தீபாவளி ஸ்பெஷல் - கங்கை கரையில் தீபாவளி

தீபாவளியில், மூன்று நாட்கள் கிடைக்கும் அன்னபூரணி தரிசனம் விசேஷமானது.ஈசனுக்கே உணவளிக்கும் அன்னை அன்னபூரணி தங்கக் கிண்ணமும் தங்கக் கரண்டியுமாகக் கொலுவில் அமர்ந்து வீற்றிருக்கிறாள்.

தீபாவளி ஸ்பெஷல் - கங்கை கரையில் தீபாவளி
X

"அன்னபூர்ணே சதாபூர்ணேசங்கரப்ராண வல்லபே!

ஞானவைராக்ய வித்யர்த்தம் பிட்சாம் தேஹி ச பார்வதி'

- ஆதிசங்கரர்.

"மக்கள் அஞ்ஞானத்தில் மூழ்கி உன்னிடம் உலக சம்பத்துகளையும் சுகங்களையும் வேண்டலாம். ஆனால், ஜகன்மாதாவான அன்னபூரணி! நீ உன் குழந்தைகளுக்கு முக்தியடைய உதவும் பேரறிவையும் வைராக்கியத்தையும் தந்து அருள்பாலிக்க வேண்டும் தாயே' என்று காசி அன்னபூரணியைத் துதித்துள்ளார் ஆதிசங்கரர்.

தீபாவளியன்று உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் வாழும் ஒவ்வொரு இல்லத்திலும் கங்கா ஸ்நானம் அனுஷ்டிக்கப்படும். நாடு, மாநிலம் , ஆறு, குளம், கிணறு வீட்டு குழாய்களில் வரும் தண்ணீரில் கங்கை நிலைத்திருக்கிறாள்.

காவிரியானாலும், தாமிரபரணியானாலும், கிருஷ்ணா நதியானாலும் தீபாவளி அன்று ஒரு நாள், கங்கையே அந்த இடங்களில் பிரவகிக்கிறாள் என்பதே ஐதீகம். தீபாவளிக்கும் கங்கைக்கும் உள்ள உறவு ஆழமானது, நம் பாபங்களைத் தீர்க்கும் புனிதமான ஜலம் என்ற சிறப்பு கங்கையின் நீருக்கு உண்டு.

தீபாவளி விடியற் பொழுதில் நம் மனதில் – உணர்வில் கங்கை பெருக்கெடுத்து ஓடுகிறாள். முக்தி தரும் புண்ணிய பூமியான காசியில் தீபாவளியன்று கங்கையிலேயே மெய்யாகவே நீராடி, காசி விஸ்வநாதரையும் , அன்னை விசாலாட்சியையும் அன்னபூரணியையும் தரிசிக்க நம் கண்களும் மனமும் நிறையும்.

பஞ்சகங்கா

காசியில் ஓடும் கங்கையில் யமுனை, சரஸ்வதி, தூத்பாபா, கீர்னா ஆகிய புண்ணிய நதிகளும் கலந்துள்ளதாகக் கருதப்படுகிறது. எனவே காசியில் ஓடும் கங்கையைப் "பஞ்சகங்கா' என்று அழைக்கிறார்கள். கங்கைக்கரை முழுவதும் தீப-ஆவளியை (தீபங்களின் வரிசை) கண்குளிர தரிசனமாக நாம் காண இயலும்.

மேலும் கங்கை நீரை கொண்டு வந்து, காசி விசுவநாதருக்கு அபிஷேகம் செய்து, கையால் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ளும் இறை அனுபவம் வாழ்நாள் முழுக்க நம்மிடம் நிலைத்திடும். அவிமுக்த க்ஷேத்திரமான காசி ஸ்தலத்தில் காசி விசுவநாதர் அவிமுக்தேசுவரராக விளங்குகிறார்.

காசி ஜோதிலிங்கம்.

தீபாவளி ஸ்பெஷல் - கங்கை கரையில் தீபாவளி

மகா விஷ்ணு, ஈசனை ஒளிவடிவமான லிங்க ரூபத்தில் வழிபட்ட காசி விசுவநாதர், காசி புண்ணிய பூமியில் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.காசியில் தீபாவளியன்று விசேஷமான அலங்காரங்களுடன் எழுந்தருளுகிறாள் அன்னபூரணி. காசி விசுவநாதர் ஆலயத்துக்கு இணையாக மிகச் சிறப்புடன் விளங்குகிறது அன்னபூரணி ஆலயம். அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களையும் செல்வங்களையும் அளிக்கும் தேவியானவள் அவள். உலகத்தில் மக்கள் எதனால் உயிர் வாழ்கிறார்களோ, எந்த சௌக்கியங்களை அடைய ஆசைப்படுகிறார்களோ- அவ்வளவையும் தரும் அன்னையாக அன்னபூரணி விளங்குகிறாள்.

அன்னபூரணிக்கு குபேர பூஜை

தீபாவளி ஸ்பெஷல் - கங்கை கரையில் தீபாவளி

தீபாவளியில், மூன்று நாட்கள் அன்னபூரணி தரிசனம் விசேஷமாக கிடைக்கிறது. அன்னபூரணியைப் பூஜை செய்து வழிபடும் முதல் நாள் தன திரயோதசி. அன்று தங்க அன்னபூரணிக்குப் பூஜைகள் உண்டு.ஆனால் முழு தரிசனம் கிடைக்காது. திரை போட்டு மறைத்து விடுகிறார்கள்.

அடுத்த நாள் சோடி தீபாவளி. அன்று தரிசனத்துக்காக சந்நிதியைத் திறந்து வைக்கிறார்கள். தீபாவளியன்று ஐசுவரியங்களை அளிக்கும் தேவியாக விளங்கும் அன்னபூரணிக்கு குபேர பூஜை நடக்கிறது. அடுத்த நாள் சகலவிதமான தன, தான்ய, சம்பத்துகளை அளிக்கும் தேவிக்கு லட்சுமி பூஜை நடைபெறுகிறது.

காசியின் எஜமானியாக விளங்கும் தேவியை அன்னம் அளிப்பவளாகவும், முக்தியைத் தருபவளாகவும், சகலசம்பத்துகளையும் அருளுபவளாகவும், வெற்றியை அளித்து வாழ்த்தும் மாதாவாகவும், கருணையின் வடிவமாக விளங்கும் உலகத் தாயாகவும் அவளை சித்தரித்து வழிபடுகிறார் சங்கரர். உலகத்தில் ஒரு மனிதன் அடையக் கூடிய சகல பாக்கியங்களையும் அடைந்து கரை கண்ட அவதார புருஷரான சங்கரரே அன்னையிடம் பிச்சை கேட்கிறார்.

தீபாவளி ஸ்பெஷல் - கங்கை கரையில் தீபாவளி

ஈசனுக்கே உணவளிக்கும் அன்னை அன்னபூரணி தங்கக் கிண்ணமும் தங்கக் கரண்டியுமாகக் கொலுவில் வீற்றிருக்கிறாள். உலகத்தை ஆளும் எம்பெருமான் அங்கே பிச்சை கேட்டு, உலகத்தாரில் முதல்வனாய் உணவருந்த, திருவோடு ஏந்தி நிற்கும் காட்சியைக் காண்கிறோம்.

ஆலகாலத்தையும் அமுதமாய் விழுங்கிய எம்பிரானுக்கு அப்படி ஓர் எளிய தோற்றமா? அத்தனை பசியா? "உலகக் குழந்தைகளைக் காப்பாற்று; அதற்கு ஒரு பாவனையாக எனக்கு உணவு கொடு!' என்று கேட்கிறார் கைலாசபதி.அன்னபூரணியின் இருபுறமும் ஸ்ரீதேவியும் பூதேவியும் தங்கத்தில் செய்த விக்கிரகங்களாகத் தரிசனம் தருகிறார்கள்.

அந்தத் தோற்றம், கையை உயர்த்தி அபயமளித்து ஆசீர்வாதம் கூறும் விதமாகவே இருக்கிறது. லட்டுகளால் செய்த தேரில் அன்னை பவனி வருகிறாள். அந்த இனிப்பையே பிரசாதமாகவும் வழங்குகிறார்கள். பக்தர்கள் அன்னபூரணிக்கு காணிக்கையாக ரூபாய் நோட்டுகளை மழைபோலப் பொழிகிறார்கள்.

காசி அன்னபூரணி ஆலயத்தில் அன்னம் மலைபோலக் குவித்து வைக்கப்படுகிறது. வகை வகையான இனிய பணியாரங்கள் குவியல் குவியலாக வைக்கப்படுகின்றன. தீபாவளித் திருநாளை கங்கைக்கரையில் காசி புண்ணிய பூமியில் கொண்டாடி மகிழ்வோம். காசி விஸ்வநாதர், அன்னை விசாலாட்சி , அன்னபூரணி அருள் பெறுவோம்.

newstm.in

Tags:
Next Story
Share it