பாபா தேடிய நைவேத்யம் !!

பாபா தேடிய நைவேத்யம் !!

பாபா தேடிய நைவேத்யம் !!
X

பாந்த்ராவைச் சேர்ந்த பாபாசாஹேப் தர்கட் என்பவர் சாய்பாபாவின் சிறந்த பக்தர். அவர் மனைவியும் மகனும் அவரை விட அதிக அளவு சாயிபாபாவிடம் அன்பும் ஈடுபாடும் பக்தியும் கொண்டிருந்தனர். தர்கட்டின் மகன் நாள் தவறாமல் சாய்பாபாவுக்கு முறைப்படி பூஜைகளைச் செய்வது வழக்கம்.
ஒருமுறை மே மாத விடுமுறைக்கு தர்கட்டின் மனைவியும் அவர்களின் மகனும் ஷீரடிக்குச் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. வேலைக்குச் செல்ல வேலை வேண்டி இருந்ததால் தர்கட், அவர்களுடன் செல்ல முடியவில்லை. தான் வீட்டில் இல்லாதபோது சாயி பூஜையை முறைப்படி செய்ய யாருமே இல்லை என்பதால் அவர் மகன் ஷீரடி செல்ல மறுத்து விட்டான். அவன் செய்வதைப் போலவே தானும் பூஜை செய்வதாக உறுதி கூறினார் தர்கட்.

தந்தையின் வாக்குறுதியால் மனம் மாறிய மகனும், தாயும் ஒரு வெள்ளிக்கிழமை இரவு ஷீரடி புறப்பட்டனர். மறுநாள் சனிக்கிழமையும், அதற்கடுத்த ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களிலும் அதிகாலையில் எழுந்து நீராடிய தர்கட் பூஜை செய்து நைவேத்தியமாக கற்கண்டுக் கட்டிகளைப் படைத்தார். அந்தப் பிரசாதம் மதிய உணவின்போது உட்கொள்ளப்படுவது வழக்கம். செவ்வாயன்று பூஜை செய்த தர்கட் அவசரமாக வேலைக்குக் செல்ல வேண்டி இருந்ததால் நைவேத்தியம் படைக்க மறந்து போனார். பகல் உணவுவின்போது பிரசாதம் இல்லாததைக் கண்டதும் தனது தவறைஉணர்ந்து சாய்பாபாவிடம் மன்னிப்பு கேட்டார்.

தனக்கு நினைவுபடுத்தாதற்கு சாய்பாபாவையும் அவர் உரிமையாகக் கடிந்து கொண்டார். நடந்தவற்றை விளக்கி மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார். சாய்பாபாவின் பாதத்தில் வைத்துவிட்டு அதை மகனுக்கு அனுப்பினார்.

அதே நேரம்-ஷீரடியில் மதிய தீபாராதனைக்கு முன்பு தர்கட்டின் மனைவிடம், சாய்பாபா, "பாந்த்ராவில் உன் வீட்டுக்குச் சென்று, பூட்டப்பட்ட கதவு வழியாக உள்ளே போய்ப் பார்த்தேன். உன் கணவர் நான் உண்பதற்கு எதையும் வைத்திருக்கவில்லை. பசி ஆறாமல் வந்தவிட்டேன்!" என்று கூறினார்..
தந்தையின் பூஜையில் ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட மகன் சாய்பாபாவிடம் வீடு திரும்ப அனுமதி கேட்டான். ஊருக்குப் போக அனுமதி மறுத்த சாய்பாபா, அவனை அங்கு தனக்கு பூஜை செய்ய மட்டும் அனுமதித்தார்.பூஜையில் கவனமாக இருக்குமாறு தந்தைக்கு அவன் கடிதம் ஒன்று எழுதினான். இரு கடிதங்களும் ஒன்றை ஒன்று கடந்து அடுத்த நாள் இருவருக்கும் கிடைத்தன.

நம்பிக்கையுடன் படைக்கப்படும் எந்த நைவைத்தியமும் கடவுளால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்ற உண்மையை இந்த லீலையின் மூலம் சாய்பாபா உலகுக்கு உணர்த்தினார்.

ஆன்மீக எழுத்தாளர்
Dr.V.ராமசுந்தரம்.

Next Story
Share it