எல்லாவற்றையும் துறந்தால் ஞானி ஆகலாமா?

எல்லாவற்றையும் துறந்தால் ஞானி ஆகலாமா?

எல்லாவற்றையும் துறந்தால் ஞானி ஆகலாமா?
X

தர்மபுரி என்னும் ஊரை புருஷோத்தமன் என்னும் அரசன் ஆண்டு கொண்டிருந்தான். தர்ம வழியில் நீதிநெறி தவறாமல் ஆட்சி செய்து கொண்டிருந்ததால் மக்கள் துன்பமின்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். அரசனுக்கு ஏற்றது போல் அரசி மீனலோசினியும் மக்களிடம் அன்பாக இருந்தாள். அரண்மனைக்கு தேடிவரும் ஞானிகளையும், ரிஷிகளையும் அன்பாக உபசரித்து அனுப்பினார்கள் அரசனும், அரசியும்….

ஒருமுறை அரண்மனைக்கு வந்திருந்த ஞானியைக் கண்டு ராணிக்கும் துறவறம் மேற்கொள்ளும் ஆசை வந்தது. ”நானும் உங்களைப் போன்று ஞானியாக விரும்புகிறேன். எனக்கு அறிவுரை கூறுங்களேன்” என்றாள் அரசி. ”துறவறம் என்பதை கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதல்ல மகளே.. ஆண்களே பெரும் பிரயத்தனம் செய்து இந்நிலைக்கு வரும்போது பெண்கள் அலைபாயும் மனதை அடக்கி ஆள்வது கடும் சிரமம் தாயே… உங்களது சிறப்பான ஆட்சியில் மக்களும் மகிழ்வாக இருக்கிறார்களே.. பிறகு ஏன் உனக்கு இந்த ஆசை” என்றார். ”இல்லை வாழ்க்கையில் எல்லா பேறுகளும் பெற்றிருந்தாலும் இறுதியில் இறைவனிடம் ஐக்கியமாகிவிடுகிறோம். எனக்கு வாழ்க்கையின் மீதிருந்த நாட்டம் குறைந்துவருகிறது, தாங்கள் துறவறத்துக்கு வழிகாட்டுங்கள். என்னால் முடிகிறதா என்பதைப் பிறகு பார்க்கலாம்” என்றாள் அரசி…. ”துறவறம் போவதற்கு பெரிய ஆலோசனையெல்லாம் தேவையல்ல மகளே…. அனைத்தையும் துறந்தாலே போதும்….” என்றபடி ஞானிகள் விடைபெற்றார்கள்.

அரசிக்கு துறவறம் மேற்கொள்ளும் சிந்தனையே ஓங்கியிருந்தது. அரசனிடம் சென்று தன் விருப்பத்தைத் தெரிவித்தாள். ”எப்பொழுது துறவறம் என்னும் ஆசை உன் மனதில் எழுந்ததோ அப்போதே நீ இல்வாழ்க்கைக்கு தகுதியற்றவளாக ஆகிவிட்டாய். உன் விருப்பப்படி செல்லலாம்” என்று வழியனுப்பி வைத்தான். அரசி அனைத்தையும் துறந்து சிறந்த ஞானியாகிவிட்டாள். கூடு விட்டு கூடு மாறும் வித்தைகள் கூட அவளுக்கு எளிதாயிற்று….

ஒருநாள் அரசர் ஞானியாக மாறிவிட்ட அரசியைச் சந்தித்தார். அவருக்கும் துறவறம் மேற்கொள்ளும் ஆசைவந்தது. ஞானியிடம் கேட்டார் ”அனைத்தையும் துறந்தால் ஞானி ஆகலாம்” என்றாள். ”சரி என்று அரசரும் நாட்டை மக்களிடம் விட்டுவிட்டு காட்டில் வாழ்ந்தார். தவம் புரிந்தார். ஆனாலும் மனதில் அமைதியில்லாமல் திரிந்தார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஞானியைச்(அரசி) சந்தித்தார். “மனம் அமைதியில்லாமல் இருக்கிறதே. துறவறத்தில் கவனம் செலுத்தமுடியவில்லை” என்றார். ”அனைத்தையும் துறக்க வேண்டும் என்று சொன்னேனே.. நாட்டை மட்டும் துறந்தால் போதுமா..” என்றாள் ஞானி. எனக்குச் சொந்தமான அனைத்து செல்வங்களையும் துறந்துவிட்டேனே.. என்றான் அரசன்.. சிறிதுநேரம் கழித்து என் உடல் ஒன்று தான் மிச்சம் இருக்கிறது. இதையும் நெருப்புக்கு இரையாக்கிறேன் என்றவனைத் தடுத்து நிறுத்தியது ஞானியின் குரல்.. என் உடல் என்கிறாயே.. உன் உடல் பஞ்சபூதங்களுக்கு அல்லவா சொந்தம்.. துறவறம் என்னும்போதே எதுவும் உன்னுடையதல்ல என்பதுதானே உண்மை… இதில் என் நாடு… என் உடல்.. என்று நான்… எனது…. என்ற எண்ணம் இருக்கும் வரை நீ ஞானியாக இருக்க முடியாது” என்றபடி பறந்து விட்டாள்.

அப்படிதான் நமது வாழ்க்கையும் நான், எனது என்று சுயநலமாக வாழும் வரை இறைவனும் நமக்கு எட்டாத தொலைவில் இருப்பான்.

Next Story
Share it