நாமே கடவுள்… சிக்கலின்றி சுதந்திரமாக வாழ்வோம்...

நாமே கடவுள்… சிக்கலின்றி சுதந்திரமாக வாழ்வோம்...

நாமே கடவுள்… சிக்கலின்றி சுதந்திரமாக வாழ்வோம்...
X

கடவுள் எங்கே இருக்கிறார். தூணிலும் துரும்பிலும் மட்டுமா இருக்கிறார். கடவுள் நம் இதயத்தில் இருக்கிறார். நம் ஆன்மாவில் இருக்கிறார். ஏன் நாமே கடவுள் தான். ஆனால் வாழ்க்கையை நல்லவிதமாக கடக்க தெரியாமல் சிக்கல்களிலிருந்து விடுபட தெரியாமல் மேலும் பல முடிச்சுகளைப் போட்டுக்கொண்டு ஆசை என்னும் அரக்கனிடம் அடிமைப்பட்டு இருக்கிறோம்..

முனிவர் ஒருவர் இருந்தார். சீடர்களுக்கு உபதேசம் செய்வதில் மிகுந்த திறமைமிக்கவர். ஒருநாள் காலை நேரம் முனிவரின் உபதேசத்திற்காக சீடர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். முனிவர் கையில் ஒரு துணியுடன் வந்தமர்ந்தார். எதுவும் பேசாமல் துணியை விரித்தார். அழகான வேலைப்பாடுள்ள அந்தத் துணியில் முடிச்சுகளைப் போட தொடங்கினார். இப்படியே ஒன்று... இரண்டு என்று ஐந்து ஆறு முடிச்சுகளைப் போட்டு சீடர்களைப் பார்த்தார்.

”இந்த முடிச்சுகளை அவிழ்க்கப்போகிறேன். அதற்கு முன்பு இரண்டு கேள்விகள் என்றார். சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. துணி எதற்கு? அதில் முடிச்சுகள் எதற்கு? என்று ஆச்சரியமாக நோக்கினார்கள். என்ன கேள்வி கேட்க போகிறார் என்று ஆர்வமாக இருந்தார்கள். முதலில் நான் விரித்து காண்பித்த துணியும், முடிச்சிட்ட பிறகான இந்தத் துணியும் ஒன்றா?” என்று கேட்டார்.

முனிவரின் சீடன் ஒருவன் எழுந்தான்.” ஒருவகையில் இரண்டும் ஒன்றுதான் சுவாமி. முன்னது முடிச்சின்றி சுதந்திரமாக இருந்தது. பின்னது முடிச்சுகளைக் கொண்டு சிக்கலாக இருக்கிறது. முடிச்சு விழுந்ததும் துணியின் சுதந்திரம் போய்விட்டது” என்றான். ”ஆமாம் நீ சொல்வது சரிதான். நாம் எல்லோருமே கடவுள்கள்தான். வாழ்க்கையைக் கடக்கும் போது முடிச்சுகளை போட்டு அவிழ்க்க முடியாத சிக்கலில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படுகிறோம். அடிமைப்படுகிறோம். தங்களுக்கான உலகை தனியாக உருவாக்கி சிக்கிவிடுகிறோம்” என்றவர் மீண்டும் ஒரு வினா எழுப்பினார்.

“இந்த முடிச்சுகளை அவிழ்க்க விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்” என்றார். மற்றொரு சீடன் எழுந்தான். ”சுவாமி.. நான் இதை அவிழ்க்க விரும்புகிறேன். ஆனால் இங்கிருந்து வந்து என்னால் அவிழ்க்க முடியாது. நான் உங்கள் அருகில் வந்து முடிச்சை கவனிக்க வேண்டும். அது எப்படி போடப்பட்டிருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். சேதாரமில்லாமல் அதை எடுக்க வேண்டும். அதில் கவனத்தோடு இருந்தால்தான் முடிச்சுகளை எளிமையாக எடுக்க முடியும். இல்லையென்றால் அவற்றை அவிழ்க்க முடியாமலே கூட போய்விடும்” என்றான்.

”உண்மை மகனே, நீ சொன்னது சரிதான். முடிச்சு என்பது நமது வாழ்க்கை போன்றது. கவனம் சிதறினால் சிக்கல்தான். நம்முடைய சிக்கலுக்கு நாம்தான் பொறுப்பு. நம்மை அறியாமல் நாம் போட்டிருக்கும் முடிச்சுகளில் சிக்கலை அவிழ்க்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறோம்” என்றார்.

உண்மைதானே.. நம் வாழ்வில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளுக்கும் நாம்தான் காரணகர்த்தாவாகிறோம். ஆழ்ந்து சிந்தித்து நம் வாழ்வை செதுக்கி கொள்ளும் உளிகள் நாம் என்பதால் சிக்கலின்றி சுதந்திரமாக வாழ்வோம்..

newstm.in

newstm.in

newstm.in

Next Story
Share it