Logo

இறந்தவர் வீட்டில் சுபகாரியங்கள் செய்யலாமா?

சில சம்பிரதாயங்கள் இன்ன காரணத்தினால் தான் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதற்கு உரிய விளக்கம் இன்னும் பெறமுடியவில்லை. மாறாக ஆன்றோர்களும், ஆன்மிக பெரியோர்களும் சொல்வதை தான் கடைப்பிடித்து வருகிறோம்.
 | 

இறந்தவர் வீட்டில் சுபகாரியங்கள் செய்யலாமா?

சம்பிரதாயங்களும் சடங்குகளும் இந்துமதத்தில் அதிகம் இருந்தாலும் எல்லாமே அறிவியல் ரீதியிலாக பார்க்கும் போது ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவையே. பல நேரங்களில் பல சடங்குகளுக்கு விஞ்ஞானப் பூர்வமான விளக்கமும் ஒத்துப்போயிருப்பதைக் கண்கூடாகவே பலரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் சில சம்பிரதாயங்கள் இன்ன காரணத்தினால் தான் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதற்கு உரிய விளக்கம் இன்னும் பெறமுடியவில்லை. மாறாக ஆன்றோர்களும், ஆன்மிக  பெரியோர்களும் சொல்வதை தான் கடைப்பிடித்து வருகிறோம். அவற்றுள்  முக்கியமான ஒன்று, இறந்தவர் வீட்டில் சுபகாரியங்களைச் செய்யக் கூடாது என்பது.

வீட்டில்  ஒரு துக்ககரமான சம்பவம் நிகழ்ந்துவிட்டால் நடக்கவிருக்கும் மங்களகரமான நிகழ்ச்சியைத் தள்ளிப்போடுவது வழக்கம். குழந்தைக்கு மொட்டை அடித்தல், காது குத்துதல், புதுமனை புகுவிழா போன்ற சுப நிகழ்ச்சிகளை நிச்சயம் ஒருவருடம் வரை தள்ளி வைக்க வேண்டும். இறந்த வருக்கு முதல் திதி அதாவது தலை திவசம் கொடுத்த பிறகு கோயிலுக்கு சென்று தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து விட்டு அதன் பிறகு சுப நிகழ்வுகளை தொடங்க வேண்டும். இப்படித்தான் வழி வழியாக இந்துக்கள் செய்து வருகிறார்கள் கடைப்பிடித்தும் வருகிறார்கள்.

ஆனால் எல்லா சுபகாரியங்களுக்கும் இடைவெளி என்று சொல்லும் இந்துமத சாஸ்திரம் திருமண நிகழ்வுக்கு மட்டும் தோஷமில்லை என்றே சொல்கிறது. இந்துமத சாஸ்திரத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட வீட்டில் திருமணத்தேதிக்கு முன்பு எதிர்பாராமல் அக்குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் சுப நிகழ்ச்சிகயைத் தள்ளிப்போடாமல் நடத்தி வைக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி நடக்கும் திருமணங்கள் தம்பதி யரை எந்த விதத்திலும் பாதிப்புக்குள்ளாக்காது என்றும் சொல்கிறது.

திருமணத்தேதி நெருங்கும் 15 நாட்களுக்குள்  துக்க சம்பவம் நிகழ்ந்தால் நிச்சயம் திருமணத்தேதியை தள்ளி வைக்கவேண்டும். பிறகு நல்ல நாள் பார்த்து திருமணம் நடத்தலாம்.  குடும்பத்தில் திருமண வயதுக்குரிய பெண் பிள்ளைகள் இருந்தால் வீட்டில் இறப்பு நடந்த ஒரு வருடத்துக்குள் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்றும் சாஸ்திரம் கூறுகிறது.

இறந்தவருக்கு கொள்ளி வைத்த மகன் தலைதிவசம் கொடுக்க வேண்டும். மகனுக்கு திருமண வயதாக இருந்தால் மகனும் ஒருவருடத்துக்குள் திருமணம் செய்துகொள்ள சாஸ்திரம் அனுமதிக்கிறது.பஞ்சாங்கங்கள் ஒருவர் இறந்த பின் தள்ளி வைக்க வேண்டிய சுபகாரியங்கள் பற்றியும் உறவுகளுக்கு உண்டாகும் தீட்டு பற்றியும் குறிப்பிட்டுள்ளன.இவற்றை மட்டும் நாம் கடைப்பிடித்து வருகிறோம். 

ஒருவர் இறந்த காலத்தைக் கொண்டு இன்னும் கூட அதிக சடங்குகள் உண்டு.  இறந்த நேரத்தில் வரும் சில அசுப நட்சத்திரங்களுக்கும் தோஷம் உண்டு. அவிட்டம் முதல் ரேவதி வரையிலான ஐந்து நட்சத்திரங்களும் தனிஷ்டா பஞ்சமி என்று அழைக்கப்படுகின்றது. இந்த நட்சத்திரத்தின் போது ஒருவர் இறந்தால்  அவர் வீடு மூடியிருக்கவேண்டும் என்றும் பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது. அதே நேரம் இவ்வளவு தீவிரமாக யாரும் சம்பிரதாயம் கடைப்பிடிப்பதில்லை என்பதும் இத்தருணத்தில் குறிப்பிடவேண்டும்.

பொதுவாகவே குடும்பத்தில் இத்தகைய இழப்பை சந்திக்கும் போது மன ரீதியாக சுபநிகழ்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள முடியாது என்பதே உண்மை. அதனால் தான் துக்க வீடுகளில் துக்கங்கள் ஆறுவதற்கு குறிப்பிட்ட காலம் இடைவெளி  வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள் சடங்குகளை  நம்பாதவர்கள். அதே நேரம் இருமனம் இணையும்  திருமண நிகழ்வுகள் குடும்ப உறவுகள் தாண்டி சுற்றத்தையும் கூடி நடத்துவ தால் தடையின்றி திருமண வைபோகம் நடத்தப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

இறந்தவர் வீட்டில் சுப நிகழ்வுகளுக்கு ஒரு வருட இடைவெளி தேவை என்றாலும் திருமணம் செய்வதற்கு மட்டும் எவ்வித தடையுமில்லை என்பதையே இந்துமத சாஸ்திரமும் வலியுறுத்துகிறது. 


newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP