சாய்பாபாவை குருவாக ஏற்ற மேதாவி ஜவகர் அலி

சீரடியில், “ஜவகர் அலி” என்பவர் தன்னை மிகவும் அதிபுத்திசாலி என்று நினைப்பவர். மிகவும் தற்பெருமை கொண்டவர். மிகவும் படித்தவர். “குரானை “ மனப்பாடமாக கூறுவதில் வல்லவர். அனைவரிடமும் இனிமையாகவும் சாதுர்யமாகவும் பேசிக் கவர்வதில் வல்லவர்.

சாய்பாபாவை குருவாக ஏற்ற மேதாவி ஜவகர் அலி
X

சீரடியில், “ஜவகர் அலி” என்பவர் தன்னை மிகவும் அதிபுத்திசாலி என்று நினைப்பவர். மிகவும் தற்பெருமை கொண்டவர். மிகவும் படித்தவர். “குரானை “ மனப்பாடமாக கூறுவதில் வல்லவர். அனைவரிடமும் இனிமையாகவும் சாதுர்யமாகவும் பேசிக் கவர்வதில் வல்லவர். இது போன்ற வித்தைகள் தெரிந்த இவர் “ரஹாதா” என்ற இடத்தில் வீரபத்திரா் கோயில் அருகில் இருந்தார். அதன் அருகே முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக இடம் ஒன்றைக் கட்டியபோது ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து அங்கிருந்து பக்கத்தில் இருக்கும் ஷீரடிக்கு வந்து சேர்ந்தார் ஜவகர் அலி .

அங்கே “துவாரகா மயியில்” சாய்பாபாவுடன் தங்க ஆரம்பித்தார். ஆனால் சாய்பாபாவைப் பற்றி அவர் ஒன்றும் அறிந்திருக்கவில்லை. ஆகவே, “சாய்பாபாவை அங்குள்ள மக்களிடம் தன்னுடைய சீடன் என்று பெருமையாகச் சொல்லிவந்தார்”. இதனைக் கேட்டு இந்த சாய்பாபா கோபம் அடையவில்லை. மாறாக அவரின் சீடராக இருப்பதை ஏற்று கொண்டார். குருவிற்கு ஒரு சீடன் எப்படியெல்லாம் விசுவாசமாக இருந்து, அனைத்துக் காரியங்களும் செய்வானோ, அப்படியே ஜவகர் அலிக்கு அனைத்துப் பணிவிடைகளையும் செவ்வனே செய்து வந்தார் சாய்பாபா.

இது ஷீரடி மக்களுக்கு வருத்தத்தையும், கோபத்தையும் கொடுத்தது. எனினும் சாய்பாபாவிற்காகப் பொறுத்துக்கொண்டனர். சில நாட்களில் ரஹாதாவிற்கு புறப்பட்டார் குரு. அப்போது சாய்பாபாவையும் தன்னோடு அங்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டார். சாய்பாபாவும் அப்படியே சம்மதித்தார். ஜவகர் அலி செய்து வரும் பல்வேறு குற்றச் செயல்களை பற்றி ,சாய்பாபா நன்கு தெரிந்து வைத்திருந்தாலும், குருவிற்கு உண்டான மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

அப்புறம், அவ்வப்போது ஷீரடிக்கு சாய்பாபாவையும் அழைத்துக் கொண்டு அந்தப் போலி குரு வருவது வழக்கம். எனினும் நிரந்த இருப்பிடமாக ரஹாதாவே இருந்துவந்தது. இது ஷீரடி மக்களை மிகவும் கவலை கொள்ளச் செய்தது. ஒரு கட்டத்தில் அவர்களின் ஆத்திரம் முற்றியது .
'இனி மேல் பொறுப்பதற்கில்லை. ஒரு போலி மனிதன் சாய்பாபாவைத் தன் அடிமை போல் மாற்றி வைத்திருப்பதும், ஷீரடியில் அவரைத் தங்கவிடாமல், தங்களிடம் இருந்து பறித்துக் கொண்டு செல்ல முயல்வதையும் இனி மேலும் அனுமதிப்பதில்லை” என்று அவர்கள் தீர்க்கமான முடிவிற்கு வந்தார்கள் .

ஒட்டுமொத்தமாக அத்தனை பேரும் அப்போதே புறப்பட்டு ரஹாதரவிற்கு சென்றனர். சாய்பாபாவிடம் சென்று "தாங்கள் ஷீரடிக்கு வரவேண்டும்" என்று நிர்ப்பந்தம் செய்தார்கள். ஆனால், அவர்களிடம் சாய்பாபா, "தயவுசெய்து என்னை வற்புறுத்தாமல் இங்கிருந்து போய்விடுங்கள் வெளியே போயிருக்கும் குரு வரும் நேரம் இது. அவர் மிகவும் கோபக்காரா் .உங்கள் நடவடிக்கையைப் பார்த்தால் கடுமையாக நடந்துகொள்வார் " என்று வேண்டினார்.

ஆனால் அதற்குள்ளாகவே அங்கு ஜவகர் அலியும் வந்து விட்டார். ஷீரடி மக்களைப் பார்த்ததும் கடும் கோபம் கொண்டு கத்தினார். ஆனால் திரும்பிச் செல்ல மறுத்த அந்த மக்கள், அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு மேலும் வாதம் செய்தால் தனது போலித்தனம் வெளியே தெரிந்துவிடும் என்பதை உணர்ந்து கொண்ட ஜவகர் அலி, சாய்பாபாவுடன் மீண்டும் ஷீரடிக்கே திரும்பிச் செல்வது என்று முடிவெடுத்தார்விட்டார். அப்படியே ஷீரடிக்கும் திரும்பினார். எனினும் சாய்பாபாவைத் தனது சீடர் என்று சொல்லிக் கொண்டே தான் திரிந்தார் ஜவகர் அலி.

இது சாய்பாபாவின் பக்தர்களுக்குக் கோபத்தை வரவழைத்தது இதற்கு முடிவுகட்டத் திட்டமிட்டனர். தேவிதாசர் என்ற ஞானியின் முன் ஜவகர் அலியை நிறுத்தினர். தேவிதாசருக்கு சாய்பாபாவின் ஞானம் சக்தி எல்லாமே நன்கு தெரியும். அவர் ஜவகர் அலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வெறும் வாய் சாமர்த்தியத்தை மட்டும் வைத்துக் கொண்டு அனைவரையும் ஏமாற்றிவந்த அந்தப் போலி குருவால், தேவிதாசர் முன்னால் வாதம் செய்ய முடியாமல் போனது.

இதற்கு மேலும் இங்கிருந்தால் நிலைமை படுமோசமாகி விடும் என்று புரிந்து கொண்ட ஜவகர் அலி, அங்கிருந்து ஓட்டம் பிடித்து, வைஜாபுரி என்ற இடத்தில்போய் தன் லீலைகளை அரங்கேற்றத் தொடங்கினார். ஆனால், அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து ஜவகர் அலி ஷீரடிக்கு வந்து சாய்பாபாவின் பாதங்களில் வீழ்ந்து அவரை தனது குருவாக ஏற்றுக் கொண்டார்.

சாய்பாபாவை குருவாக ஏற்ற மேதாவி ஜவகர் அலி

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

Newstm.in

newstm.in

Next Story
Share it