பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போல...
நல்லாருடன் ஒருவன் நட்பை கொண்டிருந்தால் அவன் கேடு மிக்கவனாக இருந்தாலும் நல்லவனாகவே மாறிவிடுவான். அதனால் தான் சேருமிடம் பார்த்து சேர் என்று பெரியோர்களும் கூறினார்கள்.
திருடன் ஒருவன் இருந்தான். ஒருமுறை மாந்தோட்டம் ஒன்று அவன் கண்ணில் பட்டது. கண்ணுக் கெட்டிய தூரம் வரை மாம்பழங்கள் இருந் தது.தோட்டக்காரன் இல்லாததால் அவன் அந்த மாம்பழங்களைப் பறித்து விற்கலாம் என்று திட்டமிட்டான். அதே போல் அன்று இரவு மூட்டை நிறைய பழங்களை எடுத்துக்கொண்டு சந்தையில் விற்றான். நல்ல இலாபம் கொழித்தது.
தொடர்ந்து ஒரு வாரம் அன்றாடம் தோட்டத்துக்கு செல்வதும் பழங்களைப் பறித்து விற்பதுமாக இருந்தான். பழங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது தோட்டக்காரர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. திருடனைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தோட்டம் முழுக்க சுற்றினார்கள். இரவு முழுவ தும் காவல் இருந்தார்கள். பரந்த தோட்டம் என்பதால் திருடனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
திருடனுக்கு மிகவும் உற்சாகமாகிவிட்டது. ஒரு நாள் இரவு இவன் பழங்களைப் பறித்து மூட்டையில் சேர்த்து கட்டிகொண்டிருந்தான். தோட்டக் காரர்கள் உலாவரும் சத்தத்தைக் காய்ந்த இலை சருகுகள் காட்டிக்கொடுத்தது. திருடன் உஷாராகிவிட்டான். சுற்றி முற்றி பார்த்தான். ஓரமாக காய்ந்த சருகுகள் எரிக்கப்பட்டு சாம்பல்கள் மிஞ்சியிருந்தது. அதை எடுத்து உடல் முழுக்க பூசிகொண்டான். பெரிய மரத்தின் அடியில் அமைதி யாக உட்கார்ந்துவிட்டான்.
தோட்டக்காரர்கள் அவனைப் பார்த்ததும் சாமியார் தான் இங்கிருக்கிறார். பழத்தைத் திருடியவன் எங்கோ ஓடிவிட்டான். இன்று முழுவதும் தோட்டத்தைச் சுற்றியபடி இருந்தால் அவன் மாட்டிக்கொள்வான் என்று பேசிக்கொண்டார்கள். அதைக் கேட்ட திருடன் இன்று முழுவதும் அசை யாமல் உட்கார்ந்துவிட வேண்டியதுதான் என்று அங்கேயே உட்கார்ந்துவிட்டான். தோட்டக்காரன் மூலமாக சாமியார் ஒருவர் வந்திருக்கிறார் என்னும் சேதி மக்களிடம் பரவியது.
மறுநாள் அதிகாலையிலேயே மக்கள் பழங்கள் சகிதம் அவனைத் தேடி வரத்தொடங்கினார்கள். அவர்களை ஆசிர்வதிப்பது போல் நடந்துகொண்ட திருடன் அவர்கள் கொடுத்த காணிக்கையையும் பெற்றுக்கொண்டான். நாளடைவில் கூட்டமாக மக்கள் வர தொடங்கினார்கள்.அவனிடம் மிகுந்த பக்தி கொண்டு அவனை வணங்கினார்கள். நாளடைவில் அவனுக்கே மனம் உறுத்தியது.
போலி வாழ்க்கை வாழும் போதே மக்களிடம் இவ்வளவு மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறதென்றால் உண்மையாகவே சாமியாராக மாறி விட் டால் நம் மீதான மதிப்பு அதிகரிக்குமே என்று நினைத்தான். மனதில் இருந்த அழுக்குகளை அப்புறப்படுத்தினான். வேதங்களையும், ஆன்மிக நூல் களையும் கற்று அறிந்தான். நாளடைவில் மக்களின் மனத்துயரை ஆறுதல் படுத்தும் பெரிய மகானாகிவிட்டான்.
அதனால் தான் உன் நண்பர் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன் என்று சொல்கிறார்கள். மனத்தில் நல்ல எண்ணங்களை விதைத்தாலும் நல்லதை நினைத்தாலும் நல்லவர்களோடு பழகினாலும் நாமும் மணப்போம். பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போல.
newstm.in
newstm.in