காதால் கேட்பதும் பொய்...

கண்ணனுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி கர்ணனின் காதில் எதிர்மறையாக பேசி பேசி அவனுக்கு கோபத்தீ உண்டாக்கி ஆத்திரத்தில் அவன் மதியிழக்கும்படி செய்தான் சல்லியன்.

காதால் கேட்பதும் பொய்...
X

மனித உறுப்புகளில் காது என்பது மிக முக்கியமான உறுப்பு. இதை நெருப்புக்கும் ஒப்பாக சொல்லலாம். சரியாக உபயோகித்தால் நெருப்பின் பயனாக கேட்பதால் குளிர் காயலாம். சமைக்கலாம். ஊரையே கூட எரிக்கலாம். அல்லது தன்னைத்தானே கூட எரித்துக்கொள்ளலாம். இதற்கு உதாரணமாக மகாபாரதத்தில் இருவரைப் பற்றி சொல்லலாம். ஒருவர் கர்ணன், இன்னொருவர் அர்ஜுனன்.

போர்க்களத்தில் கண்ணன் தேரோட்டிய போது தேரில் அமர்ந்திருந்த அர்ஜூனன் கண்ணா கெளரவர்களின் படை முன்பு கொண்டு போய் நிறுத்து. அவர்களை கூண்டோடு கைலாசம் அனுப்ப மனம் துடிக்கிறது. விரைவில் ஆகட்டும் பாஞ்சாலியின் சபதத்தை முடிக்க காத்திருக்கிறேன் என்று கர்ஜித்தான். கண்ணனும் அதை ஆமோதித்தப்படி இரண்டு சேனைகளுக்கு நடுவில் கொண்டு போய் நிறுத்தினான்.அர்ஜூனன் ஆத்திரம் தீராமல் எதிர்திசையை நோக்கி வில் அம்பை எடுத்தான்.

கொள்ளுதாத்தா பீஷ்மர்,பெரிய சிறிய தகப்பனார்கள், குருவான துரோணர், மாமன்மார்கள்,சகோதரர்கள்,அவர்களது பிள்ளைகள் என எல்லாரும் எதிரிகளாக அல்லாமல் உறவினர்களாக இருந்ததைக் கண்டு சோர்ந்தான். அவனது அமைதியைக் கண்ட கண்ணன் என்னவாயிற்று அர்ஜூனா? ஏன் போர் புரியாமல் அமைதியாகிவிட்டாய் என்று கேட்டார்.

இல்லை! கண்ணா என்னால் போர் புரிய இயலாது. என்னுடைய உடல் உறுப்புகள் ஒத்துழைக்காது. என்னால் நிமிர்ந்து நின்று எதிர்க்க திராணி இல்லை. என் உடல் நடுங்குகிறது. சொந்த உறவினர்களைக் கொன்று நாட்டை பிடிப்பதால் ஆகக் கூடிய பயன் தான் என்ன? மகிழ்ச்சி தான் என்ன? இராஜ்ஜியங்களில் இன்பம் காண இவர்களைக் கொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு என் மனம் ஒத்துழைக்கவில்லை. என்னால் இயலாது என்று வில்லையும், அம்பையும் எறிந்து சோகமே உருவாய் அமர்ந்தான். கண்ணன் அமைதியாக அர்ஜூனனைப் பார்த்தான்.

முடித்துவிட்டாயா அர்ஜூனா இப்போது நான் சொல்வதை சற்றேனும் காது கொடுத்து கேள் என்று உபதேசித்துசொன்னதுதான் பகவத் கீதை. அர்ஜூனா உன் கடமையை செய்வதுதான் உன்னுடைய பணி. செய்த பணிக்கு பலனை எதிர்பார்க்கக் கூடாது. நீ இன்று உன் பணியை செய்ய வில்லைஎ ன்றால் உன் சந்ததிகள் உன்னை இகழ்வார்கள். போரில் நீ மாண்டுவிட்டாலும் உன் கடமை தவறாதது குறித்து உன்னை புகழ்வார்கள். உன்னை நீயேதான் வெல்ல வேண்டும்.உன்னை வெல்லாதவரை நீ முழுமனிதனாக ஆளாக மாட்டாய்.

இப்படி சோர்வுற்ற அர்ஜூனனை நேர் மறை கருத்துக்கள் சொல்லி தேற்றி போரில் ஈடுபட வைத்தான் கண்ணன். அதுமட்டுமல்லாமல் தனது புத்தி சாதுர்யத்தால் அர்ஜூனனுக்கு ஆபத்து நேர்ந்த போதெல்லாம் காப்பாற்றவும் செய்தான்.

அடுத்தது கர்ணன். சல்லியனின் எதிர்மறையான வார்த்தைகளைக் காதால் கேட்டு கெட்டதால் தான் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தான் கர்ணன். துரியோதனன் சூழ்ச்சி செய்து சல்லியனைக் கர்ணனுக்கு தேரோட்டியாக்கினான். இதனால் அதிர்ந்த சல்லியன் கண்ணனிடம் முறையாட கர்ணனின் வீரத்தைக் குறைத்து அவ்வப்போது பேசினாலே பாண்டவர்களுக்கு செய்யும் உதவி என்று கண்ணன் சல்லியனுக்கு கற்றுத்தந்தான்.

காதால் கேட்பதும் பொய்...

போரின் முதல் நாளே கர்ணனுக்கும் சல்லியனுக்கும் முரண்பாடு தொடங்கிவிட்டது. தேரோட்டியின் மகனுக்கு அரசனான நான் தேரோட்டுவதா என்ற சல்லியன் வார்த்தைகளால் கர்ணனின் வீரத்தை குறைக்கும்படி செய்தான். நீ வீரனாக இருந்தாலும் அர்ஜூனன் முன்னால் ஒன்றுமே யில்லை. எப்படியும் ஜெயிப்பது பாண்டவர்கள் தான் என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் கர்ணனிடம் சொல்லி வெறுப்பேற்றினான்.

தேவாதி தேவர்களையும் அசுரர்களையும் வென்றவன் என்று தற்பெருமை கொள்கிறாயே கர்ணா, அர்ஜூனன் விராட நகரில் ஆநிரைகளை மீட்டபோது ஓடி ஒளிந்தவன் நீ. கங்கை மைந்தனையும், துரோணரையும் வென்றவன் அர்ஜூனன் அதனால், உன் வீரமெல்லாம் அர்ஜூனனிடம் செல்லாது என்றான். இப்படியே கண்ணனுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி கர்ணனின் காதில் எதிர்மறையாக பேசி பேசி அவனுக்கு கோபத்தீ உண்டாக்கி ஆத்திரத்தில் அவன் மதியிழக்கும்படி செய்தான் சல்லியன்.

சல்லியனின் இத்தகைய எதிர்மறை வார்த்தைகளை காதில் கேட்டது கூட கர்ணனின் மரணத்துக்கு ஒரு காரணமே. அதனால் தான் கண்ணால் பார்ப்பதும் காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து செயலில் இறங்குவதே மெய் என்று சொன்னார்கள் போலும்.

newstm.in

newstm.in

Next Story
Share it