காரிருளை பிரகாசமாக்கிய அபிராமி அந்தாதி!

காரிருளை பிரகாசமாக்கிய அபிராமி அந்தாதி!

காரிருளை பிரகாசமாக்கிய அபிராமி அந்தாதி!
X

இன்று தை அமாவாசை. அன்னை அபிராமி, தனது பக்தனுக்கு தாயாகி கருணை காட்டி முழு மதியாக நிலவு வந்த அதிசயத்தை நிகழ்த்திய திருநாள். அபிராமி பட்டர் என்று பின்னாளில் அறியப்பட்ட சுப்பிரமணியன், அபிராமி அம்மையின் மேல் பெரும் பக்தி கொண்டு இருந்தார். தமிழ் மற்றும் வடமொழி இரண்டிலும் ஆன்மிக விஷயங்களிலும் ஆழமாக தேர்ச்சி பெற்றதால் பட்டர் என்று அழைக்கப்பட்டார் .

சுப்பிரமணியனுக்கு பார்க்கும் இடமெல்லாம் அன்னையே தென்பட்டாள். அந்த ஊரில் பலருக்கும் சுப்பிரமணியன் கிறுக்காகவே தென்பட்டார். குறுக்கு புத்தி நபர்களுக்கு பக்தி சுப்பிரமணியன் கிறுக்காக தெரிந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை. சரபோஜி மன்னர் தை அமாவாசையன்று திருக்கடவூர் கோயிலுக்கு வந்தார். அப்போது திருக்கோயிலில் நிஷ்டையிலிருந்தார் சுப்பிரமணியன். சரபோஜி மன்னர், சுப்பிரமணியனை நோக்கி 'இன்று என்ன திதி?` என்று கேட்டார்.

அன்னை அபிராமியின் முழுநிலவு போன்ற திருமுகத்தையே மனக்கண்ணால் கண்டுகொண்டிருந்த அவர், தை அமாவாசையைப் பௌர்ணமி திதி என்று சொல்லிவிட்டார். உடனே அரசன் உனக்கு இது "மதிகெட்ட தினம்" என்று பட்டரை நோக்கி சிலேடையாகக் கூறி இன்று நீர் முழு நிலவை காட்டக் கூடுமோ? என்று சினத்துடன் கூறினார். இதற்கு உடன்பட்டார் பட்டர். ஆனாலும் கோபப்பட்ட மன்னர், ஒருவேளை முழு நிலவு தெரியாவிட்டால் சிரச்சேதம் நிச்சயம் என்றார். அபிராமியின் அருளாசி பெற்ற பட்டரோ அச்சமில்லை அச்சமில்லை என்று புன்முறுவலோடு இந்த சவாலை ஏற்றார்.

சரபோஜி மன்னரின் கட்டளைப்படி சிறையிலிருந்து அக்னி குண்டம் அமைத்து அதன் மேல் நிறுவிய சங்கிலித் தொடரில் 100 பலகைகள் கொண்ட ஊஞ்சலை அமைத்து அதில் அமர்ந்து அபிராமி அந்தாதியை துவக்கினார் பின்னாளில் அபிராமி பட்டரான சுப்பிரமணியன். ஒவ்வொரு பாடல் முடிந்ததும் ஒரு கயிற்றை சிப்பாய்கள் அறுத்தனர் .

100வது பாடல் முடிந்ததும் நிலவு வராவிட்டால், நூறு கயிரும் அறுக்கப்படும். பட்டரும் அடியில் எரியும் தீயில் விழுந்து உயிரை இழக்க வேண்டும். இதுவே மன்னரின் உத்தரவு.

உயிர் பயம் ஏதுமின்றி முதல் பாடலை ஆரம்பித்தார்...

“உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை

துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன

விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே.”

முதல் பாடலை கேட்டவர் மனம் சிலிர்த்தது. ஆன்மிக அற்புதம் ஒன்றுக்கு சாட்சியாக இருக்கும் பாக்கியம் பெற்றவர்கள் அவர்கள். அபிராமிஅந்தாதி இப்படி ஒரு சுழலில் மிக உருக்கமாக உருவானது. 100 பாடல்கள் பாடி முடிக்கும் முன் அமாவாசை முழு இருட்டு காணாமல் போய் வானம் விழித்தது. நிலவின் வெளிச்சம் திருக்கடவூரை நிறைத்தது. முழுமதியாக காட்சி தந்த அன்னை, தன்னை போற்றி பாடிய அந்தாதியை ஏற்றுக் கொண்டு சுப்பிரமணியனை அபிராமி பட்டராக மாற்றி அற்புதம் நிகழ்த்திய நாள் இந்த தை அமாவாசை.

Next Story
Share it