Logo

துஷ்டனைக் கண்டால் தூர விலகு...

இங்குதான் தர்மத்தைக் கடைப்பிடிக்கும் தர்மவான்கள் சிந்தித்து செயல்படவேண்டும். அதர்மத்தை ஒழிக்க தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்று போர்க்கொடி தூக்குபவர்கள் உண்டு என்பது போலவே கொடியவர்களைக் கண்டால் விலகி போகும் மனோபாவம் கொண்டவர்களும் அதிகம் உண்டு...
 | 

துஷ்டனைக் கண்டால் தூர விலகு...

துஷ்டனைக் கண்டால் தூரவிலகு என்று சொல்வார்கள். இங்குதான் தர்மத்தைக் கடைப்பிடிக்கும் தர்மவான்கள் சிந்தித்து செயல்படவேண்டும். அதர்மத்தை ஒழிக்க தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்று போர்க்கொடி தூக்குபவர்கள் உண்டு என்பது போலவே கொடியவர்களைக் கண்டால் விலகி போகும் மனோபாவம் கொண்டவர்களும் அதிகம் உண்டு. அப்படி விலகிப்போகிறவர்களைத் தேடி சென்று வலிய வம்பிழுத்தால் அவர்க ளும் விலகிச்செல்லாமல் இயல்பு மாறாமல் போராடலாம் என்பதை உணர்த்தும் கதை.

ஒரு கிராமம் ஒன்று இருந்தது. அந்தக் கிராமத்துக்கு வருபவர்கள் எங்கு வந்தாலும் காட்டை தாண்டிதான் வரவேண்டியதாக இருக்கும். அப்படி வரும் வழியில் கொடிய மிருகங்களிடம் மாட்டி கொள்வதும் உண்டு. அந்தக் காட்டில் சிறுத்தை ஒன்று இருந்தது. மனிதர்களின் நடமாட்ட வாசம் கண்டால் விரைந்து சென்று அவர்களை கொன்றுவிடும். இது வழக்கமாக நடந்துவந்தது. இதனால் மக்கள் சிறுத்தையிடம் இருந்து தப்பிப்பதற் காக  வழியை மாற்றி ஆற்று நீரைக் கடந்து சென்று வந்தார்கள்.

ஒருமுறை  முனிவர் ஒருவர் அந்தக் காட்டுக்குள் தவம் செய்ய வந்தார். ஏற்கனவே தவவலிமை மிக்க அவர் மிருகங்களுடன் பேசும் சக்தியைக் கொண்டிருந்தார். மக்கள் அவரைத் தேடி சென்று நீங்கள் தான் மிருகங்களிடம் பேசுகிறீர்களே. எங்கள் குறையைத் தீர்த்து வையுங்கள் என்றார்கள். முனிவரும் அதற்கு சம்மதித்து உங்கள் குறையை சொல்லுங்கள். என்னால் இயன்றால் நிச்சயம் அதைச்  செய்கிறேன் என்றார்.

நாங்கள் காட்டுக்குள் வரும் போதெல்லாம் சிறுத்தை ஒன்று எங்களைக் குறிபார்த்து கொல்கிறது. இதனால் எங்களால் காட்டுக்குள் செல்ல முடிய வில்லை. ஆற்றை கடந்து செல்கிறோம். தாங்கள் தான் இதற்கு தீர்வு காண முடியும் என்றார்கள். முனிவர் தன்னுடய தவவலிமையால் உடனடி யாக சிறுத்தையை அழைத்தார். அவர்கள் முன்னிலையில் சிறுத்தையிடம் மனிதர்களைக் கொல்ல கூடாது என்று வாக்குறுதி வாங்கினார்.

சிறுத்தையும் முனிவருக்கு கட்டுப்பட்டு வாக்கு கொடுத்தது. அதன் பிறகு மக்கள் முனிவருக்கு நன்றி கூறி அவர் யாத்திரைக்கு விடை கொடுத் தார்கள். மக்களுக்கு அப்போதும் சிறுத்தை குறித்த அச்சம் நீங்கவில்லை. ஆனால் முனிவரின் மேல் நம்பிக்கை வைத்து மெதுவாக காட்டுக்குள் அடியெடுத்து வைத்தார்கள். அவர்களைக் கண்ட சிறுத்தை ஓரமாக ஒதுங்கியது. நாட்கள் சென்றது. யாத்திரை சென்ற முனிவர் திரும்பிவந்தார். வரும் வழியில் சிறுத்தையைக் கண்டார். சிறுத்தை சிறு நாய் போல் இருந்தது. என்னவாயிற்று. ஏன் இப்படி இளைத்து உடலெல்லாம் அடிபட்டு இருக்கிறாய் என்றார்.

நீங்கள்தானே என்னை யாரையும் கொல்லக்கூடாது என்று உத்தரவிட்டீர்கள். தங்கள் வார்த்தைக்கு கீழ்படிந்தேன் ஆனால் மக்கள் நான் சும்மா இருந்தாலும் தேடி வந்து என்னை துன்புறுத்தினார்கள். அடித்தார்கள். ஓட ஓட விரட்டி மகிழ்ந்தார்கள். பதிலுக்கு நான் எதுவும் செய்யவில்லை. உங்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றவே செய்தேன் என்றது. முனிவர் மெதுவாக சிறுத்தையைப் பார்த்து கூறினார்.

நான் உன்னை யாரையும் துன்புறுத்தக்கூடாது கொல்லக்கூடாது என்று சொன்னது உண்மைதான். உன் இயல்பு அது என்று தெரிந்தும் உன்னைக் கட்டுப்படுத்தி அவர்களுக்கு உதவி செய்தேன். ஆனால் அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாமல் உன்னை சீண்டி துன்புறுத்தினாலும் அமைதியாக இரு என்று சொல்லவில்லையே என்றார். மக்களை அழைத்து சீண்டாமல் ஒதுங்கிய சிறுத்தையை தேடிச்சென்று துன்புறுத்தினால் பதிலுக்கு அவையும் தன்னுடைய இயல்பை காண்பிக்க தொடங்கும்.

ஆனால் துஷ்டனைக் கண்டால் தூரவிலகு என்பது போல் உங்களைக் கண்டு விலகி மனிதர்களை விட மேன்மையானது என்று நிரூபித்திருக்கி றதே. குனிய குனிய குட்டும் குணம் மனிதர்களுக்கே உண்டு. அது எப்போதும் போகாது என்பதை நிரூபித்துவிட்டீர்களே என்றார். மக்கள் தலை கவிழ்ந்தார்கள்.

 
newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP