜூனனும் உனது பக்தன் தான் என்பதால் கந்தர்வனைக் காப்ப தும் உன் கடமை தான் என்றார்.

சற்றே யோசித்த கண்ணன் அதுவும் சரிதான் என்றபடி கந்தர்வனுக்கு உயிர் கொடுத்தார்.கந்தர்வனும் அவன் மனைவியும் கண்ணனிடமும், காலவ முனிவரிடமும், நாரதரிடமும், அர்ஜூனனிடமும் நன்றி தெரிவித்து வணங்கினார்கள். பக்தர்களைக் காப்பதில் வேறுபாடு பார்க்காத கண்ணனுக்கு பூமழை தூவி வாழ்த்தினார்கள்.

அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகளை எண்ணி சட்டென்று காலவ முனிவர் போன்று உணர்ச்சிவசப்பட்டு கொட்டப்படும் வார்த்தைகள் மீண்டும் திரும்ப பெற இயலாது. சில நேரங்களில் நாம் பிரயோகிக்கும் வார்த்தைகள் நம்மையே தாக்கிவிடக்கூடும் என்பதால் தான் நாவடக்கம் தேவை என்கிறார்கள் பெரியவர்கள்.

newstm.in

newstm.in

Next Story
Share it